(சிறுகதை)
“ஓ… மாமா வந்தாச்சு… மாமா வந்தாச்சு…” என்று, கால் முளைத்த சிற்பம்போல் வீட்டுவாசலில் நின்று தாய் மாமனான என்னைக் கண்டவுடன் உற்சாகத்துடன் குதித்தாள் குழந்தை தாரகை
“ஹாய் தாரா…கண்ணு… ” இருசக்கர வாகனத்தை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு தாரகையைத் தூக்கி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டேன். அவளும் பதில் முத்தம் தந்தாள்.
“இளமாறா வா… வா…உள்ள வா… ஏய்.., இறங்குடி கீழே, ஏந்தம்பிய விட்டு கீழே இறங்கு. அவனே அக்கா வீட்டுக்கு பொங்கல் போவியல்’ன்னு வந்தாதான் ஆச்சு. இல்லன்னா, இந்த வாட்சாப்லையே பேசிக் காலத்தை ஓட்டுவான், அக்கா வீட்டுப் பக்கம் அவன் இன்று வந்ததற்காகவே தனியா ஒரு பொங்கல் வைக்கணும். இதுல நீ வேற அவனை வாசலிலேயே நிக்க வச்சுக்கிட்டு வம்படிக்கிறவ…” என்றவாரே வீட்டிற்குள்ளிருந்து வெளிப்பட்ட அக்கா கலைவாணி தன் மகள் தாரகையைக் கடிந்து கொள்வது போல் எனது செயல்களையும் குத்திக் காட்டினார்.
இருசக்கர வாகனத்தின் இருக்கையின் பக்கவாட்டுக் கொக்கியில் பழம் தேங்காயுடன் மாட்டப்பட்டிருந்த குச்சிப்பையை அக்கா எடுத்துக்கொண்டார். தாரகையைக் கீழே இறக்கி விட்டு, விட்டு பைக்கில் கட்டப்பட்டிருந்த இரண்டு செங்கரும்பையும், மஞ்சள் கொத்தையும் அவிழ்த்து எடுத்துக் கொண்டு அக்காவைப் பின்தொடர்ந்து வீட்டுக்குள் சென்றேன்.
வீடு பொங்கலுக்காகச் சுத்தம் செய்யப்பட்டு வண்ணம் பூசிக் கொண்டிருந்தது. எங்கு தேடியும் மாமாவைக் காணாமல் அக்காவிடம் கேட்டேன்.
“அக்கா, மாமா எங்கே?”
“மாமா பேருந்து நிலையம் வரைக்கும் போயிருக்காங்க, கல்லூரியில் நேற்றைக்குதான் விடுமுறை விட்டாங்களாம், கோயம்புத்தூர்ல இருந்து அவரோட தங்கை வரான்னு அழைக்கச் சென்றிருக்கார். நீ சோபாவில் உக்காரு… இதோ ‘டீ’ போட்டுக் கொண்டுவரேன்” என்றார் அக்கா.
கரும்பை ஒரு மூலையில் சார்த்திவிட்டு சோபாவில் அமர்ந்தேன். தாரகை நான் கொண்டு வந்த குச்சிப்பையில் எதையோ தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்தாள். நான் மாமாவின் தங்கை பூவரசியின் வருகையைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். “ஹய்யா… சாக்லெட்..” அவள் தேடியது கிடைத்ததும் ஓடிவந்து என் மடி மீது அமர்ந்து கொண்டாள்.
வெளியே மாமாவின் ஹோண்டா சத்தம் கேட்டது. ஜன்னல் வழியே பார்த்துவிட்டு தாரகையுடன் வாசலுக்கு எழுந்து சென்றேன்.
“அய்…அத்த…” ஓடிச்சென்று பூவரசியின் காலைக் கட்டிக்கொண்டாள் தாரகை.
“இளமாறா எப்ப வந்த…”
“வந்து பத்து நிமிடம் ஆச்சு மாமா…” பதிலுரைத்தேன்.
“என்ன மாறன், வாசலில் லாரியைக் காணோம்?” என்றாள் பூவரசி.
