பானிபட், அக். 4- ‘என்னுடைய உணர்வுகளை வைத்து விளம்பரம் செய்ய முயற்சித்தார்கள். ஆகையால் மறுத்துவிட்டேன்’ என்று பிரதமரிடமிருந்து வந்த அழைப்பை மறுத்தது குறித்து மேனாள் மல்யுத்த வீராங்கனையும், காங்கிரஸ் சார்பில் அரியானா சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடும் வினேஷ் போகத் கூறினார்.
நடைபெற்று முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து பன்னாட்டு விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் அழைப்பினை, தாம் ஏற்க மறுத்ததாக வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்திருக்கும் நேர்காணல் ஒன்றில், “பிரதமர் மோடியிடம் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் அது நேரடியாக அவரிடமிருந்து அழைப்பு வரவில்லை. இந்திய அதிகாரிகள் பிரதமர் மோடி என்னிடம் பேச விரும்புவதாகக் கூறினார்கள். நானும் தயாராக இருந்தேன். ஆனால், அவர்கள் சில நிபந்தனைகளை விதித்தார்கள், ‘பிரதமரின் உங்களோடு பேசுவதை ஒலிபரப்பில் (ஸ்பீக்கரில்) போடவேண்டும், அதை சமூகவளைதளங்களில் நேரலையில் ஒளிபரப்புவோம். அதே போல் தொலைக்காட்சிகளிலும் காண்பிப்போம்’ என்று கூறினர்.
மேலும் பிரதமர் பேசும் போது ‘காமிராவிற்குள் நீங்கள் மட்டுமே இருக்கவேண்டும்’ என்று கூறினார்கள், மேலும் ‘சரளமான ஹிந்தியில் முகத்தை உற்சாகத்துடன் வைத்துப் பேசவேண்டும்’ என்று எல்லாம் நிபந்தனைகளை கூறினர். இதை எல்லாம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து கூறியதாகவும் கூறினர். உண்மையில் மோடிக்கு விளையாட்டு வீரர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், உரையாடலை பதிவு செய்யாமல் அழைக்கலாம். நானும் நன்றியுள்ளவளாக இருந்திருப்பேன்”
“நான் எனது கடின உழைப்பையும் உணர்ச்சிகளையும் சமூக வலைதளங்களில் கிண்டல்களுக்கு உள்ளாக்க விரும்பவில்லை. பிரதமர் மோடி நிஜமான அக்கறையுடன் அழைத்திருந்தால் நான் நிச்சயமாகப் பேசியிருப்பேன்.
அவருக்கு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மீது உண்மையான அக்கறை இருந்தால் காட்சிப் பதிவு செய்யாமலேயே அழைத்திருப்பார். ஒருவேளை அவர் பேசுவதாக இருந்தால் நானும் எனது சக வீராங்கனைகளும் கடந்த 2 ஆண்டுகளாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் மேனாள் மல்யுத்த சம்மேள தலைவரும் பாலியல் குற்றசாட்டிற்கு ஆளானவருமான பிரிஜ்பூசன் சிங் குறித்து கேட்பேன் என அவருக்குத் தெரிந்திருக்கும். அப்படியும் நான் பேசினாலும்அவர்கள் அவர்களுக்கேற்றபடி மாற்றம் செய்யக்கூடும். அந்த இடத்தில் நான் காட்சிபதிவு எடுத்தால், அந்த முழு காட்சிப் பதிவை நான் சமூக வலைதளத்தில் பதிவிட்டுவிடுவேன் என நினைத்து, எனது அறைக்குள் வேறுயாருமே இருக்கக் கூடாது, அவர்கள் பிரதமரோடு பேசுவதை காட்சிப்பதிவு எடுக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதித்தனர். இதன் மூலமே எனது உணர்வுகளை வைத்து விளம்பரப் படுத்த மோடி முயன்றார் என்பதை நான் புரிந்து கொண்டதாலேயே அவர்கள் என்னைப் பேச அனுமதிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.