சென்னை, அக்.20 வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு அவசரப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களுக்கும் பொறுப்பு அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வடகிழக்குப் பருவமழையை சமாளிக்க தேவையான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களுக்கும் அய்ஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை காலத்திலேயே தமிழ்நாட்டிற்கு அதிக மழை கிடைக்கும். இந்த மழைக் காலத்தில் அணைகள், குளங்கள் பெரும்பாலும் நிரம்பி விடும். எனவே அணைகள், குளங்களின் நிலவரத்தை கண்காணிக் கவும், வாய்க்கால்களில் உடைப்பு ஏற் பட்டால் உடனடியாக அடைக்கவும் நீர் வளத்துறையினர் முக்கிய பணியாற்றுவர்.
இதற்காக மணல் மூடைகள் தயார் நிலையில் வைக்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கு பொறுப்பு செயற்பொறியாளர்கள் என 38 மாவட்டங்களுக்கும் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழைக் காலத்தை முன்னிட்டு அவசர பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நீர்வளத்துறை செயற்பொறியாளர்களை பொறுப்பு அலுவலர்களாக நியமிக்குமாறு நீர்வளத் துறை தலைமை பொறியாளர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி ஒவ்வொரு மாவட்டங் களுக்கும் பொறுப்பு அலுவலர்கள் என 38 மாவட்டங்களுக்கும் நியமிக்கப் படுகின்றனர். இவர்கள் தங்களது வழக்கமான பணியுடன் வடகிழக்கு பருவமழைக் கால பொறுப்பு அலுவலர் பணியையும் நீர்வளத் துறையின் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள அரசு உத்தரவிடுகிறது. வடகிழக்கு பருவமழைக் காலம் முடியும் வரை பொறுப்பு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளார்.