சென்னை, அக். 31- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சிஏ, கம்பெனி செக்ரட்டரி, அய்சிடபிள்யூஏ தேர்வுகளில் தேர்ச்சி பெற தனியார் நிறுவனத்துடன் இணைந்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்
இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி நேற்று (30.10.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
“தாட்கோ நிறுவனம் சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் 100 பேருக்கு சிஏ–இன்டர்மீடியேட், கம்பெனி செக்ரட்டரி-இன்டர்மீடியேட், காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட- இன்டர்மீடியேட் ஆகிய தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளது.
பயிற்சி பெற விரும்பும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பி.காம் பட்டதாரியாக இருக்க வேண்டும். அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஓராண்டு கால பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தங்கும் வசதி, உணவு வசதி தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். இந்த பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் தாட்கோ நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tahdco.com) பதிவுசெய்யலாம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.