மனிதநேயத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 146-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவும், பேராசிரியர் அருண் மகிழ்நன் – நளினா கோபால் ஆகியோர் தொகுத்துள்ள “ஊர் திரும்பியவர் – வேர் ஊன்றியவர் – தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்” என்ற நூல் ஆய்வு நிகழ்வும், சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தினரால் நடத்தப்பட்டது. 2024 செப்டம்பர் 17 அன்று சிங்கப்பூர் விக்டோரியா சாலையிலுள்ள தேசிய நூலகத்தின் 5-ஆம் தளத்தில் மாலை 7 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது.
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் க.பூபாலன் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். சிங்கையில் ஈராண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் பெரியார் விழாவில் கடந்த ஆண்டு அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு ‘பெரியாரும் அறிவியலும்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையையும், அதன் சிறப்பையும் எடுத்துக் கூறிய அவர், தந்தை பெரியார் பிறந்தநாளை வழக்கமாகக் கலந்துரையாடலாக நடத்திவந்த நிலையில், இந்த ஆண்டு முதல் செப்டம்பர் 17 அன்றே ஒவ்வொரு முறையும் விழா நடத்திட முடிவு செய்ததையும், அதன்படி இந்த ஆண்டு புத்தக ஆய்வு நடத்த விரும்பியபோது அதற்குத் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவு கிட்டியதையும் எடுத்துக் கூறினார். வாய்ப்பாக, ஜப்பான் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டுச் சிங்கப்பூர் வழியாக தமிழ்நாடு திரும்பத் திட்டமிட்டிருந்த பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் பங்கேற்க இசைவு தெரிவித்து, பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்றே சிங்கப்பூரில் நடைபெறும் விழாவில் பங்கேற்றுள்ளதையும் மகிழ்வுடன் குறிப்பிட்டார்.
தொகுப்பு:
ச. பிரின்சு என்னாரெசு பெரியார்
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் சமூக அறிவியல் துறையில் இளங்கலை 4-ஆம் ஆண்டு பயிலும் மாணவி அருணா கந்தசாமி, “ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர்” நூல் ஆய்வு உரையை வழங்கினார். அவருக்கு மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் கவிதா மாறன் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.
காரணம் என்ன?
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழியியல் மற்றும் இலக்கியத் துறைப் பேராசிரியர் முனைவர் சித்ரா சங்கரன் தனது உரையில், தன்னுடைய பாட்டனார் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் பசுமலை வீட்டில் தந்தை பெரியார் வந்து அமர்ந்த நாற்காலியை நினைவுப் பொருளாக வைத்திருக்கும் செய்தியை மகிழ்வுடன் நினைவுகூர்ந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக பாலினம் கடந்து மாணவர்களும் இளைஞர்களும் மெரினா கடற்கரையில் ஒன்று கூடினர். இதைக் கண்ட வட இந்தியச் செய்தியாளர் ஒருவர், எப்படி இந்த பெண்களின் பெற்றோர்கள் அனுமதித்தார்கள் என்று வியந்தார். அங்கு பாலினச் சீண்டல் நடந்ததாகக் கூட எந்தச் செய்தியும் வரவில்லை. தமிழ்நாட்டில் இப்படி ஓர் அதிசயம் எப்படி நடக்கிறது? இதற்கான காரணம் என்ன? என்று வியந்து கேள்வி எழுப்பினார். ஒழுக்கத்தை இருபாலருக்கு வைத்த தமிழ்ப் பண்பாடும், பகுத்தறிவோடு பெண்ணுரிமையைப் பேசிய தந்தை பெரியாரும் தான் காரணம் என்று அதற்கான பதிலை நினைத்துக் கொண்டதாகத் தெரிவித்தார். அவருக்கு ஆசிரியர் கி.வீரமணி நினைவுப் பரிசினை வழங்கிப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்தார்,
50 ஆண்டு காலச் சிங்கப்பூர் தமிழ் இலக்கியங்களை மின் மயமாக்கும் தமிழ் மின் மரபுடைமைத் திட்டத்தின் முன்னேராகச் செயல்பட்டு வருபவரும் சிங்கப்பூர் தமிழ் பண்பாட்டு மய்யத்தின் தலைவரும், சிங்கப்பூர் லீ குவான் யூ ஸ்கூல் ஆஃப் பப்ளிக் பாலிசியின் சிறப்பு ஆராய்ச்சி ஆலோசாகரும், “ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்” நூலின் தொகுப்பாசிரியருமான அருண் மகிழ்நன் ஏற்புரை வழங்கினார். அவருக்கு மன்றத்தின் மதியுரைஞர் வீ.கலைச் செல்வம் நினைவுப் பரிசை வழங்கினார்.
