சென்னை, அக்.5- டில்லியில் 3.10.2024 அன்று நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் இந்த திட்டத்துக்கு ரூ.63 ஆயிரத்து 246 கோடியை ஒன்றிய அரசு வழங்கி இருப்பதாக சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய-மாநில அரசுகளின் நிதி பகிர்வு குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதில், சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்துக்கு ரூ.63 ஆயிரத்து 246 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளதாக பா.ஜனதாவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இது தவறான தகவல்.
உண்மை என்னவென்றால், சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்டப் பணிகளுக்கு ஒன்றிய அரசு தரப்பில் ரூ.7 ஆயிரத்து 425 கோடியும், தமிழ்நாடு அரசு தரப்பில் ரூ.22 ஆயிரத்து 228 கோடியும், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் மாநில அரசின் உத்தரவாதத்தில் கடனாக ரூ.33 ஆயிரத்து 593 கோடியும் பெறப்படும். எனவே, தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.