சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு சாடல்
திருநெல்வேலி, அக்.27- நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை துறை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு கலந்து கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான உபகரணங்களை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூடங்குளம் அணு உலை அணுக்கழிவுகளை அங்கேயே சேகரித்து வைத்துள்ளதால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அந்த அணுக்கழிவுகளை ராஜஸ்தான் போன்ற பாலைவனங்கள் நிறைந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லலாம். மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக ஏபிவிபி மாநிலத் தலைவர் சவிதா ராஜேஷ் நியமிக்கப்பட்டதில் எந்த குறையும் இல்லை. ஆனால், அவர் சிண்டிகேட் உறுப்பினராக பதவியேற்ற பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் ஏபிவிபி மாணவர்களுடன் செல்பி எடுத்து விளம்பரப்படுத்தியது தவறு. பொதுநலனில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.
ஆளுநர் திருப்பி அனுப்பும் மசோதாக்கள் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அதனை ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்பது சட்டமன்ற விதி. ஆனால் ஆளுநர் சட்டமன்ற மரபுப்படியும் சட்ட விதிப்படியும் செயல்படுவதில்லை. அவர் ஆர்.எஸ்.எஸ். விதிப்படி செயல்படுகிறார். சட்டப்பேரவையில் நிறை வேற்றப்படும் எந்த தீர்மானத்திற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிப்பது கிடை யாது. தமிழ்த்தாய் வாழ்த்து விவ காரத்தில் தூர்தர்ஷன் இயக்குநர் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாடு ஆளுநரை திருப்திப்படுத்து வதற்காக தூர்தர்ஷன் இயக்குநர் தமிழ்த்தாய் வாழ்த்தில் இரண்டு வரிகளை தவிர்த்து விட்டு படித்திருக்கலாம். யாரையோ திருப்திப்படுத்துவதற்காக என்னை குறிப்பிட்டு தவறான தகவலை பகிர்ந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததன் காரணமாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் இயக்குநர் எனக்கு மன்னிப்பு கடிதம் அளித்தார் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுக்கு
உயர்நீதிமன்ற கிளை பாராட்டு
மதுரை,அக்.27- உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குரைஞர்கள் காலியிடத்தை நிரப்பக் கோரிய மனுவை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் விசாரித்து வருகிறார். முந்தைய விசாரணையின்போது, அரசு வழக்குரைஞர் பணியிடங்கள் காலியாக இருந்தால், குற்றவியல் நீதி பரிபாலனம் முடங்கும் நிலை ஏற்படும். எனவே, காலியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு தரப்பில் அறிக்கையளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் 25.10.2024 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன்முகம்மது ஜின்னா ஆஜராகி, ‘‘உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி, காலியாக இருந்த 14 அரசு கூடுதல் குற்ற வியல் வழக்குரைஞர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள் ளன. காலியாக உள்ள 5 குற்றவியல் துறை துணை இயக்குநர் பணியிடங்களும் 2003ஆம் ஆண்டின் அரசு விதிகளின்படி நிரப்பத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இதையடுத்து நீதிபதி, ‘‘நீதிமன்ற உத்தரவை ஏற்று, குறுகிய காலத்திற்குள் குற்றவியல் வழக்குரைஞர் காலியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கும், அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன்முகம்மது ஜின்னாவிற்கும் பாராட்டுகள். துணை இயக்குநர் பதவி உயர்வினால் ஏற்படும் காலியிடங்களையும் ஒரு மாதத்திற்குள் நிரப்புவது குறித்து அரசிடம் விளக்கத்தை பெற்று தெரிவிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
கால்நடை கணக்கெடுப்பு துவக்கம்
விருதுநகர், அக்.27- விருதுநகர் மாவட்டத்தில் 21ஆவது கால்நடை கணக்கெடுப்பு துவங்கியது. விருதுநகர் நகராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 21ஆவது கால்நடை கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். கலெக்டர் கூறுகையில், இந்தியாவில் கால்நடை கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்பட்டு வருகிறது. 2019இல் 20ஆவது கால்நடை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. தற்போது 2024இல் 21ஆவது கால்நடை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு பணிகள் அக்.2024 முதல் பிப்.2025 வரை நடைபெறும். மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களில் கிராமவாரியாக மற்றும் நகர்புறங்களில் வார்டு வாரியாக கால்நடை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். கால்நடைகள் இருக்கிற மற்றும் இல்லாத அனைத்து வீடுகள், நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பண்ணைகள், இறைச்சி மற்றும் முட்டைக்கோழி பண்ணைகள், வழிபாட்டுதலங்கள், கோசாலைகளில் கணக்கெடுப்பு தகவல்கள் சேகரிக்கப்படும்.
கணக்கெடுப்பு பணியில் 207 கால்நடை கணக்கெடுப்பாளர்கள், 46 மேற்பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பில், கால்நடை வளர்ப்போரின் பெயர், முகவரி, ஆதார் எண், அலைபேசி எண், நில அளவு, முக்கிய தொழில், கல்வித்தகுதி கால்நடைகளின் எண்ணிக்கை, இனம், வயது, பாலினம், பயன்பாடு குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும். மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கணக்கெடுப்பு விரைவாக நடத்தப்பட உள்ளதால், வீடு தேடி வரும் கால்நடை மற்றும் புள்ளி விவர அலுவலர்களுக்கு தக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார். நிகழ்வில் கால்நடைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.