நாட்டில் பாசிசம் தொடரக்கூடாது – ஜனநாயகம் விடைபெறக்கூடாது!
இந்த மேடையில் நாம் காட்டும் ஒற்றுமை இந்தியாவெங்கும் பரவட்டும்!
படத் திறப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
சென்னை, ஜன.9 இன்றைக்குப் படங்களாக இருக்கும் மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கும், எங்கள் கொள்கைக் குடும்பத்தைச் சேர்ந்த மேனாள் ஒன்றிய இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் எந்தப் பாசிசத்தை எதிர்த்து நின்றார்களோ, அந்தப் பாசிசம் நீடிக்கக் கூடாது – ஜனநாயகம் விடைபெறக் கூடாது என்ற புள்ளியில், இந்த மேடையில் காட்சி அளிக்கக்கூடிய இந்தியா கூட்டணியின் ஒற்றுமை மேலும் பலப்பட்டு, அதன் தாக்கம் இந்தியா முழுவதும் கிடைக்கட்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 7.1.2025 காலை சென்னை காமராஜர் அரங்கில், மறைந்த மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், மேனாள் ஒன்றிய இணை அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான மறைந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின் படங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். படத்திறப்பு நிகழ்வில் கலந்துகொண்ட திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நினைவேந்தல் உரையாற்றினார்.
அவரது நினைவேந்தல் உரை வருமாறு:
மிகுந்த வேதனையோடும், துயரத்தோடும் இருக்கக்கூடிய நிலையில், இந்த நாட்டின் இருபெரும் இழப்புகள் – அவர்களை நினைத்து நினைத்து, அவர்களுடைய ஆற்றலையெல்லாம் இந்த நாடு மேலும் பெறக்கூடிய வாய்ப்பு – மக்கள் நலனுக்காக அவர்கள் உழைத்த விளைச்சலினுடைய பலன் மேலும் நமக்கெல்லாம் கிடைக்கவேண்டும் என்று நினைத்த இருபெரும் தலைவர்களுடைய புகழ் வணக்கம் – படத் திறப்பு நிகழ்ச்சி இது. படங்களைத் திறந்து வைத்துவிட்டு, அவசரமாக அரசியல் பணிகளுக்காக விடைபெற்றுச் சென்ற தமிழ்நாட்டினுடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாண்புமிகு மானமிகு நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, பெருமக்களே!
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுடைய குருதி உறவுகளே, அருமைத் தோழர்களே, ஊடக நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இழக்கக் கூடாத இரு மாணிக்கங்களை இழந்தோம்!
இவ்வளவு பெரிய இழப்பிற்கு ஆளாகி, அந்த இழப்பைத் தாங்கிக் கொண்டுள்ளோம். மறைவுற்ற நம்முடைய அருமைத் தோழர்கள் மாணிக்கங்கள் – இழக்கக்கூடாத செல்வங்கள்!
இந்த நிகழ்ச்சி அந்த இருவரையும் நினைவுகூரத்தக்க சிறப்பான, வரலாற்று நிகழ்ச்சியாகும்.
அவர்களது உருவப் படங்கள் இங்கே திறக்கப்பட்டு இருக்கின்றன. இந்தியாவினுடைய வரலாற்றில் பிரதமர் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். ஆனால், இழக்கக்கூடாத இருபெரும் இழப்புகள். வரலாற்றில் என்றைக்கும் நிலைக்கக்கூடிய இருவரது இழப்புகள். அந்த இழப்புக்குரிய மேனாள் பிரதமர், சிறந்த பொருளாதார நிபுணர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைப்பற்றி இங்கே சொன்னார்கள் – எவ்வளவு எளிமையாக இருந்து வந்தவர் என்று.
ஆனால், அதைவிட சிறப்பு என்னவென்றால், பத வியை நாடாதவரான அவரை, பதவித் தேடிப் போனது.
டாக்டர் மன்மோகன்சிங்கை அடையாளம் காட்டிய பெருந்தகை சோனியா காந்தி!
எடுத்துக்காட்டான இயக்கமாக, இந்திய அளவிலே நல்ல அளவிற்கு தேசிய இயக்கமாக இருக்கக்கூடிய இந்திய தேசிய காங்கிரசுக்குத் தலைவராக அம்மையார் சோனியா காந்தி அவர்களைத் தேர்ந்தெடுத்த நேரத்தில், அவரையே பிரதமராக ஆக்கவேண்டும் என்று சொன்ன நேரத்தில், ‘‘பிரதமர் பதவி எனக்கு வேண்டாம்; அதற்குரியவரை சிறப்பான ஒருவரை நான் அடையாளம் காட்டுகிறேன்” என்று பெருந்தன்மையோடு அம்மையார் சோனியா காந்தி, டாக்டர் மன்மோகன்சிங்கை அடை யாளம் காட்டினார்.
