கலைஞரிடமிருந்து மாறன் – மாறனிடமிருந்து செல்வம் என்று இலட்சிய எழுத்துகளாக நம்மோடு வாழ்ந்துகொண்டுள்ளனர்!
‘முரசொலி’ செல்வம் மறையவில்லை என்பதன் அடையாளமாக ‘‘திராவிட இதழியல் ஊடகவியல் பயிற்சி’’ அமைப்பை உருவாக்கவேண்டும்!
முதலமைச்சர் அவர்களுக்கு எனது கனிவான வேண்டுகோள்!
சென்னை, அக்.22 மறைந்த ‘முரசொலி’ செல்வம் அவர்கள் உடலால் மறைந்தாலும், அவர்தம் எழுத்துகளால், படைப்பாற்றலால் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் உள்ளார். அவரை வரலாற்றில் நிலைகொள்ளும் வண்ணம் அவர் பெயரால் ‘‘திராவிட இதழியல் ஊடகவியல் பயிற்சி அமைப்பு” ஒன்றைத் தொடங்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்தார் (முதலமைச்சர் அதை ஏற்றுக்கொண்டார்).
‘முரசொலி’ செல்வம் படத்தைத்
திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் உரை
நேற்று (21.10.2024) மாலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் மறைந்த ‘முரசொலி’ செல்வம் படத்தினைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.
அவரது நினைவேந்தல் உரை வருமாறு:
ஒரு மாபெரும் வரலாற்று பெருமைமிகுந்த
ஓர் இனத்திற்கு ஏற்பட்டு இருக்கின்ற இழப்பு!
மிகுந்த துன்பத்திற்கும், துயரத்திற்கும், சோகத்திற்கும் இடையில், அவை தொடரக்கூடாது என்பதற்காக இப்படிப்பட்ட படத்திறப்புகள்மூலமாக நமக்கு ஏற்பட்டு இருக்கிற, ‘முரசொலி’ செல்வம் அவர்களின் குடும்பத்திற்கு – அது அவரது குருதிக் குடும்பமாக இருந்தாலும், கொள்கைக் குடும்பமாக இருந்தாலும் அந்தக் குடும்பங்களுக்கு ஏற்பட்டு இருக்கின்ற இழப்பு மட்டுமல்ல; ஒரு சமுதாயத்திற்கு, ஒரு மாபெரும் வரலாற்று பெருமைமிகுந்த ஓர் இனத்திற்கு ஏற்பட்டு இருக்கின்ற இழப்பு என்பதை எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கின்ற இந்த அரிய படத்திறப்பு – புகழ் வணக்க நிகழ்ச்சி- இவற்றிற்குத் தலைமை தாங்கக்கூடிய ஒருவராக மட்டும் இல்லாமல், யாருக்கு நான் ஆறுதல் சொல்லவேண்டுமோ, யாரிடமிருந்து நான் ஆறுதலைப் பெறவேண்டுமோ, பெற முடியுமோ அதற்குரியவராக இருக்கும் எங்கள் அன்பிற்குரிய, பாசத்திற்குரிய, ஒப்புயர்வற்ற இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் திரும்பிப் பார்க்கக்கூடிய எங்கள் அன்பு முதலமைச்சர் அவர்களே,
இந்நிகழ்ச்சியில், சிறப்பாக ‘முரசொலி’ செல்வம் அவர்களுடைய நெருக்கத்தையெல்லாம் உணர்ந்து, இங்கே உரையாற்றியிருக்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சராகவும், சீரிய சிந்தனையாளராகவும் இருக்கக்கூடிய அன்புச்சகோதரர் மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்களே,
நமக்குப் படமாகவும், பாடமாகவும் இருக்கிறார் ‘முரசொலி’ செல்வம்!
ஒரு பிரபலமான பத்திரிகையாளர் என்பது மட்டுமல்ல, எந்த அடக்குமுறையையும் எதிர்த்துப் பேசக்கூடியவர் – இங்கே படமாக இருக்கக்கூடிய அருமை ‘முரசொலி’ செல்வம் அவர்கள், நமக்குப் பாடமாகவும் இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக, அவரை எந்த அடக்குமுறைத் துரத்தியதோ, அதே அடக்குமுறைக்கு ‘இந்து’ பத்திரிகையும் ஆளானது; அதனுடைய ஒரு பகுதியாக, அந்த அனுபவத்தை அனைவருக்கும் நினைவூட்டக் கூடிய அளவில், இங்கே கருத்துகளை எடுத்து வைத்திருக்கின்ற ‘இந்து’ பத்திரிகையின் ஆசிரியரும், முற்போக்காளருமான அருமைத் தோழர் என்.ராம் அவர்களே,
கலைத்துறையில் ‘முரசொலி’ செல்வம் அவருடைய பங்களிப்பு!
