தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தென்மாவட்டத்தில் நடத்தப்படும் கல்லூரியிலிருந்து கந்த சஷ்டி கவசம் பாட முருகன் கோயிலுக்கு மாணவர்/மாணவிகளை அனுப்ப வேண்டும் என்று துறையின் அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்படுவதாக ஒரு செய்தி வருகிறது. கல்லூரி நடத்தப்படுவது எந்தத் துறையால் என்றாலும், மாணவர்கள் வந்திருப்பது கல்வி கற்கத் தானே ஒழிய, பஜனை செய்ய அல்ல. தேர்வுக் காலம் என்றாலும், மற்ற நேரங்கள் என்றாலும் மாணவர்களை இத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்கக் கட்டாயப்படுத்துவதா?
அறநிலையத் துறை சார்பில் நடத்தப்படும் மேலும் சில பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடம் பாராயணம் செய்ய வைக்க முயல்வதாகச் செய்திகள் வந்துள்ளன.
திராவிடர் கழகத் தலைவர் (27.08.2024) உள்ளிட்ட பல தரப்பாரின் கடும் கண்டனத்துக்கு உள்ளானதும், தி.மு.க.வினாலேயே ஏற்க முடியாததுமான சில தீர்மானங்களைச் செயல்படுத்தும் முனைப்பாகவே இத்தகைய நடவடிக்கைகள் அமையவில்லையா?
திராவிட மாடல் அரசின் கொள்கை செயல் திட்டங்களுக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது யார் என்ற கேள்வி எழவில்லையா?
அரசின் கல்விக் கூடங்கள் மதச்சார்பற்ற தன்மையில் நடக்க வேண்டும். பக்தியை வளர்ப் பதும் கட்டாயப்படுத்தி மாணவர்களைப் பாராயணம் செய்விப்பதும் அற நிலையத் துறையின் வேலை அல்ல என்பதை அழுத்தந்திருத்தமாக நினைவூட்ட விரும்புகிறோம்.