காந்திநகர், நவ. 8- இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமான மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் வழித்தடத்தில், குஜராத்தின் ஆனந்த் நகரில் உள்ள மாஹி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
இந்த நிகழ்வில், பாலத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட் டிருந்த மூன்று தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி மரணமடைந் தனர். தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீவிர மீட்புப் பணிகளை மேற் கொண்டதில், ஒரு தொழிலாளி பத்திரமாக மீட்கப்பட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்றவர்களை அடுத்தடுத்து மீட்டனர்.
2017 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த புல்லட் ரயில் திட்டம், மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு முக்கிய நகரங்களை இணைத்து, பயண நேரத்தை குறைத்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், துவக்கம் முதலே இந்த ரயில் திட்டம் பண விரயம் – நேர விரயத்தோடு அவ்வப்போது விபத்துகளையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. இதுவரை புல்லட் ரயில் கட்டுமான விபத்தில் 5 பேர் மரணமடைந்துள்ளனர்
குஜராத் மாநிலம், அகமதா பாத்தில் இருந்து மும்பைக்கு புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக குஜராத் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானப் பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. இந்த புல்லட் ரயில் பாதை 508 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டு வருகிறது. இதில் 352 கிலோமீட்டர் தூரம் குஜராத் எல்லைக்குள் வருகிறது.
மகாராட்டிராவிற்கு உட்பட்ட பகுதியில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு, தற்போது நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டு வேலைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகின்றன. குஜராத்திற்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான மேம்பாலங்கள் இதற்காக கட்டப்பட்டு வருகிறது.
அனந்த் மாவட்டத்தில் உள்ள வசாத் என்ற இடத்தில் புல்லட் ரயில் கட்டுமானப் பணிகளுக்காக கான்கிரீட் பிளாக்குகள் தயார் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்காலிக ஷெட் திடீரென நேற்று (7.11.2024) மாலை சரிந்து விழுந்தது. இதில் நான்கு தொழிலாளர்கள் கான்கிரீட் பிளாக்குகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
ஒவ்வொரு கான்கிரீட் பிளாக்கும் அதிக எடை கொண்டதாகும். எனவே கிரேன் மூலம் அவை அப்புறப்படுத்தப்பட்டு இடி பாடுகளில் சிக்கிக்கொண்டவர்கள் மீட்கப்பட்டனர்.
அதில் இரண்டு பேர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் உயிரோடு மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். மீட்புப் பணியில் கிராம மக்களும் ஈடுபட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் வதோதரா அருகே புல்லட் ரயில் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் கிரேன் ஒன்று சரிந்து விழுந்ததில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து, புல்லட் ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு, புல்லட் ரயில் திட்டத்தின் நிறைவு காலத்தை மேலும் தள்ளிப்போடக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா ஜப்பான் போன்ற நாடுகள் திட்டம் அறிவித்த ஒராண்டிற்குள்ளேயே பாதை அமைத்து புல்லட் ரயில்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் வகையில் திட்டத்தை நிறைவேற்றுகிறது. ஆனால் திட்டம் துவங்கி 7 ஆண்டுகள் முடிந்தும் தொடர்ந்து விபத்துகளோடு புல்லட் ரயில் வேலைகள் நடந்துகொண்டு இருக்கிறது.