உண்மை வரலாறுகள் பதிவாக வேண்டும்
திராவிட இயக்கத்தின் விழுமியங்களை ஏற்ற தங்களின் பெற்றோர் பிள்ளைகள் அனைவருக்கும் செங்குட்டுவன், மகிழ்நன், இளஞ்சேரன், முல்லை என்று பெயர் வைத்தனர் என்பதைப் பெரு மகிழ்வோடு எடுத்துக் காட்டினார். தமிழர் வரலாற்றை மிகையின்றி வெளிக் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மய்யத்தின் பணிகளைத் தொட்டுக் காட்டிய பேராசிரியர் அருண் மகிழ்நன், சிங்கப்பூர் பாறை எனப்படும் சிங்கப்பூரின் தொல் அடையாளங்களுள் ஒன்றில் இந்தோனேசியாவில் வழங்கப்படும் காவி மொழியில் எழுதப்பட்டுள்ள வரியில், கடாரம் கொண்டான் என்று போற்றப்படும் ராஜேந்திர சோழன் தன் பெயரான “ராஜ கேசரி வ” என்பது வரை இருக்கிறது; அதில் “ராஜ கேசரி வர்மன்” எனப் பொறித்திருக்கக் கூடும் என்பதையும் ஆய்வாளர்கள் டாக்டர் லைன் சின்க்லர் (Dr Iain Sinclair) கருதுவதை எடுத்துக்காட்டினார். இந்திய மரபுடைமை நிலையத்தின் ஆய்வாளராக இருந்த நளினா கோபால் அவர்கள் இப் புத்தகத்தை உருவாக்குவதில் காட்டிய ஆர்வத்தையும், அதன் காரணமாக அவரையும் தொகுப்பாசிரியராக இணைத்துக் கொள்ளத் தாம் விரும்பியதையும் தெரிவித்து, இப் புத்தகத்தின் தொகுப்புப் பணியில் ஈடுபட்ட அனைவரையும் நினைவு கூர்ந்தார்.
மலேயா சிங்கப்பூரில் பெரியாரின் தாக்கம்
தொடர்ந்து, திராவிடர் கழகத்தின் தலைவரும், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தருமான டாக்டர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். இப் புத்தகத்தின் சிறப்பினை எடுத்துக் காட்டிய அவர், “பல ஜாதியக் கட்டுப்பாடுகளும், மலாயா, சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டன. அந்தி மக் கிரியைகள், எரியூட்டுச் சடங்கின்போது பறையடித்தல், இந்து ஆலயங்களில் நுழைய அனுமதி யின்மை போன்றவற்றிலிருந்து பாகுபாடுகளை எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம்.கல்வி அறிவு பெற்றோரின் விகிதமும் அப்போது குறைவாக இருந்தது. பல தொழிலாளர்கள் எழுதப் படிக்க இயலாதவர்களாக இருந்தனர். கல்வி பெற்று அதன்மூலம் சமூகத்தில் முன்னேற அவர்களுக்கு வழியில்லாமல் இருந்தது.” அந்த இடத்தில்தான் நண்பர்களே, வியப்பாக இருக்கிறது – தந்தை பெரியார் அவர்கள், ஒவ்வொரு தோட்டத் தொழிலாளரிடமும் சென்று, ‘‘இங்கே நீங்கள் பள்ளிக்கூடங்களை வையுங்கள்; கள்ளுக்கடைகள் தேவையில்லை” என்று தெளிவாகச் சொல்லி, தோட்டத் தொழிலாளியின் மகன் தோட்டத் தொழிலாளியாக வரக்கூடாது; அவன் பெரிய படித்தவனாக, பணியாற்றக் கூடியவனாக வந்தால்தான், சமுதாய மாற்றம் ஏற்படும் என்று சொன்னார்கள். மூடநம்பிக்கையில் இருந்த ஒரு சமுதாயத்தில், அடுத்ததாக 1954 ஆம் ஆண்டு பர்மாவிற்குச் சென்றுவிட்டு, மலேயா வருகிறார் தந்தை பெரியார் அவர்கள்.