இந்நிகழ்ச்சியில் சிறப்பாகக் கலந்துகொண்டுள்ள இதுவரையில் எழுத்து வண்ணத்தைப்பற்றித்தான், செல்வம் அவர்களின் சாதனைகளைப்பற்றி மட்டும்தான் நாம் அறிந்திருக்கின்றோம்; ஆனால், ‘முரசொலி’ செல்வம் அவருடைய பங்களிப்பு என்பது இன்னொரு துறையிலும் உண்டு – அதுதான் கலைத்துறை; அவர் ஈடுபட்ட துறை – அதில் கலைஞர், அவருடைய பங்களிப்பு! மறைந்தும் மறையாமல் இந்த இயக்கத்திற்குக் கொள்கைக் கர்த்தாவாக இருக்கக்கூடிய அருமைச் சகோதரர், என்றைக்கும் நம் நினைவில் வாழக்கூடியவராக இருக்கக்கூடிய சகோதரர் முரசொலி மாறன் அவர்கள், எப்படியெல்லாம் நமக்கு நினைவூட்டுவாரோ, அதேபோல, கலைத்துறையில் இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் புரட்சித் தமிழர் இனமுரசு சத்யராஜ் அவர்களே,
இனமான பேராசிரியரைத் தொடர்ந்து சீரிய பகுத்தறிவாளராக இருக்கக்கூடிய நம்முடைய அருமை நண்பர் பேராசிரியர் நாகநாதன் அவர்களே,
நம்முடைய கொள்கை உணர்வோடு இருக்கக்கூடிய அளவிற்கு, எந்த சூழ்நிலை வந்தாலும், எப்படியெல்லாம் உங்களைத் தயாரித்திருக்கிறார் என்பதற்கு, எதிர்நீச்சலை எப்பொழுதும் ஏற்றுக்கொள்வோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இளவயதிலேயே பக்குவப்பட்டு இருக்கக்கூடிய எங்கள் ஆற்றல்மிகு மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களே,
திராவிட இனத்தின் எழுச்சிமிகு தோழர்களே!
அனைத்து அமைச்சர் பெருமக்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பெருமக்களே, நேரிடையாக இழப்பிற்கு ஆளாகி இருக்கக்கூடிய, அருமை நண்பர் செல்வம் அவர்களுடைய இழப்பினால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய அவருடைய குருதிக் குடும்பத்தைச் சார்ந்த அருமைச் சகோதரிகளே, சகோதரர்களே, நண்பர்களே மற்றும் இங்கே குழுமியிருக்கக்கூடிய இயக்கத்தின் செம்மாந்த தோழர்களே, போராளிகளாக நிற்கக்கூடிய திராவிட இனத்தின் எழுச்சிமிகு தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இப்பொழுது ஏற்பட்டு இருக்கின்ற சூழல், எப்படிப்பட்ட ஒரு கொடுமையான சூழல் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.
படத்திறப்பு என்ற கடமையை நிறைவேற்றும்படியாக அவர்கள் எனக்கு அளித்திருக்கிறார்கள்.
தந்தை பெரியார் தலைமையில், இராஜகோபாலாச்சாரியார் முன்னிலையில்…!
இது எப்படிப்பட்ட ஒரு சூழல் என்பதை உணர்ச்சிய மானது என்று சொன்னால், பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இடத்திற்கு அருகில் இருந்த ஆபர்ட்ஸ்ரி என்ற இடத்தில்தான், அருமை செல்வம் அவர்களுக்கும், செல்வி அவர்களுக்கும் வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெற்றது. கலைஞர் வரவேற்புரையாற்றினார்.
யாருடைய தலைமையில் என்றால், தந்தை பெரியார் அவர்களுடைய தலைமையில், இராஜகோபா லாச்சாரியார் அவர்களின் முன்னிலையில் அந்த மணவிழா நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியை மற்றவர்கள் எல்லாம் பார்க்கக்கூடிய வகையில், ‘பராசக்தி’ திரைப்படத்தில் கடைசியாக ஒரு பாட்டு வரும்; அந்தப் பாட்டோடு இந்த மணவிழாவையும் இணைத்திருப்பார்.
அன்னை மணியம்மையார் அவர்களும், நானும் அந்த மணவிழாவில் கலந்துகொண்டோம் என்ற நிகழ்வெல்லாம் என் மனத்திரையில் ஓடியது.
ஒருவருடைய வாழ்க்கை எப்படியெல்லாம் அமைய வேண்டும் என்பதற்கு அடையாளம் என்ன? திடீரென்று அவருக்குப் புகழ் வந்துவிடவில்லை; திடீரென்று அவருக்கு ஆற்றல் வந்துவிடவில்லை.
திராவிட இயக்கத்தில் இருக்கின்ற
நன்முத்துக்கள்!