ஆங்கிலத்தில், மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது, ‘‘தி ஆக்சிடென்டெல் பிரைமினிஸ்டர்” என்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்தி னார்கள். எதிர்பாராமல் பிரதமர் ஆனவர் என்று.
ஆனால், எதிர்பாராமல் அவர் பிரதமராக ஆகியி ருக்கலாம். ஆனால், மக்களுக்கு எதிர்பாராத திட்டங்களை யெல்லாம் தந்து, வரலாற்றில் நிலைத்திருக்கக் கூடியவர் மன்மோகன்சிங் ஆவார்.
நம்முடைய முதலமைச்சர் அந்தத் திட்டங்களைப்பற்றி பட்டியலிட்டார். அதுபோலவே, அடுத்து சகோதரர் உரையாற்றுகையில், எப்படி மனிதாபிமான மிக்க தலைவர் மன்மோகன்சிங் என்பதை மிகச் சிறப்பாக எடுத்துச் சொன்னார். பொருளாதாரத் துறை என்பது மன்மோகன் சிங் அவர்களுடைய துறையாகும்.
இப்படி எத்தனை எத்தனையோ சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்த நேரத்தில், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி என்ற ஒன்றை உருவாக்கி, அதனுடைய சாதனை கள்தான் இன்றைக்கும், என்றைக்கும் வரலாற்றில் நிலைத்திருக்கக் கூடிய ஓர் அற்புதமான, சிறப்பான அமைப்பாக உள்ளது.
தமிழுக்கு செம்மொழித் தகுதி கிடைத்தது மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோதுதான்!
கலைஞர் ஒரு பக்கம் தமிழ்நாட்டிலிருந்து காங்கிரசோடு இணைந்து, திராவிடர் இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் எல்லாம் இணைந்த சூழ்நிலையில்தான், தமிழ்நாட்டு மக்களுக்கு நிரந்தர நன்மைகள் பல கிடைத்திருக்கின்றன.
செம்மொழியாகத் தமிழ்மொழி பிரகட னப்படுத்தப்பட்டது என்பது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் நிறைவேறியது.
கலைஞர் ஒருங்கிணைத்து, ஒன்றிய, மாநில ஆட்சிகள் இணைந்து செயல்பட்டன. தமிழ்நாடு வழிகாட்டியாக இருக்கக்கூடிய அந்த நிலையில், டாக்டர் மன்மோகன்சிங் செய்தவை மிகப்பெரிய புரட்சி – அதில் ஒன்றுதான் மொழித் துறையில், தமிழ் மொழி செம்மொழி என்று ஆகியது.
அதற்கடுத்து குறிப்பிட வேண்டுமானால், இன்றைக்கு யாருடைய பெயரைக் கேட்டால் அஞ்சு கிறார்களோ, பயப்படுகிறார்களோ, அந்தப் பெயர்தான் டாக்டர் அம்பேத்கர்.
‘‘அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்” என்று சொல்கிறார்களே என்று அங்கலாய்க்கிறார்கள் அல்லவா – அந்த அம்பேத்கர் அவர்கள், நேரு பிரதமராக இருந்த காலகட்டத்தில், சட்ட அமைச்சராக இருந்தார்.
அப்போது, ஹிந்து சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வரும்பொழுது, பெண்களுக்குச் சொத்துரிமை மசோதாவைக் கொண்டு வந்தார்.
இந்த நாட்டின் மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கக்கூடிய பெண்களுக்குச் சொத்துரிமை சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றவேண்டிய நேரத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்த அன்றைய ஹிந்துத்துவாவாதிகள் அதனைத் தடுத்து நிறுத்தினார்கள்.
ஹிந்துத்துவா மனப்பான்மை இல்லாத
இன்றைய காங்கிரஸ்!
நல்ல வாய்ப்பாக இன்றைக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தலைமையில், சோனியா காந்தி அம்மையாருடைய வழிகாட்டுதலில் இருக்கின்ற காரணத்தினால், அன்றைய ஹிந்துத்துவா மனப்பான்மையினரெல்லாம் வெளியேறியுள்ள ஒரு புதிய காங்கிரஸ் – புரட்சிக் காங்கிரஸ் – நல்ல நம்பிக்கையுள்ள ராகுல் காந்தி போன்றவர்களுடைய காங்கிரஸ் இன்றைக்கு இருக்கிறது.
இதனுடைய தொடக்கம் எப்பொழுது? இங்கே படங்களாக இருப்பவர்களின் பங்கு உண்டு.
