சென்னை, அக்.27– தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகள் மூலம் கூட்டுறவு வங்கி கணக்குகளை தொடங்கலாம் என புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
அதாவது, கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் அரசின் கடன் திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் எளிதாக பெறும் வகையில், அனைத்து நியாய விலைக் கடைகள் மூலம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சேமிப்பு கணக்கு தொடங்க நடவடிக்கை மேற் கொள்ள அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் விவசாய உறுப்பினர்களுக்கு பயிர்க்கடன், உரக்கடன், கால் நடை பராமரிப்பு கடன், மத்திய கால வேளாண் கடன் போன்ற பல்வேறு கடன்கள் வழங்கப் பட்டு வருகின்றன.
கடந்த 2023ஆம் ஆண்டில் 18.36 லட்சம் விவசாய உறுப்பினர் களுக்கு ரூ.15,500 கோடி அளவிற்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது சங்கங்களில் விவசாய உறுப்பினர்களாக உள்ள நபர்களின் சராசரி வயது 50 ஆக உள்ளது. எனவே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் புதிய வங்கியியல் திட்டங்களை வகுத்து, கூட்டுறவு கடன் நிறு வனங் களில் உறுப்பினர்களாக சேர்ப்பதற் கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து தரப்பு மக்களை யும் உள்ளடக்கி வங்கியினால் வழங்கப் படும் சேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் பொதுமக்களை சென்றடையும் வகையில் மத்திய கூட்டுறவு வங்கிகளின் செயல் பாடுகள் அமையப் பெற வேண்டும்.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் குடிமைப் பொருட்கள் பெறும் பொது மக்களுக்கு பல்வேறு துறை களின் நலத்திட்டங்களும் நியாய விலை கடைகள் மூலம் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
கூட்டுறவு நியாய விலை கடைகள் மூலம் கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு மற்றும் கடன் சேவைகள் பொதுமக்களை சென்றடையும் வகையில், நியாய விலை கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அப்பகுதி யில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் சேமிப்பு கணக்கு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளவும், பல்வேறு அரசின் கடன் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைய நடவடிக்கை மேற் கொள்ளவும், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் களையும் அரசு கேட்டுக் கொண் டுள்ளது.
அனைத்து நியாய விலை கடைகளிலும் மத்திய கூட் டுறவு வங்கிகளின் சேமிப்பு திட்டங்கள், நிரந்தர வைப்புத் திட்டங்கள் மற்றும் கடன் திட்டங்கள் குறித்தான கையேடுகளை விநியோகிக்கவும், நியாய விலை கடை பணியாளர் களை கொண்டு சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான விண்ணப் பங்களை பொதுமக்களுக்கு வழங்கி, விண்ணப்பங்களை கேஒய்சி (KYC) விவரங்களுடன் பூர்த்தி செய்து, நியாய விலை கடை பணியாளர்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை பெறவும், அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மூலம் தொடங்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு, நியாய விலை கடை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக, கணக்கு ஒன்றுக்கு ரூ.5 வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், நியாயவிலை கடைகள் மூலம் தொடங் கப்படும் சேமிப்பு கணக்குதாரர் களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள், அரசின் கடன் திட்டங்கள் மற்றும் நிரந்தர வைப்பு திட்டங்கள் குறித்தான கையேடுகள் மற்றும் வங்கியின் மூலம் வழங்கப்படும் மின் னணு பரிவர்த்தனை வசதிகள், ஏடிஎம் கார்டு வசதியினையும் மற்றும் வங்கி சேவையை எளிதில் பெறும் வகையில் அவர்களுக்கான கணக்கு தொடங்கியவுடன், இந்த வசதிகள் அடங்கிய தொகுப்பை (Account opening Kit) அவர்களுக்கு உடனடியாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
நியாயவிலை கடைகள் மூலம் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்குகள் குறித்தான முன்னேற்றத் தினை கண்காணித்து தெரிவிக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி யுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கு நேற்று (24.10.2024) எழுதியுள்ள கடிதத்தின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.