அய்தராபாத், நவ. 5- வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில், முஸ்லிம்களின் உணா்வுக்கு தெலுங்கு தேசம் (டிடிபி), அய்க்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சிகள் மதிப்பளிக்க வேண்டும் என்று ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டு பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் ‘வக்ஃப்’ சொத்துகளை, மாநிலங்கள் அளவில் வக்ஃப் வாரியங்கள் நிர்வகிக்கின்றன. இந்நிலையில், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.
முஸ்லிம்களின் நிலம், சொத்துகள், மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம் ஆகியவற்றைப் பறிக்கும் நோக்கில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ் சாட்டியுள்ளன.
தற்போது இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில், டில்லியில் ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் முஸ்லிம் அமைப்பு சார்பில் ‘அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் 3.11.2024 அன்று கருத்தரங்கு நடை பெற்றது.
500 ஆண்டுகள் பழைமையான மசூதிகள்: இந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் தலைவா் மவுலானா அா்ஷத் மதனி பேசுகையில், ‘முஸ்லிம் மதத்தைச் சோ்ந்த முன்னோர்களால் வக்ஃப் முறை உருவாக்கப்பட்டது. வக்ஃப் சொத்துகளுக்கு அல்லாவே உரிமையாளா். அந்த சொத்துகள் மீது மசூதிகள் கட்டப்பட்டுள்ளன. டில்லியில் ஏராளமான சொத்துகள் உள்ளன.
அவற்றில் சில மசூதிகள் 400 முதல் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதால், இந்த மசூதிகளை அரசு பாதுகாக்க வேண்டும். எனினும் இந்த மசூதிகளை அபகரிக்க ஒரு கூட்டம் முயற்சிக்கிறது. 500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மசூதிக்கான ஆவணங்களை யாரால் வழங்க முடியும்? வக்ஃப் நிலத்தில் கட்டப்படும் எந்தவொரு மசூதியும் வக்ஃப் சொத்துதான் என்று சட்டம் சொல்கிறது.
2 ஊன்றுகோல்களை நம்பியே ஒன்றிய அரசு: பாஜகவின் கொள்கைகளை மக்கள் ஏற்கவில்லை. தம்முடன் கூட்டணியில் உள்ள ஆந்திர முதலமைச்சரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, பீகார் முதலமைச்சரும் ஜேடியு தலைவருமான நிதீஷ் குமார் ஆகிய 2 ஊன்றுகோல்களைத்தான் தற்போது ஒன்றிய பாஜக அரசு சாந்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு சந்திரபாபு நாயுடுக்கு நான் அழைப்பு விடுத்தேன். ஆனால் அவா் தனது கட்சியின் துணைத் தலைவா் நவாப் கானை அனுப்பினார். அவா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவா்களின் உணா்வுகளை சந்திரபாபு நாயுடுக்கு தெரியப்படுத்துவார்.
முஸ்லிம்களின் உணா்வுகளை புறக்கணித்துவிட்டு வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டால், அதற்கு ஒன்றிய அரசு மட்டுமின்றி அதனுடன் கூட்டணியில் உள்ள டிடிபி, ஜேடியு கட்சிகளும் பொறுப் பேற்க வேண்டியிருக்கும்.
எனவே வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில், முஸ்லிம்களின் உணா்வுகளை அவ்விரு கட்சிகள் கருத்தில் கொள்ள வேண்டும்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மதச்சார்பின்மையை ஆதரிக்கும் கட்சிகள் ஆபத்தான வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு துணை நிற்பதில் இருந்து விலகியிருக்க வேண்டும்’ என்று கோரினார்