‘லாரியா..?’ அவள் பேச்சின் அர்த்தம் விளங்காது நான் விழித்து நின்றதைக் கண்ணுற்ற மாமா.
“டேய்… நீ சீர்வரிசை ஏற்றி வந்த லாரியைத் தேடுறாங்களாம்” என்ற மாமா, “பூவரசி, அவன் அக்காவையே நமக்கு சீரா கொடுத்திருக்கான், அதற்காகவே அவனுக்குப் பெரிய நன்றிக்கடன் பட்டிருக்கோம். கலைவாணியை விட நமக்குச் வேறென்ன பெரிசா சீர் வேண்டும்?” என்றார்.
அக்காவை, மாமா உயர்வாக எண்ணுவது மனதிற்கு இதமாக இருந்தது. பூவரசியை முறைப்பதுபோல் பார்த்தேன். அவள். “சரிங்க… சார், அதான் எங்க அண்ணாவே உங்க பக்கம் விழுந்திட்டாரே… அப்புறம் என்ன முறைப்பு? உள்ளே போங்க…” என்று கையைப் பிடித்து வீட்டிற்குள் இழுத்துச் சென்றாள்.
நானும், மாமாவும் சோபாவில் அமர்ந்தோம். கொண்டுவந்த கைப்பையை மேசை மீது வைத்துவிட்டு, சமையலறைப் பக்கம் சென்றாள் பூவரசி.
தாரகை அவளது அப்பாவின் மடியில் தஞ்சமானாள்.
சமையல் அறையிலிருந்து பூவரசி இரண்டு சில்வர் குவளையில் தேநீர் கொண்டுவந்து கொடுத்து விட்டு. என் எதிரே அவள் அண்ணனோடு சோபாவில் அமர்ந்தாள்.
”இந்தா அரசி… நீயும் எடுத்துக்கோ…” பின்னால் வந்த அக்கா, நாத்தனாரிடம் ஒரு ்குவளை தேநீரை நீட்டி விட்டு, தானும் ஒரு குவளையுடன் என்னருகே சோபாவில் அமர்ந்தார்.
“ஏன் மாறன்..? உங்களிடம் ரொம்ப நாளா கேட்க நினைச்சேன்… எப்பவும் கருப்புச் சட்டையே போடுறீங்களே ஏன்? பொங்கலும் அதுவுமா, இன்னைக்குமா கருப்புச்சட்டை போடணும்.” என்று வினவினாள் பூவரசி
“பூவரசி, இன்னைக்கு நீங்க பொறியியல் படிக்கிறீங்க. ஆனால், நம் முன்னோர்கள் ஏன் படிக்கவில்லை தெரியுமா? படிப்பு ஒருபக்கம் இருந்தாலும், மனித சமூகத்தின் சக மனிதர்களாகக் கூட நம்மை மதிக்கலையே. தொட்டால் தீட்டு, பார்த்தாலே பாவம், தெருவில் நடப்பதே குற்றம் என்று மேல்ஜாதி மனநோயாளிகளால் ஒதுக்கப்பட்டோம், இழிவுபடுத்தப்பட்டோம். அந்த இழிவை நான் உணர்ந்திருக்கிறேன் என்பதன் அடையாளம்தான் இந்த க்கருப்புச்சட்டை, உங்களைப் போன்றவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு. இன்னும் ஜாதி, மத இருட்டில் தானே இருக்கீங்க..? அவர்கள் எல்லோரும் தங்களின் இழிவை உணர்ந்து அறிவுபெற்று வெளிச்சத்துக்கு வரும் வரையில், பெரியார் தொண்டனான நான் கருப்புச் சட்டைதான் போடணும். பொங்கலுக்காக உடையின் நிறத்தை ஏன் மாற்ற வேண்டும்?”
“போதும், எங்கள் கல்லூரி விரிவுரையாளர் பேசுவதைப் போலவே இருக்கு” என்று கைகூப்பினாள் பூவரசி.
