டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அரசு அனுமதி வழங்காது சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்

viduthalai
3 Min Read

சென்னை, ஜன.9 நிதி, சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றப் பேரவையில் நேற்று (8.1.2025) பேசும் போது கூறியதாவது:

டங்ஸ்டன் சுரங்கம்

மதுரை, மேலூர் அருகே அரிட்டாப்பட்டி பகுதியிலே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்ட காலகட்டத்தில் அந்த சுரங்கத்தை எந்தவொரு காலகட்டத்திலும் நிச்சயமாக அங்கே அமைப்பதற்கு அனுமதிக்கமாட்டேன் என்று சொன்னது மாத்திரமல்ல; தான் முதலமைச்சராக இருக்கின்ற வரையில் அங்கே அந்த டங்ஸ்டன் சுரங்கத்தை வர விடமாட்டோமென்று நெஞ்சுரத்தோடு இந்த அவையிலே அறிவித்தவர் நம்முடைய முதலமைச்சர்.அறிவித்ததோடு மாத்திரமல்லாமல், அனைவருடைய ஒத்துழைப்போடு ஏகமனதாக இந்தச் சட்டமன்றத்திலேயே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, ஒன்றிய அரசினுடைய ஒப்புதலுக்காக முத லமைச்சர் அனுப்பி வைத்திருக்கிறார்.

தீர்மானம்

திராவிட முன்னேற்றக் கழக அரசு எல்லா வகையிலும், எல்லா முறைகளிலும் அதை நாங்கள் எதிர்த்து வந்திருக்கிறோம் என்பதனை எந்தவிதத்திலும் ஒரு மாற்றுக் கருத்தை உங்களால் சொல்ல முடியாது என்பதை நான் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகி றேன். அதற்குப் பிறகுதான், சட்டமன்றத்திலே தீர்மானம் கொண்டு வந்தோம். சட்டமன்றத்திலே ஒருமுகமாக தீர்மானம் கொண்டுவந்து, நாம் எல்லாம் நிறைவேற்றியதற்குப்பிறகும்கூட, இங்கே பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக அதிலே அரசியல் ஆதாயம் செய்வதற்காக இன்றைக்கு நீங்கள் அதிலே குளிர்காய நினைக்கிறீர்கள்.

தம்பிதுரை ஆதரித்துப் பேசியிருக்கிறார் முதலமைச்சர் நீங்கள் தீர்மா னத்தை ஆதரித்தது உண்மைதான். அதற்காக நன்றி சொல்கிறோம். அதை மறுக்கவில்லை.ஆனால், அமைச்சர் சொல்வது, நீங்கள் இதே பிரச்சினையை உங்கள் உறுப்பினர் இங்கே பேசுகிறபோது, இந்தப் பிரச்சினையிலே ஆட்சிக்கு மக்களிடத்திலே மதிப்பை இழந்து கொண்டிருக்கிறது; நம்பிக்கை குறைந்து கொண்டிருக்கிறது என்றெல்லாம் பேசினார். அதனால்தான் பதில் சொல்லவேண்டிய அவசியம் நம்முடைய அமைச்சருக்கு வந்திருக்கிறது. அதனால், அவர் பேசுகிறபோது, உங்களுடைய உறுப்பினர் மாநிலங்களவையிலே என்ன பேசினார்? அதுதான் கேள்வி, அதைச் சொல்கிறார். அதை இல்லையென்று சொல்கிறீர்களா? மறுக்கிறீர்களா? ஆதாரத்தோடு நான் சபாநாயகரிடத்தில் கொடுக்கிறேன். அதற்குப் பிறகு முடிவெடுக்கலாம். உங்களுடைய மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை நாடாளு மன்ற அவையிலே ஆதரித்துப் பேசியிருக்கிறார். இது உண்மை, இல்லையென்று மறுக்கிறீர்களா? தி.மு.க.-வின் சார்பில் நாங்கள் இதை எதிர்த்திருக்கிறோம், ஆதரிக்க வில்லை. ஆனால் உங்கள் உறுப்பினர், உங்களுடைய அ.தி.மு.க.-வைச் சார்ந்த உறுப்பினர் ஆதரித்துப் பேசியிருக்கிறார். அது உண்டா, இல்லையா? அதற்குப் பதில் சொல் லுங்கள்.

அமைச்சர் தங்கம் தென்னரசு

எதிர்க் கட்சித் துணைத் தலை வரே, ஒற்றை உறுப்பினர் எங்களுக்கு இருந்தாலும் நாங்கள் உறுதியாக இந்தத் திட்டத்தை ஆதரிப்போம் என்கின்ற வகையிலே மாநிலங்களவையில் நீங்கள் ஆதரித்திருக்கிறீர்கள். அதை உங்களால் மறுக்க முடியாது.

போராட்டம் நடத்தக்கூடிய நண்பர்கள், நம்முடைய பிரதான எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள்? ஒன்றிய அரசைக் கண்டித்து, நீங்கள் ஒரு வார்த்தை அறிக்கையில் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஆனால், அதை விட்டு, விட்டு, ராஜன் செல்லப்பா அவையில் சொல்கிறார்கள், தமிழ்நாடு அரசை பற்றி இங்கு குறைகூறுவதாகச் சொன்னால், இதைத்தான் நாங்கள் சொல்கிறோம், இது யாருடைய கூட்டணிக்கு பின்னாலே இருந்துகொண்டு, நீங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். நான் அந்த வார்த்தையைக் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், ஒன்றிய அரசை நீங்கள் சொல்லவில்லை. தமிழ்நாடு அரசு, அங்கிருக்கக்கூடிய பொதுமக்கள், விவசாயப் பெருங்குடி மக்கள் அங்கே போராட்டம் நடத்துகிறபோது, அந்தப் போராட் டத்திற்கு அனுமதி வழங்கி யிருக்கிறது.

இன்னும் ஒருபடி மேலே போய், அங்கே இருக்கக்கூடிய அந்த மக்களுக்கு அங்கே எந்தவிதமான ஓர் அசம்பாவிதமும் நடந்துவிடாத அளவில் காவல்துறை பாதுகாப்பு கொடுத்திருக்கிறது.

நான், மீண்டும் இந்த அவையில் திட்டவட்டமாக உங்களிடத்தில் சொல்கிறேன், இந்த அவையின் மூலமாக நாட்டு மக்களுக்கும் சரி, போராட்டக் களத்தில் இருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் சரி, தமிழ்நாடு அரசு ஒருபோதும் இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கவே வழங்காது. இந்தத் திட்டத்தை வரவே விடமாட்டோம். இன்னும் ஒருபடி மேலே போய் சொன்னால், நம்முடைய முதலமைச்சர் , முதலமைச்சராக இருக் கிற வரை இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னார்.நம்முடைய முதலமைச்சர் , முதலமைச்சராக இருக்கிற வரை ஒரு பிடி மண்ணைக்கூட அங்கேயிருந்து எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு நிச்சயமாக அனுமதிக்காது இங்கேயெல்லாம் முகக் கவசம் போட்டுக்கொண்டு வந்திருக்கிறீர்களே, இந்த முகக் கவசம் எதற்காகப் போட்டுக்கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால், நீங்கள் செய்த தவறை மறைப்பதற்காக இந்த முகக் கவசத்தை உங்கள் முகங்களிலே அணிந்து கொண்டு வந்திருக்கிறீர்கள் இவ்வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *