சென்னை, அக்.5 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றை விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதுபற்றி, வரும் அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உதயநிதி துணை முதலமைச்சரான பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் எதிர்பார்பை அதிகரித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர், மகளிருக்கு கட்டணமில்லா பயணம், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம், ‘தமிழ் புதல்வன்‘ திட்டம் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்‘ கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தை பொறுத்தவரை, கடந்த 2023-2024 ஆம் நிதி ஆண்டில் ரூ.8,123.83 கோடி நிதி (6 மாதம்) ஒதுக்கப்பட்டது. இந்த தொகையில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் 2024-2025 ஆம் ஆண்டுக்கு ரூ.13,722.47 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டம் மூலம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை, முகாம் வாழ் இலங்கை தமிழர் குடும்பங்களை சேர்ந்த 14,723 மகளிர் உள்பட ஒரு கோடியே 15 லட்சத்து 27,172 குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
வரும் ஆண்டில் இன்னும் அதிக மானோருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு வேலை செய்வோர், மாநகராட்சி மற்றும் நகராட்சியில் வேலை செய்வோரை தவிர மற்றவர்களுக்கு பணம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதவிர பெரும்பாலான ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மகளிர் உரிமை தொகையில் மாற்றம் வரலாம் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் பல்வேறு சிறப்பு திட்டங்கள் , துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் வரும் துறையாகும். எனவே இந்த விவகாரத்தில் புதிய அறிவிப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றை விரிவாக்கம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. புதுமைப் பெண் திட்டத்தை பொறுத்தவரை, அரசு பள்ளியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் படிப்போருக்கும், அரசு உதவி பெறும் பள்ளியை பொறுத்தவரை தமிழ் வழியில் படிப்போர் மட்டுமே, கல்லூரிகளில் மாதம் ஆயிரம் உதவி தொகை பெற முடியும்.
இதேபோல் தான் தமிழ் புதல்வன் திட்டத்தின் படியும், அரசு பள்ளியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் படிப்போருக்கும், அரசு உதவி பெறும் பள்ளியை பொறுத்தவரை தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே கல்லூரியில் சேரும் போது மாதம் ஆயிரம் உதவி தொகை பெற முடியும். இதில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில வழியில் படிப்போருக்கு விரி வாக்கம் செய்யப்பட்டால் மேலும் பல குழந்தைகள் பயன்பெறுவார்கள். எனவே அரசு எப்படி விரிவாக்கம் செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.