மாறாக, அந்த அளவிற்கு அவர்கள் தயாரிக்கப் பட்டார்கள். ஒவ்வொரு சோதனையாலும், திராவிட இயக்கத்தில் இருக்கின்ற இந்த நன்முத்துக்கள் ஏவுகணைகளைப்போல, அவர்கள் தயாரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஓர் ஆயுதப் பாசறையில் எப்படி ஆயுதங்கள் உருவாகுமோ, அதுபோல, உருவானவர்கள்தான் இவர்கள் எல்லாம். அதைத்தான் இந்தப் படத்தைப் பார்க்கும்பொழுது, நாம் பாடமாகக் கருதவேண்டும்.
திராவிட இயக்கத்தின் தளபதி
ஏ.டி.பன்னீர்செல்வம்!
நம்முடைய திராவிட இயக்கத்தின் தளபதி ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள்; கலைஞர் அவர்களுக்கு மிக முக்கியமானவராக இருந்தவர். அவருடைய மாவட்டத்தைச் சார்ந்த பெருமையுடையவர்.
அவருடைய பெயரைத்தான் வைக்கவேண்டும் என்ற உணர்வோடு, ஒரு பக்கம் செல்வம்; இன்னொரு பக்கம் செல்வி.
அந்தப் பன்னீர்செல்வம் அவர்களைப்பற்றி, கூண்டில் நிறுத்தப்பட்ட இந்த செல்வத்தைப்பற்றி எழுதுகிற நேரத்தில், ‘‘கூண்டு கண்டேன்; குதூகலம் அடைந்தேன்” என்று எழுதியிருக்கிறார்கள்.
இதுதான் செல்வம் அவர்கள் நமக்கு விட்டுவிட்டுப் போன செல்வம், அறிவுச்செல்வம்!
நூறு கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாக்கினார் ‘முரசொலி’ செல்வம்!
இந்த புத்தகத்தில் அதனையெல்லாம் ஆவணப்ப டுத்தி இருக்கிறார். நூறு கட்டுரைகளைப் பதிவிட்டு இருக்கிறார் நம்முடைய ‘முரசொலி’ செல்வம் அவர்கள்.
தமிழ்நாட்டினுடைய அரசியல் வரலாறு எப்பொழு தெல்லாம் எப்படி இருந்திருக்கின்றது என்று. இன்றைக்கு யார் யாரோ, ஏதேதோ பேசுகிறார்களே, அரைவேக்காடுகளாகப் பேசுகிறார்களே, அவர்களுக்கு இந்த ஆவணம் பதில் சொல்லக்கூடிய ஆவணமாகும்.
நம் நெஞ்சங்களிலெல்லாம் நிறைந்திருக்கின்றார் என்பதற்கு அடையாளம்!
நம்முடைய ‘முரசொலி’ செல்வம் அவர்கள் மறையவில்லை; வாழ்ந்து கொண்டிருக்கின்றார்; நம் நெஞ்சங்களிலெல்லாம் நிறைந்திருக்கின்றார் என்பதற்கு அடையாளமாகத்தான் அந்த ஆவணத்தில் உள்ள செய்திகள் எல்லாம் இருக்கின்றன.
ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுடைய மறைவிற்கு, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் எழுதிய கவிதை யிலிருந்து கலைஞர் அவர்கள் ‘‘கூண்டு கண்டேன், குதூகலம் கொண்டேன்” என்று எழுதுகின்ற நேரத்தில் ஒன்றைச் சொன்னார்.
எல்லோருக்கும் பாடமாக நினைவூட்ட வேண்டியது; ஆறுதல் பெறவேண்டியது அவசியம்!
பன்னீர்செல்வம் அவர்கள் மறைந்தபொழுது, தந்தை பெரியார் அவர்கள் ஓர் இரங்கலறிக்கை எழுதினார். அதனை இந்த நேரத்தில் எல்லோருக்கும் பாடமாக நான் நினைவூட்ட வேண்டியது; நாம் ஆறுதல் பெறவேண்டியது அவசியம் என்பதால்தான்.
திராவிட இயக்கம் என்பது கிள்ளுக்கீரை அல்ல; திராவிட இயக்கம் என்பது நேற்று பெய்த மழை யில்,இன்று முளைத்த காளான் அல்ல.
திராவிட இயக்கம் என்பது வெறும் பதவிக்காக வந்த இயக்கமல்ல; கொள்கைக்காக வந்த இயக்கம்.
ஆயிரம் ஆயிரம், லட்சோப லட்சம் இளைஞர்கள் தங்களுடைய வியர்வையையும், உழைப்பையும், ரத்தத்தையும் கொடுத்து வளர்த்துக் கொண்டிருக்கின்ற இயக்கம். இந்த இயக்கத்தில் எல்லாத் துறைகளிலும் ஆற்றல்மிகுந்தவர்கள் இருக்கிறார்கள்.
விளம்பரத்தை விரும்பாமலேயே, ஒரு கட்டடத்தின் அடிக்கட்டுமானம் எப்படி வெளியே – வெளிச்சத்தில் தெரிவதில்லையோ அதுபோலத்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம்.
