புதுடில்லி, நவ.6- வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஆராயும் குழுவில் இருந்து விலகும் நிலை ஏற்படும் என்று நாடாளுமன்ற எதிா்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஆராயும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் தங்களுக்கு முட்டுக்கட்டையிடப்படுவதால், அந்தக் குழுவில் இருந்து தாங்கள் விலகும் நிலை ஏற்படும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் சமா்ப்பிக்க உள்ள கடிதத்தில், எதிா்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் குழுவின் தலைவா் ஜகதாம்பிகா பால் மீதான அதிருப்தி காரணமாக இந்த முடிவுக்கு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டு பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துகளை, மாநிலங்களில் வக்ஃப் வாரியங்கள் நிா்வகிக்கின்றன. இந்நிலையில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆராய்ந்து வருகிறது.
இந்தக் கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள ஆளும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், எதிா்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராகவும் உள்ளனா்.
100-க்கும் மேற்பட்ட திருத்தங்கள்: வக்ஃப் சட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட திருத்தங்களை மேற்கொள்ள மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ள நிலையில், மசோதாவில் 44 திருத்தங்கள் மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழிக்கப் போகும் திருத்தங்கள்: இதுகுறித்து எதிா்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகையில், ‘வக்ஃப் வாரியம் என்ற சட்ட நிறுவனத்தின் மத, ஆன்மிக மற்றும் தாா்மிக கட்டமைப்பை மசோதாவில் இடம்பெற்றுள்ள திருத்தங்கள் அழிக்கப் போகின்றன. இது அரசமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையினருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள உரிமைகளை பறிப்பது போன்ற பிம்பத்தை இந்தியா மீது ஏற்படுத்தும்.
இந்த காரணங்களுக்காக மசோதாவின் ஒவ்வொரு பிரிவையும் ஆராயவும், விவாதிக்கவும் போதிய நேரம் கிடைக்கும் வகையில், கூட்டு குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தனா்.
இந்நிலையில், அந்தக் கூட்டு குழு தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘நாடாளுமன்ற கூட்டு குழுத் தலைவா் ஜகதாம்பிகா பால் ஒருதலைபட்சமாக முடிவுகளை எடுப்பதாகவும், கூட்டு குழு நடவடிக்கைகளுக்கு சேதம் விளைவிப்பதாகவும் எதிா்க்கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
ஜகதாம்பிகாவுக்கு உத்தரவிட வேண்டும்: இதுதொடா்பாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை எதிா்க்கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (5.11.2024) சந்தித்து கடிதம் அளிக்க உள்ளனா். அந்தக் கடிதத்தில், ‘வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன், கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ளவா்களுடன் முறைப்படி ஆலோசனை நடத்த ஜகதாம்பிகா பாலுக்கு உத்தரவிட வேண்டும்.
கூட்டுக் குழுவின் செயல்பாடு நியாயமாகவும் நோ்மையாகவும் செயல்படுகிறது என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க இந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இல்லையெனில் எங்களுக்கு முட்டுக்கட்டையிடப்படுவதால், கூட்டு குழுவில் இருந்து விலகும் கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்படுவோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி, ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாண் பானா்ஜி உள்பட பலா் கையொப்பமிட்டுள்ளனா்’ என்று தெரிவித்தன.