அப்பொழுது அவருக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள்; வரவேற்பு கொடுத்தவர்கள் எல்லாம் இளைஞர்கள் – பட்டப் படிப்பு முடித்தவர்கள்; பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள். பெரியாரின் தாக்கம், பெரியாரின் அறிவுரை எப்படி பயன்பட்டது, எப்படி கல்வி வாய்ப்புகளை உருவாக்கியது என்பதை அற்புதமாக இந்த நூலில், கட்டுரையாளர் மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்கிறார். அதனால்தான், இந்த நூலுக்கும், இந்த ஆய்வுக்கும், பெரியார் பிறந்த நாள் விழாவிற்கும் பொருத்தம் இருக்கிறது” என்பதை எடுத்துக் காட்டி 45 நிமிடங்கள் உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்குச் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் செயலாளர் தமிழ்ச்செல்வி ராஜராஜன் இணைப்புரை வழங்கினார். நன்றியுரையை மன்றத்தின் பொருளாளர் க.பழனி வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழர் தலைவரின் உரையை சிங்கப்பூரின் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் செயலாற்றும் மிக முக்கியமான ஆளுமைகள் பங்கேற்றுச் செவிமடுத்தனர்.
பங்கேற்ேறார்
பெரியார் சமூக சேவை மன்றத்தின் மதியுரைஞர்கள் வீ.கலைச்செல்வம், பேராசிரியர் சுப. திண்ணப்பன், புதுமைத்தேனீ மா.அன்பழகன், சிங்கப்பூர் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் தமிழ் மாமணி இரா.தினகரன், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்க தலைவர் தனபால் குமார், சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவர் தொழிலதிபர் அ.முகமது பிலால், தேசிய நூலக வாரியத்தின் பொறுப்பாளர் அழகிய பாண்டியன் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன், வளர்தமிழ் இயக்கத் தலைவர் நசீர் கனி, வளர்தமிழ் இயக்கத் துணைத் தலைவர் ஜோதிமாணிக்கம், தமிழர் பேரவையின் தலைவர் வெ.பாண்டியன், தமிழ் பட்டிமன்றக் கலைக் கழகம் ரஜீத், சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் தலைவர் இரத்தின வெங்கடேசன், தாரகை இலக்கிய வட்டத் தலைவர் திருமதி மஹ்ஜபீன், மக்கள் கவிஞர் மன்றத் தலைவர் திருமதி புவனேஸ்வரி, தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளரும், செம்மொழி ஆசிரியருமான எம் இலியாஸ், புதியநிலா ஜஹாங்கீர், Tamilcube நிறுவனர் ஏ.டி.பிள்ளை, ஆசிரியர் மன்னை
இராஜகோபால், எழுமின் இயக்குநர், கவிமாலை அமைப்பின் மதியுரைஞர் கவிஞர் இறைமதியழகன், கவிஞர் க.து.மு.இக்பால், எழுத்தாளர் மணிமாலா மதியழகன், அண்ணாமலைப் பல்கலைக்கழக மேனாள் மாணவர்கள் சங்கத்தின் ஆலோசகர் மூர்த்தி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மேனாள் மாணவர்கள் முரளிகிருஷ்ணன் சின்னதுரை, செந்தில்குமார், நித்யகுமாரி, மற்றும் தோழர்கள் கலையரசு, அ.நல்லதம்பி, திராவிட இயக்கப் பற்றாளர்கள் ஆர்.ஜே.