பிரதமராக இருந்த நேருவின் ஆதரவு இருந்த நேரத்தில்கூட, அம்பேத்கரால் பெண்களுக்குச் சொத்துரிமை மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
ஆனால், கலைஞர் அதற்குரிய முயற்சியை எடுத்தார். காரணம், தந்தை பெரியார், 1929 ஆம் ஆண்டு நடத்திய செங்கற்பட்டு மாகாண மாநாட்டில் சுயமரியாதை உணர்வோடு ‘‘பெண்களுக்குச் சொத்துரிமை” வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்.
கலைஞர் 2006 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபொழுது, ஒன்றியத்தில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில், பெண்களுக்குச் சொத்துரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதுதானே இன்றைக்கு நம்முடைய இன எதிரிகளுக்கு, ஹிந்துத்துவாவினருக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. அதுதானே பலருக்குக் கோபத்தை உண்டாக்குகிறது.
எனவேதான், மேனாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் ஓர் அமைதிப் புரட்சியை, பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல நண்பர்களே, சமூகத் துறையில், பண்பாட்டுத் துறைகளிலும் செய்த ஒருவர்.
அதுபோலவே, எங்கள் குடும்பத்துச் செல்வம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோ அவர்களைப்பற்றி இங்கே சொன்னார்கள்.
மனதில் பட்டதை ஒளிக்காமல், பின்வாங்காமல் நிற்கக்கூடியவர்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!
மனதில் பட்டதை ஒளிக்காமல், யாருக்காகவும் பின்வாங்காமல் சொல்லக்கூடியவர் என்று.
ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு – ஃப்ராங்க் என்று சொன்னால், வெளிப்படையாகப் பேசுவது என்று பொருள்.
ஆனால், நம்முடைய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மனதில் நினைப்பதை வெளிப்படையாகச் சொல்வார். வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என்பதுபோல.
சொன்னதைப் பின்வாங்கிக் கொள்ளக்கூடிய புத்தி அவருக்குக் கிடையாது – பெரியார் பாரம்பரியம் என்பதால்.
‘‘நான் சரியாக சிந்தித்துச் சொல்லியிருக்கிறேன்; ஆகவே, அதிலிருந்து நான் பின்வாங்க மாட்டேன்’’ என்ற உறுதி மிக முக்கியமானதாகும்.
பொதுவாழ்வில், இனி கிடைக்க முடியாதவர்கள், இழக்கக் கூடாதவர்கள் – இந்த இருவரும்.
இவர்கள் வெறும் படங்கள் அல்ல – பாடங்கள்!
எனவே, நண்பர்களே! இந்த இருவருக்கும் படத்திறப்பு நிகழ்விற்கான ஏற்பாட்டினை செய்தமைக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரையும், அவரோடு ஒத்துழைத்திருக்கின்ற அனைத்துத் தோழர்களையும் பாராட்டி, நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரே மேடையில், ஒருங்கிணைந்து அத்தனைத் தலைவர்களும் இங்கே இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய இந்த ஒருங்கிணைப்பு, எல்லா நேரத்திலும் தொடரவேண்டும் என்று, இந்தியா கூட்டணிக்காக இருக்கக்கூடிய உழைப்பாளன் என்ற முறையில் நான் அன்போடு உங்களை வேண்டிக் கொள்கிறேன்.
எப்பொழுதுமே துயர நிகழ்ச்சியில், மகிழ்ச்சி கரமான நேரத்தை உருவாக்குவதற்கும், எல்லோரும் ஒன்று சேர்வார்கள். , இதுபோன்ற கூட்டணி, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒருங்கிணைந்து இருக்கவேண்டும்.
இங்கே நுழையலாமா? அங்கே நுழைய லாமா? இவருக்குள் கலகம் செய்யலாமா? என்ப தற்கெல்லாம் இடந்தராமல், கொள்கை உறுதியோடு இருங்கள்; இங்கே படமாக இருக்கக்கூடியவர்கள் கடைசி வரையில் கொள்கையில் உறுதியோடு இருந்தார்களோ, இயக்கத்திற்காக எப்படியெல்லாம் அவர்கள் உழைத்துக் கொண்டிருந்தார்களோ, அந்தப் படங்களைப் பார்த்து, பாடங்களாகப் பெறுங்கள்.
இந்தப் படங்களை, படங்களாகப் பார்க்காதீர்கள்; பாடங்களாகப் பெறுங்கள். பொதுவாழ்க்கையில் வெற்றி பெறுவோம்!
பாசிசம் இந்த நாட்டில் நீடிக்கக்கூடாது. இந்த நாட்டில் ஜனநாயகம் விடைபெறக்கூடாது.
எனவே, இந்த இரு படங்களும், ஜனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற படங்கள்.
இந்த இரு படங்களும், குலதர்மத்தை அழித்து, சம தர்மத்தை உருவாக்கவேண்டும் என்பதற்கான படங்கள்.
இந்த இருவருக்கும் புகழ் வணக்கம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் உரையாற்றினார்.