ஒரு தனிபட்ட நபர் அல்ல ‘முரசொலி’ செல்வம்; அல்லது ஒரு பத்திரிகையினுடைய ஆசிரியராக நீண்ட காலமாக இருந்தார் என்பது மட்டுமல்ல. திராவிட இயக்கத்தில் நாளேடு நடத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல.
நாளேடுகளில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று வர்த்தக ரீதியான பத்திரிகை; வணிகப் பத்திரிகை; இன்னொன்று கொள்கை ஏடு. அந்தக் கொள்கை ஏடு நடத்தினால், எதிர்நீச்சல் போடவேண்டும்; இழப்புகள் ஏற்படும், கருத்தியல்களை எழுதும்பொழுது, அதற்குரிய விலையைக் கொடுக்கவேண்டும்.
‘‘என்னுடைய எழுதுகோலை உங்களால் ஒருபோதும் பறிக்க முடியாது”- கலைஞர்!
ஆனால், அந்தப் பேனா வளையாது; இதைத்தான் கலைஞர் அவர்கள் சொன்னார், ‘‘என்னுடைய செங்கோலை வேண்டுமானாலும் நீங்கள் பறிக்கலாம். ஆனால், என்னுடைய எழுதுகோலை உங்களால் ஒருபோதும் பறிக்க முடியாது” என்று சொன்னார்.
அந்த எழுதுகோல், கலைஞர் அவர்கள் விட்டுச் சென்ற எழுதுகோல், நம்முடைய செல்வம் அவர்கள் கைகளில் – கலைஞர் அவர்களால் தயாரித்த காலத்திலி ருந்து இருந்து வந்தது.
அதனால்தான் நாம் அவர் மறைவால், இவ்வளவு வேதனைப்படுகிறோம். தொடர்ந்து 10 நாள்களாக ‘முரசொலி’யில் ஒவ்வொருவரும் அவரவர் உணர்வு களை எப்படி காட்டியிருக்கிறார்கள்; உலகம் முழுவதும் இருக்கக்கூடியவர்கள், தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்புப்போல செல்வம் அவர்களைக் கருதுகிறார்கள் என்பதற்கு அடையாளம்!
ஏ.டி.பன்னீர்செல்வம் மறைந்தபொழுது
தந்தை பெரியாரின் இரங்கல் அறிக்கை!
நம்முடைய அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள், தளபதி ஏ.டி.பன்னீர்செல்வம் மறைந்தபொழுது 1940 ஆம் ஆண்டு எழுதிய அறிக்கையில் என்ன எழுதினார் என்றால்,
‘‘என் மனைவி முடிவெய்தியபோதும் நான் சிறிதும் மனம் கலங்கவில்லை; ஒரு சொட்டு கண்ணீர் வடிக்கவில்லை. என் தாயார் இறந்த போதும் இயற்கை தானே, 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா, இது பேராசை அல்லவா என்று கருதினேன். 10 வயதிலேயே லண்டனுக்கு அனுப்பி படிக்க வைத்த ஒரே அண்ணன் மகன் படித்துவிட்டு இந்தியா வந்து சேர்ந்து சரியாக 20 வயதில் இறந்து போனதற்காகவும் பதறவில்லை; சிதறவில்லை” என்று சொல்லிவிட்டு, ‘‘இவையெல்லாம் என்னுடைய சொந்த இழப்புகள்; என்னை மட்டுமே பாதிக்கும்; என்னுடைய குடும்பத்தை மட்டுமே பாதிக்கும். ஆனால், பன்னீர்செல்வத்தினுடைய இழப்பு என்பது இருக்கிறதே, அது ஒரு சமுதாயத்தினுடைய தளபதியை இழந்தோம் என்று சொல்லுகின்ற நேரத்தில், அந்த இழப்பு சமுதாயத்திற்கு உரியது. பன்னீர்செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகிறது. தமிழர்களைக் காணுந்தோறும் காணுந்தோறும் தமிழர் நிலையை எண்ணுந்தோறும் நெஞ்சம் பகீரென்கின்றது.
ஏனென்றால், மனிதன் தானாகவும் பிறக்க வில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை என்ற வகையில் தொண்டறத்திற்காகப் பணியாற்றினார் பன்னீர்செல்வம் அவர்கள்” என்று சொன்னார் தந்தை பெரியார்.
வெளிச்சத்தை விரும்பியதில்லை –
பதவியை அவர் ஏற்றுக்கொண்டதில்லை!
அதேபோலத்தான், நம்முடைய ‘முரசொலி’ செல்வம் அவர்களுக்கு அது அப்படியே பொருந்தும். ஏனென்றால், அவர் அடித்தளத்தில் இருந்தவர், வெளிச்சத்தை விரும்புவதில்லை, பதவியை அவர் ஏற்றுக்கொண்டதில்லை. அப்படிப்பட்ட ஒருவர், எல்லோருக்கும் ஏவுகணைபோல, அவருடைய எழுத்துகளை வடித்துக் கொடுத்தார்.