“சரி… அதென்ன மாப்ள… அக்காவுக்கு தீபாவளி பண்டிகைக்கு சீர்வரிசை கொடுப்பதில்லை, பொங்கலுக்கு மாட்டும் என்ன ஸ்பெஷல்?” மாமாதான் கேட்டார்.
“மாமா…தீபாவளி ஒரு பண்டிகையின்னு, நீங்களே சொல்லிட்டீங்க… பொங்கல் அப்படியில்லை, இது விழா, நான் அதிகமா பேசுறேன்னு தயவுசெய்து நீங்க நினைக்கக் கூடாது.
பண்டிகைகளுக்கு கடவுள், சடங்கு, சம்பிரதாயம் என்று அறிவுக்கு ஒவ்வாத பல கதைகள் சொல்வார்கள். பொங்கலுக்கு அப்படி எதுவுமே இல்லை. நம் வீட்டில் நடைபெறும் திருமண விழா, பிறந்தநாள் விழா, வெள்ளி விழா, மணி விழா போன்றது தான், தைப் பொங்கல் விழாவும். எங்காவது ‘எங்கள் வீட்டில் திருமணப் பண்டிகை’ என்று சொல்வோமா? சொல்லமாட்டோம் இல்லையா..? அது போலத்தான் மாமா,
உழைக்கும் தமிழர்கள் அதிலும், உழவர்கள், தங்கள் உழைப்புக்கும், தங்களுக்கு உதவிய இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் விதமா, அறுவடை செய்த புதுநெல்லை புதுப்பானையில் வைத்து, புதிதாக அறுவடையான மஞ்சள், இஞ்சிக் கொத்துகளை பானையில் கட்டி. புது அடுப்பிலிட்டு பொங்கல் வைத்து. தங்கள் நிலத்தில் விளையும் காய்கறிகள், கிழங்குகளால் கூட்டு சமைத்து, எல்லாவற்றையும் நாம மட்டும் தின்று தீர்த்தோம். என்று இல்லாமல், ஆடு, மாடு, ஈ, எறும்பு’ன்னு பிற உயிர்களுக்கும் கொடுத்து, புத்தாடை உடுத்தி குதூகலமாகக் கொண்டாடுவோம் பாருங்க, அப்போ ஒரு இதமான வாசனை வரும்… அதுதான் மாமா பொங்கல், இதையெல்லாம் அனுபவிக்க, குடும்பத்தோட எங்க கிராமத்துக்கு வாங்கன்னா, எங்க வரீங்க… அக்காவுக்கும் உங்களுக்கும் திருமணமாகி அய்ந்தாண்டுகள் ஆச்சு, ஒரு பொங்கலுக்காவது ஊருக்கு வாங்கன்னா, வேலை வேலைன்னு வரவே மாட்டேங்கிறீங்க… போங்க மாமா…” நான் பேசியதையே, இமைக்க மறந்து கேட்டுக்கொண்டிருந்த மாமா. அக்காவை ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டார்.
” மாறன், நான் கூட எல்லா பண்டிகைகளையும் போலதான் பொங்கல் என்று, இவ்வளவு நாளாக நினைத்திருந்தேன். இப்போது விளங்கிக்கொண்டேன் – பண்டிகைக்கும். விழாவுக்குமான வேறுபாட்டை. பொங்கல் விழா தமிழர்களின் தனித்த அடையாளம் என்பது புரிந்தது, அண்ணா.., நாம எல்லோரும் இப்பவே மாறனுடன் புறப்பட்டுச் சென்றால், இன்று மாலையே அவங்க கிராமத்தில் அத்தை, மாமாவுடன் சூரியப் பொங்கலை;f கொண்டாடிடலாம். என்ன சொல்றீங்க..?” என்றாள் பூவரசி.
