பத்திரிகையாளர் – சிறந்த எழுத்தாளர், ஆய்வுக் கண்ணோட்ட திறனாளர், திருவாரூர் மாவட்டம் கண் கொடுத்தவனிதம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தோழர் சு. ஒளிச்செங்கோ (வயது 90) அவர்கள் (இயற்பெயர் சு. நடராசன்) இன்று (9.1.2025) அதிகாலை 4 மணிக்கு உடல் நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனையும், தாங்கொணா துயரமும் அடைந்தோம்.
அய்யா தந்தை பெரியாரிடம் பல முறை நெருங்கி பல சந்தேகங்களைக் கேட்டும் அய்யாவின் மிக்க அன்பையும் பெற்றவர்.
அன்னையாரின் சாதனைத் துணிவைப் பாராட்டி மகிழ்ந்தவர்.
நம்மிடத்தில் அளவற்ற அன்பும், பாசமும் கொண்டவர் என்பதோடு சில பழைய புத்தகங்களைத் தேடிச் சேகரித்து நமக்குத் தந்து பல மணி நேரம் கொள்கை, லட்சியப் பயணம் பற்றிப் பேசி மகிழ்வார்.
மிக மிக எளிய வாழ்க்கை என்றாலும் எவரிடத்திலும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காது வாழ்ந்த ஒரு கொள்கை திசை காட்டி.
அவரது இழப்பு, அந்தக் குடும்பத்தினரைத் தாண்டி, இயக்கக் கொள்கை குடும்பத்திற்கு மிகப் பெரும் இழப்பும் ஆகும்.
அவரது மகன் சிறந்த எழுத்தாளர் சுந்தர புத்தன், பெரியார் இனியன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும், மறைந்தவருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைமை கழகத்தின் சார்பில் நமது கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை ஜெயக்குமார் மற்றும் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்துவார்கள்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
9.1.2025