அவருடைய ஒவ்வொரு எழுத்தும், ஒவ்வொரு பதிலடியும், அது பெட்டிச் செய்திகளாக இருந்தாலும், அவையெல்லாம் கெட்டிச் செய்திகள். மற்றவர்களை அலற வைத்தவை.
ஒரு துப்பாக்கியின் இரட்டைக் குழல்கள் ‘விடுதலை’யும், ‘முரசொலி’யும்!
அதனுடைய விளைவுதான், இந்தக் கால கட்டத்தில் ஓர் அற்புதமான நூறு கட்டுரைகளைக் கொண்ட இந்த புத்தகம். ‘‘இன்றைய செய்தி, நாளைய வரலாறு” என்பதை முரசொலிதான் ஒரு தனி முறையை உருவாக்கியது.
‘விடுதலை’யும், ‘முரசொலி’யும் – திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் எப்படி ஒரு துப்பாக்கியின் இரட்டைக் குழல்களோ – அதுபோலத்தான்.
இரண்டும் எதிர்நீச்சல் போடுகின்றன; எத்தனையோ விலைகளைக் கொடுத்திருக்கின்றன. ஜாமீன் கட்டியிருக்கின்றோம்; சிறைச்சாலைக்கு அதனுடைய ஆசிரியர்கள் சென்றிருக்கிறார்கள். அதே வரலாறுதான் ‘முரசொலி’க்கும்.
நம்மை ஆற்றுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ப தற்காகத்தான் இந்தப் படத்திறப்பு நிகழ்வு.
‘முரசொலி’ செல்வம் அவர்களை கூண்டில் ஏற்றிய நேரத்தில், கலைஞர் அவர்கள் எழுதிய பகுதி யில் சொல்கிறார், ‘‘கூண்டு கண்டேன்; குதூகலம் கொண்டேன்” என்ற தலைப்பில்,
‘‘கூண்டு கண்டேன் ; குதூகலம் கொண்டேன்”
உடன்பிறப்பே.!
“சிங்கத்தை நரியடிக்கும் திறமில்லையென்றாலும் பொங்குற்றே சிங்கம் மடிந்ததென்றால் நரிமனம் பூரிக்காதா.?”
இப்படி புரட்சிக் கவிஞர் ஏக்கமுற்று இதயம் குமுற கண்ணீர் சிந்தினார். கண்ணீர்க் கடலானார். தந்தை பெரியார் தவித்துப் போனார், அறிஞர் அண்ணா எழுத்திலே அவரது இதயத்திலிருந்து கசிந்த இரத்தக் கண்ணீரைக் கண்டோம்.
கோமானே!
யாம் அழுதழுது வடித்த கண்ணீர் ஓமான் கடல் ஆயிரத்தை வெற்றி கொள்ளும்”
– என நானும் இரங்கல் கவிதை வரிகளைத் தீட்டினேன்.
இந்தியாவின் ஆலோசகராக இங்கிலாந்து அரசின் வேண்டுகோளின் பேரில் இலண்டன் மாநகருக்குச் செல்ல அனிபால் எனும் விமானம் ஏறி நீதிக்கட்சியின் தன்னிகரில்லாத் தளபதி சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் பயணம் செய்த போது, அவர் அமர்ந்திருந்த அந்த விமானம் ஓமான் கடலில் வீழ்ந்து, தமிழர்களின் செல்வத்தை – திராவிடர்களின் செல்வத்தை நம்மிட மிருந்து பிரித்துத் தொலைத்தது.!
1940 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் முதல் நாள்தான் இந்தத் தாங்க முடியாத சோகம் தமிழ் மக்களை நிலைகுலையச் செய்தது.
திரள் திரளாகக் காத்திருந்தவர்களில்
நானும் ஒருவன்!
காணாமற் போனதாகச் சொல்லப்பட்ட அனிபால் விமானம் எங்கேயாவது ஓரிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு பன்னீர்செல்வம் பத்திரமாக உயிரோடிருக்கிறார் எனச் செய்தி வராதா? என்று வானொலிப் பெட்டிகள் இருக்குமிடங்களில் எல்லாம் செய்தியை எதிர்பார்த்து திரள் திரளாகக் காத்திருந்தவர்களில் நானும் ஒருவன்!
தமிழ்நாட்டுச் செல்வம் மட்டும் அல்லவே!
அவர்; எங்கள் திருவாரூருக்கு அடுத்த பெரும் பண்ணையூரில் பிறந்து வாழ்ந்த செல்வமும் ஆயிற்றே!
இலண்டன் பயணத்தை முன்னிட்டு அவருக்கு ஆரூரில் தேநீர் விருந்தளித்து, அண்ணன் அழகிரிசாமி அவரைப் பாராட்டி வழியனுப்பி வைத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு களிப்புற்ற இளைஞர்களில் நானும் ஒருவனாயிற்றே!
பன்னீர்செல்வத்தின் நினைவாக,
என் சகோதரி மகனுக்கு
பன்னீர்செல்வம் என்று பெயரிட்டேன்!