அக்கா கலைவாணிக்கும் பிறந்த வீட்டுக்கு வர ஆசை இருக்காதா என்ன! அதுவும் பொங்கல் விழாவை அம்மா, அப்பா, தம்பியுடன் கொண்டாடுவது என்றால் அக்காவுக்குப் பேரின்பம். ஆனால். கணவன் என்ன சொல்லப்போகிறாரோ..! என்று மாமா முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் அக்கா. இந்தத் திருமண வாழ்வு பெண்ணின் சின்னச் சின்ன ஆசைகளைக்கூட எப்படியெல்லாம் துண்டாடி விடுகிறது! மனைவியின் மனதைப் புரிந்தவராக, “சரி… வேண்டியத எடுத்துகிட்டுப் புறப்படுங்க..சென்று வரலாம். இளமாறா… உங்க அக்காவிடம் கொண்டுவந்தைக் கொடுத்துட்டு, வண்டியில் முன்னால் செல்’ நாங்க நாலு பேரும் காரை எடுத்துக்கொண்டு பின்னால் வந்திடுறோம்.” மாமா கொஞ்சம் நல்லவர்தான் போல..! என் மனம் அவரைப் பாராட்டியது.
“உண்மையாகவா மாமா… இப்பவே அப்பாவுக்குச் சொல்லிவிடுகிறேன்” என் பேச்சில் எந்த இடத்தில் மாமா வழுக்கி விழுந்தார் என்பது எனக்கே புரியவில்லை. எதிர்பார்க்கவில்லைதான். மாமா ஊர்வர ஒப்புக்கொள்வார் என்று. அக்காவின் குடும்பம் ஊருக்கு வரும் தகவலை கைப்பேசியில் அப்பாவுக்குத் தெரிவித்தேன். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் மகிழ்ச்சி தாளவில்லை என்பது அவர்களது உரையாடலில் தெரிந்தது.
“அண்ணா, நான் மாறனுடன் முன்னாடி ஃபைக்கில் போகவா…” என்றாள் பூவரசி.
“ஏய்… ஊரிலிருந்து வந்து இன்னும் குளிக்கல, சாப்பிடல… நான் சிரமப்பட்டுச் செய்த இட்லியெல்லாம் வீணாகிப்போறதா… எல்லோருமே காலை பசியாறிச் செல்லலாம்.” என்றார் அக்கா.
அக்காவின் கட்டளையை ஏற்று எல்லோரும் காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டே புறப்பட்டோம். பூவரசி எனது வாகனத்திலேயே வந்து விட்டாள், நான்கு ஏக்கர் நிலத்தின் நடுவில், பெரிய அளவிலான அழகிய பண்ணை வீடுதான் எங்கள் வீடு. மகள் குடும்பத்தினரை வரவேற்க, அப்பா வீட்டை இன்னும் அழகாக்கிவிட்டிருந்தார். மாவிலையுடன், சிறுபீளைப் பூவைத் தொடுத்து தோரணமாக வாசல் முழுதும் கட்டியிருந்தார். அம்மா தன் பங்கிற்கு வாசல் முழுதும் வண்ணக் கோலம் வரைந்திருந்தார். நான் அய்ந்து வயதாக இருக்கும்போது பார்த்த, அதே பொங்கல் பானைக் கோலம்தான் இப்போது ‘கலர்’ கோலமாகக் காட்சித் தந்தது.
பூவரசி வண்டியை விட்டு இறங்கியதும். “வாடி மருமகளே… வா…” என்று செல்லமாக பூவரசியின் கன்னத்தை வருடி வீட்டிற்குள் அழைத்தார் அம்மா. நானும் பின்தொடர்ந்தேன்.
“வீட்டு வராண்டாவில் சிறு வள்ளிக்கிழங்கு மூன்று கூடை நிறைய இருந்தது. கிழங்கை வெட்டிக் கொண்டுவந்து தண்ணீர் விட்டு சுத்தம் செய்துகொண்டிருந்தார் அப்பா.
“மாறன் இது என்ன கிழங்கு..?” என்று கேட்டாள் பூவரசி,
“அப்பா… ஏம்பா இவ்வளவு கிழங்கை வெட்டியெடுத்தீங்க..? என்றேன்.
