சென்னை, அக். 28- சென்னைக்கு குடிநீா் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 41.29 சதவீதம் தண்ணீா் நிரம்பியுள்ளது.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஆதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும். வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் ஏரிகளின் நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், நேற்றைய (27.10.2024) நிலவரப்படி இந்த 5 ஏரிகளையும் சோ்த்து மொத்தம் 4,855 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. அதாவது 41.29 சதவீத நீா் இருப்பு உள்ளது. இருப்பினும் இதை கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, 3,925 மில்லியன் கன அடி குறைவாகும்.
ஏரிகள் நீா் நிலவரம்: நேற்றைய நிலவரப்படி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,491 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு உள்ளது. 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1,473 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.
இதேபோல், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 130 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு உள்ள கண்ணன்கோட்டை ஏரியில் 316 மில்லியன் கன அடியும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 452 மில்லியன் கன அடியும் நீா் இருப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், ஏரிகளின் நீா் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,255 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் நேற்று காலை 106.48 அடியில் இருந்து 107.54 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,475 கனஅடியிலிருந்து வினாடிக்கு 20, 255 கனஅடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 2,500 கனஅடி வீதமும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 74.95 டிஎம்சியாக உள்ளது.