ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு
புதுடில்லி, நவ.4 சீக்கிய மற்றும் புத்த மதத்தை தவிர பிற மதங்களுக்கு மாறிய நபா்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான (எஸ்சி) அங்கீகாரம் வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ள மேனாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக கடந்த அக்டோபா் 10-ஆம் தேதியே அந்த ஆணையம் அறிக்கை சமா்ப்பிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அடுத்த ஆண்டு அக்டோபா் 10-ஆம் தேதி வரை ஆணையத்தின் பதவிக் காலத்தை நீட்டிப்பதாக ஒன்றிய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த நவம்பா் 1-ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதம் மாறியவா்களுக்கு தாழ்த்தப் பட்டோருக்கான அங்கீகாரம் வழங்குவது குறித்து விசாரணை மேற்கொள்ள கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் கடந்த 2022, அக்டோபா் 6-ஆம் தேதி விசாரணைக்கான ஆணை யச் சட்டம், 1952-இன்கீழ் ஆணையம் அமைக்கப்பட்டது. சீக்கிய மற்றும் புத்த மதங்களைத் தவிர பிற மதங்களுக்கு மாறிய நபா்களுக்கான உரிமைகள், சமூக நீதி குறித்தும் அவா்களுக்கு பட்டியலினத்தவா் அங்கீகாரம் வழங்குவது குறித்தும் இந்த ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
கிறிஸ்தவ மற்றும் இசுலாமிய மதங்களில் பட்டியலினத்தவா் பிரிவில் சோ்க்கப்படாதோருக்கு இந்த அங்கீகாரம் வழங்குவது தொடா்பாக சமூகவியலாளா்கள், வரலாற்றியலாளா்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகத்தை சோ்ந்த பிரதிநிதிகளிடம் மதம் மாறியதால் ஜாதிய அடிப்படையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆணையம் கேட்டறிந்து வருகிறது.
தற்போது ஒன்றிய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி 2025, அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் இந்த விவகாரம் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க ஆணையத்துக்கு உத்தர விடப்பட்டுள்ளது.