சென்னை, அக். 28- தமிழ்நாடு சட்டப்பேரவையில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக விதி 110இன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்புகளை அறிவித்திருந்தார்.
கடந்த ஜூன் மாதம் இந்த அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் “இளைஞர் எதிர்காலத்தை மனதில் வைத்து திட்டங்களை தீட்டி வருவது திமுக ஆட்சியின் தனித்தன்மை. இளைய சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி கொள்ளும் வகையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மிக மிக கவனமாக செயல்பட்டு வருகிறோம். அதனை அடிப்படையாகக் கொண்ட அறிவிப்பை இப்போது வெளியிட விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.
அதன்படி பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக 17, 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19, 260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3,041 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6,688 பணியிடங்களும் நிரப்பப்படும்.
வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46,584 பணியிடங்கள் நிரப்பப்படும் இது தவிர, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக்கூடிய 30,219 பணியிடங்களும் நிரப்பப்படும்.
இவற்றை மொத்தமாக சேர்த்துப் பார்க்கையில், 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்பதை தங்கள் வாயிலாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.