டேராடூன், அக்.14- உத்தராகண்ட் மாநிலத்தில் சிறைக் கைதிகள் நடத்திய ராம் லீலா நாடகத்தில் வானர சேனை வேடமிட்ட இருவர் சீதையை தேடிச் செல்வதாக கூறி சிறையி லிருந்து தப்பினர்.
உத்தராகண்ட் மாநிலம் அரித்துவாரில் ரோஷ்னாபாத் என்ற இடத்தில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இந்த சிறையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவின் போது கைதி களை கொண்டு சிறை நிர்வாகம் ராம்லீலா நாடகம் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு 11.10.2024 அன்று இரவு சிறை வளாகத்தில் ராம் லீலா நாடகம் நடை பெற்றது. இந்த நாடகத்தில் வானர சேனை வேட மிட்ட கைதிகள், சீதா தேவியை தேடிச் செல்வது போல் காட்சி வருகிறது.
இவ்வாறு தேடிச் சென்ற வானர சேனைகளில் பங்கஜ், ராஜ்குமார் ஆகிய இரு கைதிகள், உரிய நேரத்தில் மேடைக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அதி காரிகள் அவர்களை தேடியபோது, இருவரும் இருளை பயன்படுத்தி ஏணி மூலம் சுற்றுச்சுவரை தாண்டி சிறையில் இருந்து தப்பியது தெரியவந்தது.
தப்பிய கைதிகளில் பங்கஜ், ரூர்க்கியை சேர்ந்தவர். கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார். மற்றொரு கைதியான ராஜ்குமார், உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவை சேர்ந்தவர்.
ஆள் கடத்தல் வழக்கில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். தப்பிய இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிகழ்வு சிறை பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கர்மேந்திர சிங் கூறுகையில், “சிறையில் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. மேலும் ராம் லீலா நாடகம் நடந்துள்ளது.
இதனை வாய்ப்பாக பயன்படுத்தி இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். இது உண்மையில் சிறை நிர்வாகத்தின் அறியாமைதான். இது தொடர்பாக துறை ரீதியான விசாரணையும் நடத்தப்படும்” என்றார்.