கொழும்பு, அக்.25 இரு நாடுகளின் மீனவா் பிரச்சினை தொடா்பாக, இந்தியா-இலங்கை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம் அக். 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இலங்கை தலைநகா் கொழும்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா்.
எல்லை தாண்டி மீன்பிடிப்பில் ஈடுபடுவதாக ராமநாதபுரம் உள்பட தமிழ்நாடு கடலோர மாவட் டங்களைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவதும், பின்னா் விடுவிக்கப்படுவதும் தொடா் நிகழ்வாகி வருகிறது.இதேபோல, இலங்கை மீனவா்களும் இந்திய கடலோரக் காவல் படையினரால் கைது நடவடிக்கைக்கு உள்ளாக் கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், இரு நாட்டு மீனவா்களின் பிரச்சினை குறித்து இந்தியா மற்றும் இலங்கை நாடுகளின் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம் வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கொழும்பு நகரில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் ஒன்றிய அரசு அதிகாரிகளும், தமிழ்நாடு அரசின் மீன்வளத் துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனா். இலங்கை தரப்பில் மீன்வளத் துறை, கடற்படை அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.
தமிழ்நாடு மீனவா்கள் கைது செய்யப்படுவது தொடரும் நிலை யில், இரு நாடுகளின் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் கோரிக்கை ஏற்பு: மீனவா்கள் கைது தொடா்பாக அனைத்துத் தருணங்களிலும் ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள் ளார். அந்தக் கடிதங்களில், ‘தமிழ் நாடு மீனவா்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவும், மீனவா்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான அபராதத் தொகையை தள்ளுபடி செய்யவும் இரு நாடுகளின் கூட்டுப் பணிக் குழுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் இலங்கையில் அந்த நாட்டின் புதிய அதிபா் அநுரகுமார திசாநாயகவை சந்தித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தமிழ் நாடு மீனவா்கள் கைது விவகாரம் தொடா்பாக பேசினார். குறிப்பாக, இந்த பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக் குழுக் கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
அதன்படி, இப்போது கூட்டுப் பணிக் குழுக் கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது. நிகழாண்டில் இதுவரை தமிழ்நாட்டைச் சோ்ந்த 350-க்கும் அதிகமான மீனவா்களும், 40-க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகு களையும் இலங்கைக் கடற் படை சிறைபிடித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் இதுதான் மிகவும் அதிகமாகும். அதில் மீனவா்கள் மட்டுமே அவ்வப்போது விடுதலை செய்யப்பட்டு வருகின் றனா். படகுகளை இலங்கை விடுவிப்பதில்லை.
மேலும், கைது செய்யப்படும் தமிழ்நாடு மீனவா்களுக்கு விதிக்கப் படும் அபாரத் தொகை அதிக அளவு இருப்பதால் அவா்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சினைகள் குறித்து கூட்டுப் பணிக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்க வேண்டுமென மீன வா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.