“அக்கா கலைவாணிக்கு இந்தக் கிழங்குன்னா ரொம்பப் பிடிக்குமே, அதான் தோண்டி வந்துட்டேன்.” என்றார் சிறு குழந்தையாக,
“ஆமாம் அதற்காக இவ்வளவா ..? இது என்ன கிழங்குன்னு பூவரசி கேட்டாளே.. நீங்களே சொல்லுங்க.. எனக்கு உள்ளே வேலை இருக்கு” என்று நான் வீட்டிற்குள் புகுந்து கொண்டேன்.
“அம்மாடி.. இதுக்கு சிறுவள்ளி கிழங்குன்னு பேரு, ஒரு காலத்தில் இதையே சாப்பாடா சாப்பிட்டு உயிர் வாழ்ந்தவர்களில் நானும் ஒருத்தன். உப்புப் போட்டு வேகவச்சு தோலை நீக்கிச் சாப்பிட அம்புட்டு சுவையா இருக்கும். இதயத்தையும், இரைப்பையையும் பலமாக்கும். உங்க அண்ணன், அண்ணி வந்ததும் நான் பக்குவமா வேகவைத்துத் தர்ரேன், சாப்பிட்டுப் பாரும்மா, இப்போ உள்ளே போயி ஓய்வு எடுத்துக்கம்மா” என்றார் வேலாயுதம்.
நான் வீட்டிற்குள் சென்று அக்கா குடும்பம் தங்குவதற்கு வசதியாக ஓர் அறையைத் தயார் செய்துவிட்டு. வராண்டா பக்கம் வந்தேன்.
தொலைவில் கார் வரும் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தேன்.
அக்கா காரிலிருந்து கை’நிறைய துணிக் கடைப் பைகளுடன் இறங்கி வந்தார். மாமா தாரகையை கைபிடித்து நடத்தி அழைத்துவந்தார்.
“வாம்மா…வாங்க மாப்ள…” என்ற அப்பா பேத்தியைத் தூக்கி வைத்து கொஞ்சத் தொடங்கிவிட்டார்.
அம்மா, தண்ணீர்ச் சொம்புடன் ஓடிவந்து மருமகனை வரவேற்றார்.
அக்கா வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக வாங்கிவந்த புத்தாடைகளை எடுத்து எல்லோருக்கும் கொடுத்தார்.
“ஏம்மா… இவ்வளவு செலவு..!” என்று அப்பா சொன்னாலும், உள்ளூர தன் மகள் பொங்கலுக்குப் புத்தாடை வாங்கி வந்து கொடுத்ததில் மகிழ்ச்சிதான்.
“ஆகட்டும்… ஆகட்டும் .. எல்லோரும் புதுத்துணியை உடுத்திக்கொண்டு வேகமா வாங்க, சூரியன் மறைவதற்குள் பொங்கல் வைக்கவேண்டும்.” என்றார் அப்பா…
‘அட… எனக்கு மாமா கருப்புச் சட்டை வாங்கி வந்திருக்கார்; சரி, அவர் தங்கை பூவரசிக்கு ஏன் கருப்பு சுடிதார் வாங்கி வந்தார்?’ குழப்பத்திலிருந்தேன்.
“இளமாறா… அந்த;r செங்கரும்பை களத்தில் கொண்டுவந்து கட்டி நிறுத்து.” என்று அப்பா சொல்லவும். பொங்கல் வேலையில் எல்லோருமே தீவிரமாக இறங்கினோம்.
தாரகை அவள் அப்பாவின் கைப்பேசியில் எங்கள் எல்லோரையும் கைப்பேசியில் படம் பிடித்துக்கொண்டிருந்தாள்.
அக்கா, பிறந்த வீட்டில் சமைத்த பொங்கல். பானையை நிறைத்துக் கொண்டு பொங்கி வழிந்தது.
அதனைப் பார்த்ததும் அப்பா… “பொங்கலோ … பொங்கல்…!” என்று முழங்கினார். தாரகையும் தாத்தாவுடன் பின்பாட்டுப் பாடினாள்.
(நிறைவு)