சென்னை உயர்நீதி மன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக சில மாதங்கள் பொறுப் பேற்று சிறப்பாக கட மையாற்றியவரும் மூத்த நீதிபதிகளில் ஒருவருமான ஜஸ்டீஸ் திரு. டி. கிருஷ்ணகுமார் அவர்களை, உச்சநீதிமன்றத்தின் ‘கொலீஜியம்’ இவரது ஆற்றல், அனுபவம் குறித்துப் பாராட்டி, மணிப்பூர் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பரிந்துரைத்து, குடியரசுத் தலைவரும் அதை ஏற்று, இவரை அப்பெரும் பதவிக்கு நியமனம் செய்துள்ளார்.
இது வரவேற்கத்தக்க நியமனம் என்பதோடு இவரைப் பரிந்துரைக்கும் பதிவில், உச்சநீதிமன்ற கொலீஜியம். ‘‘இவர் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி என்பதோடு, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவரும் கூட’’ என்பதை ஒரு முக்கியக் காரணியாகக் குறிப்பிட்டிருப்பது, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைகளிலும் நியமனங்களிலும் நமது இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த ‘அரசியல் சட்டப்படிக்கான சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும்’ என்ற கொள்கை – கோட்பாடு கோரிக்கையினை ஏற்றுள்ள நிலைக்கான வெற்றியும் ஆகும்!
முன்பு பல ஆண்டுகளாக ஏற்கப்படாத இச்சமூகநீதி, இப்போது வெளிப்படையாகவே முக்கியத் தகுதிகளில் ஒன்றாகவும் சமூகநீதி ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.
இனி காலி இடங்களை நிரப்பும் போது இதற்குரிய முக்கியத்துவம் முன்னுரிமை பெற வேண்டும். நியமனம் பெற்றவர். ‘‘He is endowed with high level of integrity and honesty’’ என்றும் குறிப்பிட்டுள்ளது மிகவும் கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய மகிழ்ச்சியான செய்தி.
மணிப்பூர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்பமை ஜஸ்டிஸ் டி. கிருஷ்ணகுமார் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
21.11.2024