கேள்வி 1: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் முற்றாக மாநில அரசை பல்கலைக்கழகங்களின் மானியக் குழு அப்புறப்படுத்தும் நிலையில் மாநில கட்சிகளான தெலுங்கு தேசமும், அய்க்கிய ஜனதா தளமும் எதிர்க்கவில்லையே?
– ரவீந்திரன், ஊற்றங்கரை
பதில் 1: அவர்களுக்கு அவ்வப்போது நிதி என்ற தூண்டில் – அதில் தொங்கும் ஈர்ப்பு கிடைத்து வருகிறதே! எனவே, இதன் பலன் பிறகு எப்படி – மக்களால் ஒதுக்கப்படும் ஆபத்து உருவாகி வருகிறது என்பதை ‘ஜால்ரா’ தட்டும் கட்சிகளுக்கு இப்போது புரியாது!
– – – – –
கேள்வி 2: தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப் பேரவையின் மாண்பையும் அவமதிக்கும் ஆளுநருக்கு எதிராக எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் திரளாமல் தடுப்பது எது ?
– த.மணிமேகலை, வீராபுரம்
பதில் 2: பதவி ஆசை அரசியல் பார்வை! தத்துவங்களை மறந்த தன்னலம்!
– – – – –
கேள்வி 3: கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் ரூ.16.11 லட்சம் கோடிகளை தொழிலதிபர்களுக்கு வாரித் தந்ததோடு கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளனவே, இதை எதிர்த்து பெரிதாக எந்த கிளர்ச்சியும் நடந்ததாக தெரியவில்லையே ஏன்?
– கலையரசன் கண்ணபிரான், கோவர்த்தனகிரி
பதில் 3: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மேலும் தேவை என்பதற்கான சாட்சியமே தங்கள் கேள்வி!
– – – – –
கேள்வி 4: சிலர் “இயற்கை வழி வாழ்வியலாளர்கள் கூட்டமைப்பு” என்று ஓர் அமைப்பை உருவாக்கி அவர்கள் மூலம் வீடுகளில் சுகப்பிரசவம் செய்து கொள்ள அனுமதி வேண்டும் என்று கேட்கிறார்களே?
– உ. விஜய், சோழங்குறிச்சி
பதில் 4: ஆபத்தான – அறிவியலுக்கு எதிரான சிந்தனைகள். முன்கால இழப்புகளை எண்ணினால் தற்கால இழப்பு குறைவு என்பதே அதற்கான சரியான ஆதார விடையாகும்.
– – – – –
கேள்வி 5: அரசுப் பள்ளிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகள் தத்தெடுத்து உதவுவது என்பது சரியானதா?
– தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை
பதில் 5: சரியானதல்ல; மாறாக சரியாக நடக்காத தனியார் பள்ளிகளை மூடாமல், அரசே எடுத்து அரசுப் பள்ளியாக்கி நடத்தியதே (விரும்பத்தக்க) பழைய வரலாறு. முடிவை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மறு சீரமைப்பு செய்தல் அவசியம்! அவசரம்!
– – – – –
கேள்வி 6: தனியார் பள்ளிகளில் கோ பூஜை, பாத பூஜை போன்ற மூடநம்பிக்கைகளை மாணவர்களைக் கொண்டு செய்வதை சட்டரீதியாக அரசால் தடுக்க முடியாதா?
– சென்னகிருஷ்ணன், திருவேற்காடு
பதில் 6: சுற்றறிக்கை மூலம் பள்ளிக் கல்வி இயக்ககம் இதைத் தடுக்க அறிவுறுத்தி ஆணையிட வேண்டும். இவையெல்லாம் அறிவியலுக்கு விரோதம். ஆசிரியர் பாதபூஜை வரை நடப்பதெல்லாம் அடிமைப் புத்திக்கு அரணாக்கிடவே. அனுமதிக்கவே கூடாது!
– – – – –
கேள்வி 7: இந்திய அஞ்சல் துறை – நூல் அஞ்சல் சேவையை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுத்தியுள்ளதே?
– மன்னை சித்து, மன்னார்குடி – 1.
பதில் 7: வன்மையாகக் கண்டிக்க வேண்டும். எத்தனை எத்தனை கண்டனங்களும் போராட்டங்களும்! என்னே கொடுமை!!
– – – – –
கேள்வி 8: 12 ஆண்டுகளுக்குப் பிறகு மலரும் குறிஞ்சி மலர் போல நீண்ட 12 ஆண்டுகள் பல போராட்டங்கள் நடத்திக் காத்துக்கிடந்து மண்டல் குழுப் பரிந்துரைகளை அமல்படுத்தியது பற்றி…
– க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி
பதில் 8: மக்கள்தான் மறவாமல் நினைத்து, பெற்ற உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும். இன்னும் பெற வேண்டியவைகளுக்குப் போராடவும் மக்களை அறிவுறுத்தல் அவசியம் ஆகும்!
– – – – –
கேள்வி 9: 2019ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நாட்டுப் பண் பற்றிய ஒரு வழக்கில், உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி ‘நாட்டுப் பண் இசைப்பது கட்டாயமல்ல’ என்று கூறியுள்ள நிலையில் தமிழ்நாட்டு ஆளுநர் இதில் முரண்டு பிடிப்பது ஏன்?
– க.தனசேகரன், அரூர்.
பதில் 9: பொது வழக்குப் போட்டு இதனை நீதிமன்றத்திற்கு உங்களைப் போன்றவர்கள் கொண்டு செல்ல வேண்டும்.
– – – – –
கேள்வி 10: பாஜகவின் மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி அண்மையில் பேசும்போது, நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி பற்றியும், டில்லி முதலமைச்சர் ஆதிஷி பற்றியும் அநாகரிகமாகப் பேசியது குறித்து மகளிர் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளுமா?
– செல்விபாபு, மதுரை.
பதில் 10: அருவெறுப்பு அரசியல், தனி மனிதத் தரந்தாழ்ந்த பண்பற்ற வர்ணணை. உள்ளம் எவ்வளவு பெரிய பள்ளம் என்பதைக் கூறினாலும் தண்டிக்க வேண்டிய கட்டம் உள்ளது! “பார்லிமெண்ட்ரி உரிமை மீறல் பிரச்சினை எழுப்பப்பட வேண்டும். நீதி உறங்கக் கூடாது!