சென்னை, ஜன.9 கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப்-4 பணிகளில் உள்ள 6,244 காலி இடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு (2024) வெளியிடப்பட்டது. இந்த காலி இடங்களுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 15 லட்சத்து 88 ஆயிரம் பேர் கேள்வி எழுதினார்கள்.
இவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. தகுதியான வர்களுக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 22-ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 12-ஆம் தேதி வரை சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் (டி.என்.பி.எஸ்.சி.)அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
எண்ணிக்கை அதிகரிப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்ட போது, முதலில் 6,244 காலி இடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி 480 இடங்களும், அக்டோபர் மாதம் 9-ந்தேதி 2,208 இடங்களும், அதே மாதம் 28-ந்தேதி 559 இடங்களும் அதிகரிக்கப்பட்டன. இந்த நிலையில் 4-வது முறையாக மேலும் காலி இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பை வெளியிட்டு இருக் கிறது. அந்தவகையில் 41 பணியிடங்கள் தற்போது மேலும் அதிகரிக்கப்பட்டு, குரூப்-4 பணிகளில் காலி இடங்களின் எண் ணிக்கை 9 ஆயிரத்து 532 ஆக உயர்ந்து உள்ளது.
தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரம்:
விசாரணையை பிப்.4-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஜன.9 தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு மேலானதா அல்லது சட்டம் இயற்றும் அதிகாரம் மேலானதா என்பதை தீா்மானிக்க வேண்டியுள்ளது’ என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை வரும் பிப்ரவரி 4-ஆம தேதிக்கு ஒத்திவைத்தது.
தேர்தல் ஆணையர்கள் நியமனம்
தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், தலைமை தோ்தல் ஆணையா், 2 தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக பிரதமா், எதிர்க்கட்சித் தலைவா் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது. தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்படுகிற வரை, இந்தக் குழு மூலமே தோ்தல் ஆணையா்கள் தோ்வு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டுவந்த ஒன்றிய அரசு, பிரதமா் தலைமையிலான தோ்தல் ஆணையா்கள் தோ்வுக் குழுவில் ஒரு ஒன்றிய அமைச்சா் மற்றும் மக்களவை எதிர்கக்ட்சித் தலைவா் ஆகியோர் உறுப்பினா்களாக இடம்பெறும் வகையில் மாற்றியமைத்து, காலியாக இருந்த 2 தோ்தல் ஆணையா் பணியிடங்களையும் நிரப்பியது.
மனு
இதற்கு எதிராக ஜனநாய சீா்திருத்தத்துக்கான சங்கம், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பில் உசசநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், தீபன்கா் தத்தா, உஜ்ஜன் புயான் ஆகியோர் அடங்கிய அமா்வில் நேற்று (8.1.2025) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா்கள் ஒருவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘தோ்தல் ஆணையா்கள் தோ்வுக் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறுவதை புதிய சட்டத்தின் மூலம் ஒன்றிய அரசு நீக்கிவிட்டது. தோ்தல் ஆணையா்கள் நியமனம் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருப்பது நியாயமாக இருக்க முடியாது. அவ்வாறு இருப்து ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக அமையும்’ என்று வாதிட்டார்.
ஒத்தி வைப்பு
மற்றொரு மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் கூறுகையில், ‘அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதன் மூலம் மட்டுமே உச்சநீதிமன்ற தீா்ப்பை ஒன்றிய அரசு முறியடிக்க முடியும். புதிய சட்டம் இயற்றுவதால் அவ்வாறு செய்ய முடியாது’ என்று வாதிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘அரசமைப்புச் சட்டப் பிரிவு 141-இன் கீழ் நீதிமன்றம் தெரிவிக்கும் அறிவுறுத்தலுக்கும், நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்துக்கும் இடைப்பட்ட விவகாரம். இதில் எது மேலானது என்பதை ஆராய வேண்டும்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.