சென்னை, அக்.8– தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழ்நாடு கடலோரப் பகுதிகளையொட்டிய மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 11ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 9ஆம் தேதி நீலகிரி, கோவை,திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 10ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 11ஆம் தேதி நீலகிரி,கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.