புதுடில்லி, அக். 22- நாடாளுமன்ற மேற்பார் வையில் உளவு அமைப்புகள் செயல்படும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு கனடாவில் உள்ள சா்ரே நகரில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜார் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். அவரின் கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார்.
இதைத்தொடா்ந்து கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில், அவா்களைப் பற்றிய தகவல்களை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஒன்றிய அரசுடன் பகிர்வதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவும், அந்நாட்டின் ஆா்சிஎம்பி காவல் படையினரும் அண்மையில் குற்றஞ்சாட்டினா்.
இதேபோல கடந்த ஆண்டு அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னூனை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டதாகவும், இதில் ‘ரா’ உளவு அமைப்பைச் சோ்ந்த மேனாள் அதிகாரி விகாஸ் யாதவுக்கு தொடா்புள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டினா்.
இந்த நிகழ்வுகள் காரணமாக நாடாளுமன்ற மேற்பார்வையில் உளவு அமைப்புகள் செயல்படும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடா்பாக 2011, 2021 மற்றும் நிகழாண்டில் நாடாளுமன்றத்தில் தான் தாக்கல் செய்த தனிநபா் மசோதா ஏற்கப்பட்டிருந்தால், பன்னாட்டளவில் தற்போது இந்தியாவுக்கு நோ்ந்துள்ள சங்கடமான நிலை ஏற்பட்டிருக்காது என்று அவா் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டார்.
நிகழாண்டு அவா் தாக்கல் செய்த தனிநபா் மசோதாவில், ‘உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இந்திய உளவு அமைப்புகள் செயல்படும் விதம், தமது அதிகாரங்களை அந்த அமைப்புகள் பயன்படுத்தும் விதம் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்த வேண்டும். அந்த அமைப்புகளை நாடாளுமன்றம் மேற்பார்வையிட தேசிய உளவு மற்றும் பாதுகாப்பு மேற்பார்வை குழுவை அமைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
டில்லியில் பள்ளி அருகே வெடிவிபத்து?
காவல் துறையினர் விசாரணை!
புதுடில்லி, அக். 22- டில்லியில் பள்ளியருகே வெடிவிபத்து ஏற்பட்டதுபோல் சப்தம் கேட்டதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். டில்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எஃப். பள்ளியருகே, 20.10.2024 அன்று காலையில் பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டதுபோல் சப்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர், தடயவியல் குழுக்கள், வெடிகுண்டு செயலிழப்பு குழுக்கள் நிகழ்வு இடத்துக்கு விரைந்தனர். சி.ஆர்.பி.எஃப். பள்ளியின் சுற்றுச் சுவர் சேதமடைந்தும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்தும், கடைகளின் பெயர்ப்பலகைகள் சேதமடைந்த நிலையிலும் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வுக்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், நிலத்தடி கழிவுநீர் பாதை ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.