புதுடில்லி, அக்.8 உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒன்றிய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கார்கே பதிவிட்டுள்ளதாவது,
”ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது கவனத்தை திசை திருப்பும் விவகாரம். இது அரசமைப்புக்கு எதிரானது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது. இது கூட்டாட்சிக்கு எதிரானது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது” என கார்கே பதிவிட்டுள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் கேள்வி
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருப்பது பாஜகவின் கீழ்த்தரமான அரசியல். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதுதான் இலக்கு என்றால், ஜம்மு – காஷ்மீர் மற்றும் அரியாணா தேர்தலுடன் மகாராட்டிர சட்டப்பேரவைத் தேர்தலை ஏன் நடத்தவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
சிவசேனை விமர்சனம்
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது ஒன்றிய அரசின் இயலாமையைக் காட்டுகிறது என விமர்சித்துள்ளது சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சி. மகாராஷ்டிரம் மற்றும் அரியானா பேரவைத் தேர்தல்களை ஒன்றாக நடத்த முடியாதது ஒன்றிய அரசின் இயலாமையையே காட்டுகிறது. வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் முதலிய பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் முயற்சியாகவே பாஜக இதனைச் செய்துள்ளது என விமர்சித்தது.
ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்த மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு ஒன்றிய அமைச்சரவை 18.9.2024 அன்று ஒப்புதல் அளித்தது.
இதன்மூலம், மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்படும். இதில் மக்களவை – சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாகவும், அடுத்த 100 நாள்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.
ஒரே நேர தோ்தல்களின் சுழற்சியை உறுதிசெய்ய சட்டபூா்வ வழிமுறையை ஏற்படுத்த வேண்டும். தொங்கு மக்களவை, ஆட்சி கவிழ்வது போன்ற சூழல்களின்போது புதிதாக மக்களவைத் தோ்தலை நடத்தலாம். அதன்பிறகு அமையும் புதிய மக்களவையின் பதவிக் காலம், முந்தைய மக்களவையின் மீதமுள்ள பதவிக் காலத்துக்கு மட்டுமே இருக்கும். இதுபோன்ற தருணங்களில், மாநில சட்டப்பேரவைக்கு புதிதாக தோ்தல் நடத்தப்பட்டால், புதிய பேரவையின் பதவிக் காலம் மக்களவையின் பதவிக் காலம் வரை தொடரும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ராம்நாத் கோவிந்த் குழு அளித்த பரிந்துரைகள், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மன்றங்களில் விவாதிக்கப்படும். ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பாக இக்குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்துச் செல்ல செயலாக்கக்குழு அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.