அகமதாபாத், அக்.23- குஜராத்தில், போலி நீதிமன்றம் நடத்தி, நீதிபதி போல் தீர்ப்பு அளித்து வந்த மோசடி மன்னன் கைது செய்யப்பட்டார்.
குஜராத் மாநிலம் காந்தி நகரை சேர்ந்தவர் மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன். இவர் காந்திநகரில் உள்ள தனது அலுவலகத்தை நீதிமன்றம் போல் நடத்தி, பொதுமக்களை ஏமாற்றி வந்தார்.
அவரது குறி, சிட்டி சிவில் நீதி மன்றத்தில் நிலப்பிரச்சினை தொடர்பான வழக்குகளை தாக்கல் செய்திருப்பவர்கள் தான். அவர்களை அணுகி, தன்னை நீதிமன்றம் நியமித்த பொது (மத்தி யஸ்தர்) என்று அறிமுகப்படுத்திக் கொள்வார். உங்கள் வழக்குகளை தனது தீர்ப்பாயத்தில் விசாரணை நடத்தி, விரைவில் தீர்ப்பு அளிப்பதாக ஆசை காட்டுவார். அதை நம்பி மனுதாரர்கள் வருவார்கள்.
நீதிபதிபோல் நடிப்பு
அவர்கள் முன்னிலை யில், அவர் நீதிபதி இருக்கையில் அமர்ந்து இருப்பார். அவருடைய கூட்டாளிகள், நீதிமன்றம் ஊழியர்களாகவும், வழக் குரைஞர்களாகவும் நடிப் பார்கள். உண்மையான நீதிமன்றம் போன்றே தோற்றமளிக்கும் வகையில் அனைவரது நடிப்பும், ஏற்பாடுகளும் இருக்கும். வழக்கை தீர்த்து வைத்ததற்கு கட் டணமாக ஒரு தொகையை பெற்றுக் கொள்வார். இப்படி ஏமாற்றி வந்த கிறிஸ்டியன், சமீபத்தில் காவல் நிலையத்தில்அளிக்கப்பட்ட புகாரால் பிடிபட்டார். கடந்த 2019ஆம் ஆண்டு, ஒரு அரசு நிலத்துக்கு உரிமை கொண்டாடி, ஒருவர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அவரை அணுகி தனது நீதிமன்றத்துக்கு கிறிஸ்டியன் அழைத்து வந்தார். அவருக்கு சாதகமாக தீர்ப்பு அளித்தார். அந்த மனுதாரரின் பெயரை சம்பந்தப்பட்ட நிலத்தின் வருவாய்த்துறை ஆவணங்களில் சேர்க்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
பதிவாளர் சந்தேகம்
அந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில், ஒரு வழக்குரைஞர் மூலமாக சிவில் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய வைத்தார். அம்மனுவில், தன்னால் பிறப்பிக்கப்பட்ட மோசடி உத்தரவையும் இணைக்க வைத்தார். 5 ஆண்டுகள் கடந்த நிலையில், சிட்டி சிவில் நீதிமன்றத்தின் பதிவாளர் ஹர்திக் தேசாய், அம்மனுமீது சந்தேகம் அடைந்தார். கிறிஸ்டியன், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தரும் அல்ல, அது உண்மையான தீர்ப்பாயத்தின் உத்தரவும் அல்ல என்று கண்டுபிடித்தார். அதையடுத்து, அகமதாபாத் காவல் நிலையத்தில் கிறிஸ்டியன் மீது புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறை யினர் கிறிஸ்டியனை கைது செய்தனர். அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய் யப்பட்டது. 2019ஆம் ஆண்டே போலி உத்தரவு பிறப்பித்திருப்பதால், அவர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர் மீது 2015ஆம் ஆண்டு மணிநகர் காவல் நிலையத் தில் அளிக்கப்பட்ட ஒரு மோசடி புகாரும் நிலுவையில் இருக்கிறது.