புதுடில்லி, அக். 24- வக்பு வாரிய மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் அவசரகதியில் செயல்படுவதாக திமுக துணைப்பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினரும், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் உறுப்பினருமாகிய ஆ.ராசா குற்றம் சாட்டினார்.
பாட்டில் வீச்சு
நாடாளுமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஆய்வு செய்ய பா.ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 22.10.2024 அன்று அக்குழு வின் கூட்டம் நடந்தபோது, குழுவில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப் பினர் கல்யாண் பானர்ஜி, கண்ணாடியால் ஆன தண்ணீர் பாட்டிலை உடைத்து தலைவரின் இருக்கை நோக்கி வீசினார். இது தொடர்பாக ஜெகதாம்பிகா பால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் மற்றொரு உறுப்பினரான தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
நீதி கிடைக்காது என்று சந்தேகம்
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைகள் ரகசியமானவை என்றும், அவற்றை வெளியே சொல்லக்கூடாது என்றும் குழுவின் தலைவருக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும், விதிகளை மீறி, அவர் கூட்ட நிகழ்வுகள் குறித்து பேட்டி அளித்தது கெட்ட வாய்ப்பானது. கூட்டத்தில் நடந்த அசம்பாவித சம்பவத்தையும் மீறி, குழு தலைவர் அவசரகதியில் கூட்டத்தை நடத்தி வருகிறார். அதனால், நீதி கிடைக்காதோ என்ற சந்தேகம், குழு உறுப்பினர்களிடமும், பொதுமக்களிடமும் எழுந்துள்ளது.
இந்த தடைகளையும் மீறி, நமது ஜனநாயக, மதச்சார்பற்ற மாண்புகளை கட்டிக் காக்க போராடுவோம்.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.