போலி பான் கார்டுகள் மூலமாக பண மோசடி நடப்பதை தடுக்க, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பல முறை இதற்கு அவகாசம் கொடுத்தும் கூட, இன்னும் பலர் இதை செய்யவில்லை. இந்நிலையில், வரும் டிச.31 இதற்கான கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலும் இணைக்காவிட்டால், பான் கார்டு ரத்தாகி விடும். அதை புதுப்பிப்பதும் கடினமான நடைமுறை என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டுக்கு ரூ.2,153 கோடி
ஷிவ் நாடார் நன்கொடை – அம்பானி..?
இந்திய அளவில் அதிக நன்கொடை வழங்குபவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் அவரின் குடும்பத்தினர் ரூ.2153 கோடியை நன்கொடையாக அளித்துள்ளனர். 2024-இல் அம்பானி குடும்பம் ரூ.407 கோடியும், பஜாஜ் குடும்பம் ரூ.352 கோடியும், பிர்லா குடும்பம் ரூ.334 கோடியும் அளித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளார்கள். அதானி குடும்பத்தினர் சுமார் ரூ.303 கோடி நன்கொடையாக வழங்கி 5-ஆம் இடத்தில் உள்ளனர்.
ரயிலில் சிறார்களுக்கு
பயணச்சீட்டு தேவையா?
ரயிலில் சிறார்களுக்கு எடுக்க வேண்டிய பயணச்சீட்டு குறித்து இந்திய ரயில்வே (IRCTC) தெளிவாக குறிப்பிட்டுள்ளது. 5 வயது வரையிலான சிறார்களுக்கு பயணச்சீட்டு எடுக்கத் தேவையில்லை என்றும், ஆனால் இருக்கை தேவையெனில் கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 5-11 வயது சிறார்களுக்கு முழு படுக்கை வசதி தேவையெனில் கட்டணம் செலுத்த வேண்டும். முழு படுக்கை வசதி வேண்டாமெனில் பாதி கட்டணம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இனியாவது ரயில்வே
விழித்துக் கொள்ளுமா..?
ரயிலின் இரண்டு பெட்டிகளுக்கு நடுவே நின்று, அவற்றை பிரிக்கும் ஆபத்தான பணியே கப்ளிங் (COUPLING) என அழைக்கப்படுகிறது. 9.11.2024 அன்று இப்பணியில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர், இரு பெட்டிகளுக்கு நடுவே சிக்கி உயிரிழந்தார். வெளிநாடுகளில் ரயிலின் இரு பெட்டிகளை இணைக்க, நவீன ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வல்லரசு பட்டியலில் இடம்பெற துடிக்கும் இந்தியாவில் இன்னும் பழங்கால முறையே கடைப்பிடிக்கப்படுகிறது.
யூனியன் வங்கியில் 1,500 காலி இடங்கள்: மூன்று நாளே அவகாசம்
யூனியன் வங்கியில் 1,500 லோக்கல் பேங்க் ஆபிசர் நிலையிலான பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதற்கு unionbankofindia.co.in இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கான கால அவகாசம் வருகிற 13ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆதலால் வேலைக்கு சேர விரும்புவோர் உடனே அந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.