ராஜராஜன், ராம் கருப்பையா, காசி, அருள்குமரன், நாராயணன் ஆண்டியப்பன், பரதநாட்டியக் கலைஞர் வீர.தேவி, அறிவொளி, அலெக்சாண்டர், இனிய நிலா, வளவன், நா.கலியபெருமாள், க.கஸ்தூரிபாய், பெரியார் பிஞ்சுகள் ஆதவன், நிலவன், திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் சுசிலா மூர்த்தி, மலையரசி, மதியரசன், இராஜராஜன், நா.மாறன், சவுந்தர், வள்ளியப்பன், மாதவி, மனோகர், இராமன், ஆசிரியர் லீலா ராணி, சங்கர், ஜெகன் தங்கதுரை, கார்த்திக் ராமசாமி, கலைச் செல்வி, நரசிம்மன், மதியழகன், ஆரிஃப், பர்வீன் பானு உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
நூலாய்வரங்கம் முடிந்ததும், ஆசிரியரைச் சுற்றிலும் கூடி நின்று ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டனர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆடைகள், புத்தகங்கள், பூங்கொத்துகள் தந்து மகிழ்ந்தனர். அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
வார இறுதி நாள் கூட இல்லை. விடுமுறை இல்லை. சிங்கப்பூர் போன்ற பணிக்கும் தொழிலுக்கும் சரியாக நேரம் ஒதுக்க அவசியமான ஒரு நகரில், செவ்வாய்க்கிழமை வேலை நாளில் நிகழ்ச்சி; அதிலும் மிகக் குறுகிய காலத்தில் செய்யப்பட்ட ஏற்பாடு என்றாலும் அரங்கு நிரம்பிய கூட்டமாக நடந்தது. ஆனால், அப்படிச் சொல்வது மட்டும் போதாது.
கற்பனைக்கும் அப்பால்
கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறை, சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் அய்ந்தாம் தளத்தில் இருந்த பாசிபிலிட்டி அறை (Possibility Room) என்பதாகும். சாத்தியமானது என்று அதற்குப் பொருள். அதனை ஒட்டியது போல் இன்னொரு அறை. இரண்டிலும் ஒரே நேரத்தில் தனித்தனியாக நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்பு உண்டு. இரண்டையும் முழுமையாகப் பிரிப்பவை மடித்து நகர்த்த வாய்ப்புள்ள முழுமையான தடுப்புச் சுவர்கள் (Sliding room divider wall). அந்த அறைக்குப் பெயர் கற்பனை அறை (Imagination Room). வார நாள் ஒன்றில், சிங்கப்பூரில் நடைபெறும் தமிழ்ப் புத்தக ஆய்வு நிகழ்வில் 100 பேர் கூடுவது அதிகபட்ச சாத்தியமான ஒன்று. அதற்கும் மேல் என்பதெல்லாம் கொஞ்சம்
ஆசையும் கற்பனையும்தான்!
ஆனால், தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவில் சாத்தியமானதைத் தாண்டி, கூட்டம் வர வர அடுத்த அறையும் திறக்கப்பட்டது; தடுப்புச் சுவர்கள் நீக்கப்பட்டன. அந்த அறையில் இருந்த நாற்காலிகளும் நிறைந்து சுற்றிலும் நின்று கொண்டு உரைகளைக் கேட்டுப் பங்கேற்றனர். தந்தை பெரியார் சிங்கப்பூர் வருகை தந்திருந்தபோது அவருக்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய வரவேற்புப் போல, கற்பனைக்கும் அப்பால் வெற்றிகரமாக நடந்தது பெரியார் பிறந்தநாள் விழா!