சென்னை, அக். 21- கடந்த ஆண்டில் நிலுவையில் உள்ள 30 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை வழங்க மின்வாரியத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
விவசாயத்துக்கு சாதாரணம், சுயநிதி என 2 பிரிவுகளில் தமிழ்நாடு மின்வாரியம் மின் இணைப்பு வழங்குகிறது. இதில், சாதாரண பிரிவில் மின் வழித்தட செலவு, மின் விநியோகம் ஆகிய அனைத்தும் இலவசம். சுயநிதி பிரிவில் மின்சாரம் மட்டும் இலவசம். வழித்தட செலவில் ஒரு பகுதியை விவசாயிகள் ஏற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 23.56 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கும் இலவச மின்சாரம் வழங்குவதால் மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.7,280 கோடி செலவாகிறது. இதை தமிழ்நாடு அரசு வழங்குகிறது.
ஆண்டுதோறும் அரசு அனுமதிக்கும் எண்ணிக் கையில் மட்டுமே விவசாய மின்இணைப்புகள் வழங்கப் படுகின்றன. விவசாய இணைப்பு கேட்டு கடந்த 2021 மார்ச் வரை 4.54 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதனால், அந்த ஒரே நிதி ஆண்டில் ஒரு லட்சம் மின்இணைப்புகளும், 2022-2023இல் 50 ஆயிரம் இணைப்புகளும் வழங்கப்பட்டன.
கடந்த 2023-2024இல் 50 ஆயிரம் இணைப்புகள் வழங்க அரசு அனுமதி அளித்தது. அதில், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் 20 ஆயிரம் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன. இதனால், இணைப்பு கிடைக்காதவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
குறிப்பாக, சுயநிதி பிரிவில் விரைவு (‘தத்கால்’) திட்டத்தின்கீழ், வழித்தட செலவுக்கான முழு தொகையையும் செலுத்திய விவசாயிகள் மின் இணைப்பு வழங்குமாறு வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே, கடந்த ஆண்டு கடைசியில் தென்மாவட்டங்களில் கனமழை பெய்ததால் 795 மின்மாற்றிகள், 15 ஆயிரம் மின் கம்பங்கள், 985 கி.மீ. நீள மின்கம்பிகள் உள்ளிட்ட மின்சாதனங்கள் சேதம் அடைந்தன. இதன் காரணமாகவும், விவசாய மின் இணைப்பு வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டில் 50 ஆயிரம் மின் இணைப்பு வழங்க அரசு அளித்த அவகாசம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்டது. எனவே, அந்த ஆண்டில் வழங்கியது போக, இதர விண்ணப்பதாரர்களுக்கு இணைப்பு வழங்க அரசிடம் மின்வாரியம் அனுமதி கோரியது.
இதைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள 30 ஆயிரம் மின் இணைப்புகளை வரும் 2025 மார்ச் மாதம் வரை வழங்க மின்வாரியத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.