1940 மார்ச்சில் பன்னீர்செல்வம் மறைந்த சோக நிழல் இந்த மண்ணில் படிந்திருக்கும் போது தான் அதே ஏப்ரல் திங்களில் என் சகோதரிக்கு ஒரு மகன் பிறந்தான். மறைந்தாலும் மனதில் நிறைந்திருக்கும் பன்னீர்செல்வத்தின் நினைவாக அவனுக்கு நான் பன்னீர்செல்வம் என்று பெயரிட்டேன்.
அந்த பன்னீர்செல்வம் தான் கடந்த 21 ஆம் நாள் சட்டப் பேரவைக் கூண்டிலே நிறுத்தப்பட்ட ‘முரசொலி’ ஆசிரியர் செல்வம்!
என் தாயாரின் ஆணை!
செல்வம் பிறந்தபோதே என் தாயார் என்னைப் பார்த்து, “உனக்கு ஒரு பெண் பிறந்தால் அதற்கு செல்வி என பெயரிட்டு செல்வத்துக்கே துணைவியாக்க வேண்டும்’’ என்று அன்புக் கட்டளைப் பிறப்பித்தார்கள். பாட்டியின் ஆசை நிறைவேறியது ஆனால் அதை அந்த அன்புப் பாட்டியிருந்து பார்க்கவில்லை!
அண்ணா தலைமையில், தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி, காயிதேமில்லத் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி மணமக்களை வாழ்த்தினர் அந்த மணக்கோலத்தில் செல்வத்தை நான் பார்த்த போது கூட எனக்கு அத்தனை மகிழ்ச்சியில்லை!
புதுக்கோட்டை, திருச்சி நிகழ்ச்சிகளை முடித்து விட்டு திரும்பும்போது தாம்பரம் ரயிலடியில் வாங்கிப் படித்த ஆங்கிலம், தமிழ் நாளேடுகள் அத்தனையிலும் செல்வம் சட்டப் பேரவைக் கூண்டில் சிரிப்பு தவழ நின்று கொண்டிருக்கும் படம் வெளிவந்துள்ளதைப் பார்த்தபோதுதான் எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை!
வாடிய முகத்துடன் அந்தக் கூண்டுக்குள் செல்வம் நின்றிருந்தால் என்னகம் வாடிப் போயிருக்கும்! அந்தச் செல்வத்தின் பெயரை இந்தச் செல்வத்துக்கு எத்துணைப் பொருத்தமாக அப்போதே வைத்தேன் என்று என்னையே நான் பாராட்டிக் கொண்டேன் படத்தில் செல்வத்தின் முகத்தில் அரும்பி நிற்கும் புன்முறுவல் கண்டு!
உடன் பிறப்பே, அந்தப் படத்தை
உற்றுப் பார்த்தேன்!
படத்தை அரசாங்க செய்தித்துறையே எடுத்து, அந்தத் துறையே அல்லவா எல்லா ஏடுகளுக்கும் அனுப்பி வைத்திருக்கிறது! இது, மேலும் பூரிப்பு வழங்கும் தகவல் அல்லவா! உடன் பிறப்பே, அந்தப் படத்தை உற்றுப் பார்த்தேன்.
செல்வம் நிற்கும் கூண்டுக்கு அருகே அறிஞர் அண்ணாவின் படம். நான் முதல்வராக இருந்த போது பிரதமர் அன்னை இந்திரா காந்தியை அழைத்து திறந்து வைக்கப்பட்ட படம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற எழுத்துகள் ஒளி விடுகின்றன பார்த்தாயா!
உச்சநீதிமன்ற ஆணையை மதிக்கமாட்டேன் என்று ஆரவாரம் செய்யாமல், உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று செல்வம் அந்தக் கூண்டுக்குள் நிற்கும்போது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் அண்ணாவின் மொழிகள் செல்வத்தின் செயலைப் பாராட்டுவது போலவே அமைந்து ஒளி விடுகின்றன அல்லவா!
அண்ணா, செல்வத்திற்குத் தேவையான அறிவுரைகளைச் சொல்லுவார்!
அண்ணா, செல்வத்தை – மிகச் செல்லமாக “செல்வா” என்றுதான் அன்பொழுக அழைத்து ‘முரசொலி’க்குத் தேவையான அறிவுரைகளைச் சொல்லுவார். அடையாறு மருத்துவமனையில் அண்ணாவுக்கு இறுதியாக ஓர் அறுவை சிகிச்சை அவசியம் தேவை என முடிவு செய்யப்பட்டபோது கூட, அண்ணா அவர்கள் அந்த உடல் நலிவுடனும் “செல்வம் எங்கே.?” என அழைத்து, செல்வம் அவர் அருகில் சென்றதும் “செல்வா வீட்டில் பிள்ளைகளை அழைத்துவா!” நான் பார்க்க வேண்டும் என்று கூறியதை எப்படி மறக்க முடியும்!
