கோவை, ஜன.10 கோவையில் மாட்டுக்கறி பிரியாணி கடை நடத்தும் இணையர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை கணபதி அருகே உடையம்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் மாட்டுக்கறி பிரியாணி மாட்டுக்கறி வறுவல் கடை நடத்தி வருபவர்கள் ரவி, ஆபிதா.
இப்பகுதியில் கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, மீன் ஆகியவை வேண்டுமானால் விற்றுக் கொள்ளுங்கள் என்றும் ஆனால் மாட்டிறைச்சியை மட்டும் விற்கக் கூடாது என பா.ஜ.க. நிர்வாகி மிரட்டி உள்ளார். மேலும், அடுத்த சில நாள்கள் கழித்து வந்து, ‘கடையை காலி செய்ய சொல்லி அன்றே சொன்னேன் அல்லவா… ஏன் இன்னும் கடை போட்டுள்ளீர்கள்?’ என மீண்டும் மிரட்டினார். அதுமட்டுமின்றி, 10 பேரை அழைத்து வந்து கடையை அடித்து உடைத்துவிடுவதாக கூறி மிரட்டினார். இதனை ரவி – ஆபிதா இணையர்கள் காட்சிப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்த காணொலி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் மாட்டுக்கறி பிரியாணி கடை நடத்தும் இணையர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். பாதுகாப்பு வழங்கவும், அதே இடத்தில் கடையை வைக்க அனுமதிக்க கோரியும் ஆபிதா, ரவி இணையர் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாஜக ஒ.பி.சி. அணி மாநகர மாவட்ட செயலாளர் சுப்பிரமணி மீது 126(2), 192, 196, 351/2 ஆகிய 4 பிரிவின் கீழ் துடியலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.