சென்னை, நவ.23- நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கப்பட்டுள்ள மாணவா்கள் குறித்த விவரங்களை இணைய வழியே பதிவேற்றுவதற்கான அவகாசத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) மீண்டும் நீட்டித்துள்ளது. இது தொடா்பாக என்எம்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கை, தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்படுவது அவசியம். இதன் படி, நிகழாண்டில் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவா்களின் விவரங்கள், மதிப்பெண் விவரம், இடஒதுக்கீடு விவரம், கட்டண விவரம் உள்ளிட்டவற்றை என்எம்சி இணையப் பக்கத்தில் பதிவேற்ற கடந்த 8-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இது 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக இந்த அவகாசம் டிசம்பா் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
இதேபோன்று, எம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்கப் பட்டிருந்தன. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, இதற்கான அவகாசத்தையும் டிசம்பா் 10-ஆம் தேதி வரை நீட்டிக்க தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.