அந்தப் பாசமுள்ள பெருந்தலைவனின் படத்தருகே கூண்டு – அதிலே செல்வம்!
மன்றத்தில் ஜனநாயகம் போற்றிய பல தலைவர்களின் படங்கள்.!
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்”
எனக் குறள் கூறிய வள்ளுவரின் படமும் கூட!
செல்வத்தை இன்று ஆசிரியராகப் பெற்றுள்ள ‘முரசொலி’க்கு வயது அய்ம்பது – இந்த முரசொலி 1942 ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்று 1943 இல் முதல் ஆண்டுவிழா கொண்டாடிய போது வருகை தந்து வாழ்த்தியவர்கள் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும், பேராசிரியர் அன்பழகனார் அவர்களும்!
“இன்று அந்த ‘முரசொலி’யைக் கூண்டிலேற்றியது சரியென்று வாதாடுகிறார் பேரவையில் நாவலர் நெடுஞ்செழியன்!
பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும்
பழி வாங்கும் செயல்!
இது பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் பழி வாங்கும் செயல் என்று கண்டித்துக் கருப்புச் சட்டை அணிந்து திருச்சி வீதியிலே மனிதச் சங்கிலி அறப்போருக்குத் தலைமையேற்று கொளுத்தும் வெயிலில் நிற்கிறார் பேராசிரியர்!”
என்னே அரசியலின் விசித்திரம்.!
“எல்லோரையும் தாங்கிட ஒரு தாயின் வயிறு போதாத காரணத்தால் தனித்தனித் தாய்களின் வயிற்றில் பிறந்த சகோதரர்கள் நாம்” எனப் பெருமையுடன் கூறிப் பெருமிதம் கொண்ட அண்ணா அவர்கள் இன்றில்லா தது அவர் வரையில் அவருக்குக் கிடைத்த பேறு தானே!
இல்லையா உடன்பிறப்பே.!
எப்படியோ கூண்டு கண்டேன்; நான் குதூகலம் கொண்டேன்!” என்று எழுதினார் நமது கலைஞர் அவர்கள்.
திராவிட இயக்கக் கலங்கரை வெளிச்சத்தின் கதிர்கள்!
செல்வம் அவர்களின் புன்முறுவல், அது வெறும் புன்முறுவல் அல்ல, அதுதான் திராவிட இயக்கக் கலங்கரை வெளிச்சத்தின் கதிர்கள்!
எனவே, இந்தப் படத்திறப்பு ஒரு பாடம்.
நாம் இன்றைக்கு எப்படிப்பட்ட காலகட்டத்தில் இருக்கிறோம் தெரியுமா? மிகப்பெரிய சோதனையான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.
அவை வெறும் எழுத்துகள் அல்ல;
ஆயுதங்கள்; போராயுதங்கள்!
இன்னமும் செல்வங்கள் பெருகவேண்டும்; எழுத்துகள் வரவேண்டும்; ஏனென்றால், அவை வெறும் எழுத்துகள் அல்ல; ஆயுதங்கள்; போராயுதங்கள்; பேராயுதங்களாக எழுத்துகள் வந்திருக்கின்றன – அதுதான் ‘முரசொலி’.
‘விடுதலை’யானாலும், ‘முரசொலி’யானாலும், ‘திராவிட நாடு’ ஆனாலும், அந்தக் காலத்து ‘குடிஅரசா’னாலும் கொள்கைகளுக்காக நடைபெற்ற ஏடுகள்.
‘முரசொலி’ செல்வம் பேசுகிறார்,
கேளுங்கள்!
நூறு கட்டுரைகள் எழுதியுள்ள புத்தகத்தின் முன்னுரையில் ‘முரசொலி’ செல்வம் எழுதுகிறார், பாருங்கள்!
‘‘இந்தத் தொடரை எழுதத் தொடங்கியதும், பெருத்த நினைவுகளைச் சான்றுகளோடு தரவேண்டும் என பழைய ‘முரசொலி’ ஏடுகளைப் புரட்டியபொழுது, பல இனிய நினைவுகள் மட்டுமின்றி, இதயத்தை கனக்க வைத்த நிலையேனும் பின்னிப் பிணைந்தன.
அன்றும், இன்றும் பல ஊடகங்களின் வரலாறுகள் திரிக்கப்பட்டு, கதாநாயகனை வில்லனாகவும், வில்லனை கதாநாயகனாகவும் காட்டிவரும் வேளையில், இந்தத் தொகுப்பில் பல நிலைகள், உண்மை நிலையை உரத்த குரலில், உலகுக்கு மீண்டும் நினைவூட்டும் என்று நாம் நம்புகிறேன்.
வரலாற்றின் கருப்புப் பக்கங்களுக்கு வண்ணம் பூசுகிறார்கள் சிலர்!
