முதலமைச்சர் சித்தராமையா சவால்
பெங்களூரு, நவ.12- மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி அங்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சில நாள்களுக்கு முன்பு அவர் பிரச்சார கூட்டத்தில் பேசும்போது, மராட்டிய தேர்தல் செலவுக்காக கருநாடகத்தில் காங்கிரஸ் கட்சி கலால்துறையில் ரூ.700 கோடி ஊழல் செய்து இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
இதை கருநாடக காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பாக முதலமைச்சர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் மறுத்தனர். இந்த நிலையில் ஹாவேரி மாவட்டம் சிக்காவி இடைத்தேர்தலையொட்டி நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் சித்தராமையா பேசியதாவது:-
‘‘இந்த நாட்டின் பிரதமர் மோடி அதிக பொய் பேசுவதை பார்த்து எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பிரதமர் மோடி இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகிக் கொள்கிறேன். ஒருவேளை அவர் இதை நிரூபிக்கத் தவறினால் அவர் அரசியலை விட்டு விலக வேண்டும். பிரதமர் மோடி கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கவேண்டும். ஆனால், பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. சுதந்திர இந்திய வரலாற்றில் இதுபோன்ற அதிக பொய் பேசும் பிரதமரை நான் இதுவரை பார்த்ததே இல்லை.’’
-இவ்வாறு முதலமைச்சர் சித்தராமையா பேசினார்.
தேவை விளக்கம்!