இராமேசுவரம், அக்.13- இந்தியா-இலங்கை இடையே, நாகப்பட்டிணம் முதல் ராமேசுவரம் வரை உள்ள கடற்பகுதி 25 முதல் 40 கி.மீ., வரை மட்டுமே அகலம் உள்ள கடல் பகுதி யாகும். மீன்வளம் மிக்க இப்பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் தங்களது பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், அகலம் குறைந்த பகுதி என்பதாலும், பாரம்பரியமாக மீன்பிடி தொழில் நடக்கும் பகுதி என்பதாலும் அவ்வப்போது, இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் நிகழ்வுகளும், அவர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடப்பதுண்டு.
எனினும் சமீப காலமாக, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, தமிழ்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்படும் நிகழ்வு களும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு இலங்கை அரசு வெளிநாட்டு மீன்படி சட்டதிருத்தம் கொண்டுவந்ததது.
இதில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு 6 மாதம் முதல் 2½ ஆண்டுகள் வரை சிறை தண்டனை, படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுடைமை ஆக்குதல் போன்ற கடுமையான ஷரத்துகள் இடம்பெற்றிருந்தன. இந்த சட்டத் திருத்தம் கொண்டுவந்த பின் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது சம்பவங்களும், படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுடைமை ஆக்கப்படும் நிகழ்வுகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் கைது மற்றும் அவர்களின் படகுகள் நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, 2014-இல் 787 பேரும், 2015-இல் 454 பேரும், 2016-இல் 290 பேரும், 2017-இல் 453 பேரும், 2018-இல் 148 பேரும், 2019-இல் 203 பேரும், 2020-இல் 59 பேரும், 2021-இல் 159 பேரும், 2022-இல் 237 பேரும், 2023-இல் 230 பேரும், 2024 ஜூலை வரை 268 பேர் என இதுவரை 3,288 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதே போல், 2014-இல் 164 படகுகளும், 2015-இல் 71 படகுகளும், 2016-இல் 51 படகுகளும், 2017-இல் 82 படகுகளும், 2018-இல் 14 படகுகளும், 2019-ல் 41 படகுகளும், 2020-இல் 9 படகுகளும், 2021-இல் 19 படகுகளும், 2022-இல் 34 படகுகளும், 2023-இல் 34 படகுகளும், 2027-இல் ஜூலை வரை 39 படகுகள் என 558 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 365 படகுகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்ளது. 21 படகுகள் இலங்கை நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.