மின்மினிப் பூச்சிகளை ஜொலிக்கும் நட்சத்தி ரங்களாக சித்திரிக்கும் சிலர், வரலாற்றின் கருப்புப் பக்கங்களுக்கு வண்ணம் பூசியும், வண்ணப் பக்கங்களை கருப்புப் பக்கங்களாகப் பதிவு செய்தும், புதிய தலைமுறையினரின் உள்ளத்தில், உண்மைக்கு மாறான செய்திகளைப் பதித்து வருவதை இத்தொடர் ஓரளவிற்கு ஓரங்கட்டும்” என்று எழுதுகிறார் நமது செல்வம்!
இதுதான் அவர் நமக்கு இட்ட ஆணை. பத்திரி கையாளர்கள் ஓரங்கட்டவேண்டியவர்களை ஓரம் கட்டவேண்டும். விரட்டவேண்டியவர்களை விரட்டவேண்டும். அதற்கு எழுதுகோல் ஆயுதமாக இருக்கட்டும் என்ற பாடத்தைத்தான், செல்வம் அவர்கள் படமாகிவிட்ட பிறகும்கூட, நமக்கெல்லாம் காட்டிக் கொண்டிருக்கின்றார்.
முதலமைச்சருக்கு வேண்டுகோள்!
இந்தப் படத்திறப்பு புகழ் வணக்க நிகழ்வில், ஒரே ஒரு வேண்டுகோளை முதலமைச்சருக்கு வைக்கிறேன்.
‘முரசொலி’ ஏடு எப்படி ஒரு பெரிய பணியை செய்து கொண்டிருக்கின்றதோ, அதுபோல ‘விடுதலை’, அதுபோல திராவிட இயக்க ஏடுகள். இன்றைக்கு சமூக வலைதளத்தில் இளைஞர்களைத் தயாரிக்கின்ற பணிகளை அற்புதமாகச் செய்துகொண்டிருக்கின்றோம். இன்றைக்கு வித்தியாசமான வாய்ப்புகள் வந்துவிட்டன. ‘இதழியல்’ என்று சொன்னால், வெறும் எழுத்து மட்டுமல்ல; அதில் செயற்கை நுண்ணறிவு வரக்கூடிய அளவிற்கு, இன்றைக்கு அறிவியல் வளர்ந்து கொண்டி ருக்கின்ற காலகட்டத்தில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, திராவிட இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர் அவர்களே, உலகம் முழுவதும் உங்களுடைய பணி களைப் பாராட்டுகின்ற இந்த நேரத்தில், “திராவிட இதழியலுக்காக” பயிற்சிக் களம் ஒன்றை நீங்கள் ஒரு கல்லூரியாக உருவாக்கவேண்டும். அதற்கு முரசொலி செல்வம் அவர்களுடைய பெயரை வைக்கவேண்டும். அதனை நீங்கள் அறக்கட்டளையின்மூலம் தொடங்கி னாலும் சரி; அல்லது அரசாங்கத்தின்மூலம் தொடங்கி னாலும் சரி.
ஏனென்றால், திராவிடம் என்றால், பலருக்கு இன்னும் ஒவ்வாமை இருக்கிறது. திராவிடம் என்றால், சில பேருக்கு இன்னும் தயக்கம் இருக்கிறது.
அவர்களையெல்லாம் கண்விழிக்கச் செய்ய வேண்டும்; அவர்களுக்கெல்லாம் அறிவூட்டவேண்டும்.
ஏராளமான இளைஞர்கள் இன்றைக்குப் பயிற்சி பெறவேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
“திராவிட இதழியல் ஊடகவியல்
பயிற்சி அமைப்பு!’’
எப்படி கலைஞரிடமிருந்து மாறன், மாறனிடத்தி லிருந்து செல்வம் என்று பயன்பெறும்படியாக இப்படி வந்துகொண்டிருக்கின்றதோ, அதேபோலத்தான், ஏராளமான இளைஞர்கள், “திராவிட இதழியல் ஊடகவியல் பயிற்சி அமைப்பு” என்ற ஓர் பயிற்சி அமைப்பை ‘‘Institute of Dravidian Journalism” என்ற அமைப்பை உருவாக்கி செல்வம் அவர்களுடைய பெயரை நாட்டுங்கள் என்று உரிமையோடு, உறவோடு வேண்டுகோளாக வைத்து,
செல்வம் வாழுகிறார்,
செல்வம் மறைவில்லை,
நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார் என்று சொல்லி ஆறுதல் பெறுவோம்.
வாழ்க செல்வத்தின் புகழ்!
வளர்க திராவிடத்தின் வெற்றி!!
அவர் வழியைப் பின்பற்றுவோம்!
அவர் மறைந்துவிட்டார் –
வேர்கள் மறைந்தாலும், அது முளைகளாகக் கிளம்பும்; விளைச்சலாக வரும்.
அதனை நாம் பாதுகாப்போம்!
வாழ்க செல்வத்தின் புகழ்!
வளர்க திராவிடத்தின் வெற்றி!
நன்றி, வணக்கம்!
-இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.