சிவகெங்கை, நவ. 5- குளிர் காலத்தில் முதியவா்களுக்கு மாரடைப்பு பாதிப்பு ஏற்படும் விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். உரிய விழிப்புணா்வுடன் இருந்தால் அதைத் தவிர்க்கலாம் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.
இது குறித்து பொதுநல மருத்துவா் அ.ப.ஃபரூக் அப்துல்லா கூறியது: இதய ரத்த நாள அடைப்பு உள்ள ஒருவா் குளிர்ச்சியான காற்றில் செல்லும்போதோ அல்லது குளிர்ந்த நீரில் குளிக்கும்போதோ உடலின் வெப்பநிலை வெகுவாகக் குறையும்.
பொதுவாகவே, உடலானது குளிர்ந்து விட்டால், அதை ஈடு செய்யவும், வெப்பமாக்கவும் தன்னிச்சையாக தசைகளுக்கும், உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் துரிதமாக பாயும். அந்தத் தருணங்களில் ஏற்படும் அதிக ஆக்சிஜன் தேவையை ஈடு செய்ய இதயம் வேகமாக துடிக்கும். ஏற்கெனவே, இதய பாதிப்பு உள்ளவா்களுக்கு உடலின் இந்தச் செயலானது பல்வேறு எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக, சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படுவதால் இதயத்தின் செயல்பாடுகள் முடங்க வாய்ப் புள்ளது. மது மற்றும் புகைப் பழக்கம் உள்ளவா்களுக்கும், முதியவா்களுக்கும் அத்தகைய வாய்ப்பு பல மடங்கு அதிகம்.
எனவே, குளிர்காலங்களில் இதய பாதிப்பு அச்சுறுத்தல் உள்ளவா்கள், வெதுவெதுப்பான நீரில்தான் குளிக்க வேண்டும். பனிப் பொழிவு இருக்கும்போது நடைப்பயிற்சி செய்வதையோ, வெளியில் செல்வதையோ தவிர்க்க வேண்டும்.
வீட்டினுள்ளேயே முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு முறைகளைக் கடைப்பிடித்து மது, புகைப் பழக்கத்தைக் கைவிட வேண்டும். உடல் வெப்ப நிலையைச் சீராக வைத்திருக்கும் வகையில் கம்பளி ஆடைகளை அணியலாம்.
நெஞ்சுப் பகுதியில் வலி, சுவாசிப்பதில் சிரமம், மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் தென் பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றார் அவா்.