பக்தாத், அக். 24- இஸ்ரேல் எல்லைகளில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு ஈராக்கைச் சேர்ந்த ஷியா ஆயுதக் குழு பொறுப்பேற்றுள்ளது.
இது தொடர்பாக ஷியா ஆயுதக் குழு வெளியிட்டுள்ள அறிக் கையில், இஸ்ரேலின் எலியாட் பகுதியில் இரு டிரோன்கள் மூலம் எங்கள் போராளிகள் தாக்குதல் நடத்தினர். இதேபோன்று மீண்டும் இரு டிரோன்கள் மூலம் வடக்கு இஸ்ரேலில் உள்ள கோலன் பகுதியை இலக்காக வைத்து அனுப்பப்பட்டது. மேலும் ஒரு டிரோன் இஸ்ரேலின் ஸின்ஹுவா பகுதியில் தாக்கியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீன் மற்றும் லெபனானில் உள்ள எங்கள் மக்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், எதிரிகளின் நிலைகள் மீது தாக்குதலை வேகப்படுத்துவதைக் காட்டுவதற்காக இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் ஈராக் குறிப்பிட்டு உள்ளது.இலக்குகளில் நேரிட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து எந்தத் தகவலையும் ஈராக் தெரிவிக்கவில்லை.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படை யினருக்கும் இடையிலான போர் கடந்த ஆண்டு அக். 7ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் இஸ்ரேல், காஸா எல்லையில் ஊடுருவி பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. லெபனானிலும் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், பாலஸ்தீனத்துக் கான ஆதரவைக் காட்டும் வகையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு பெற்ற நாடுகளின் மீது ஈராக் அவ்வபோது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.