கோலாலம்பூர், அக். 28- மலேசியாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பு மலேசிய திராவிடர் கழகம் பெரியார் நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா முனைவர்
மு.கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கழகத் தோழர்களும் பெரியார் சிந்தனைவாதிகளும் மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
தமிழ் பள்ளி மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் திருக்குறள் குறட்பாக்களை கூட்டத்தில் படித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் தமிழ் வேந்தன் திராவிட மணி நல்லதம்பி மற்றும் கழக தோழர்கள் தா பரமசிவம் , இரா செல்லமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
திராவிடக் கழகத்தின் (பத்தாங் பெர்சுந்தை) வரலாறு பற்றிய ஒலி-ஒளி காட்சி இடம் பெற்றது. அறிஞர் அண்ணா, பேராசிரியர் அன்பழகன், ஆசிரியர் கி. வீரமணி மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களின் வரவேற்பு நிகழ்ச்சிகளின் படங்கள் திரையிடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முனைவர் மு. கோவிந்தசாமி, திராவிட இயக்கத்தின் சாதனை என்ன என்று கேள்வி எழுப்புவோருக்கு பதில் அளிக்கும் வண்ணம் இடுகாட்டிலே ஜாதிவாரி இடுகாடு என்றிருந்த நிலை மாற திராவிடர் கழகம் போராடி வெற்றி பெற்ற வழக்கினைப் பற்றி விரிவாக எடுத்துரைத்து, இதன் வழி இந்த மலேசிய நாட்டில் இந்த கொடுமை நிறுத்தப்பட்டது என்று கூறினார்.
பெரியார் மலேயா வருகையின்போது அவரின் உரைகளைக் கேட்டு இங் குள்ள தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங் கங்களை அமைத்தலும் மற்றும் தொழிலாளர் இலாகாவிலே புகார்கள் கொடுத்தும் தமது தோட்டப்புற வாழ்க்கையில் சுகாதாரம் மற்றும் சரியான வீடமைப்பு, பள்ளிக்கூடம் போன்ற வசதிகளை பெற போராடி வெற்றி பெற்றார்கள் என்பதையும் அவர் இங்கே குறிப்பிட்டார்.
ஆசிரியர் அவர்களுக்கு எப்போதும் வரவேற்பு கொடுக்கும் கந்தசாமி அவர்களின் புதல்வர் மற்றும் மதிகவின் மேனாள் தேசிய தலைவர் ப.மணியரசு அவர்களின் மகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தங்களின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்கள்.
சுமார் 60 முதல் 70 வரை தோழர்கள் தோழியர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு மதிய உணவுடன் சிறப்பாக நிறைவு எய்தியது. எதிர்வரும் நவம்பர் மாதம் ஈப்போ மாநகரில் சுயமரியாதை இயக்கத்தின் 100 ஆம் ஆண்டு விழா நடைபெறும்.