ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்குக் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை
காவல் ஆய்வாளா் உள்பட 5 காவலா்கள் இடைநீக்கம்!
புவனேஷ்வர், செப்.21 ஒடிசா மாநிலம் பாரத்பூா் காவல் நிலையத்தில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனை வியை காவல்துறையினர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக அந்தக் காவல் நிலைய ஆய்வாளா் தினகிருஷ்ண மிஸ்ரா உள்பட 5 காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, பணி இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளனா்.
வழக்குரைஞராக இருக்கும் அந்த பெண், பாரத்பூா் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். அவருடைய உணவ கத்தில் இளைஞா்கள் சிலா் தகராறு செய்தது தொடா்பாக தனது வருங்கால கணவரான ராணுவ அதிகாரியுடன் காவல் நிலையத்தில் கடந்த 18.9.2024 அன்று புகார் அளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, காவல்துறையினரைத் தாக்கியதாக ராணுவ அதிகாரியை காவல் நிலையத்தில் உள்ள லாக்-அப்பில் அடைத்ததோடு, வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்தப் பெண்ணையும் கைது செய்தனா். பின்னா், அந்தப் பெண்ணை அங்கிருந்த பெண் காவலா்கள் தாக்கிய தோடு, காவல் ஆய்வாளா் உள்ளிட்ட மற்ற காவலா்கள் பாலியல் தொல்லை அளித்துள்ளனா். கடந்த 19.9.2024 அன்று பிணையில் விடுவிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் மாநிலத்தில் பெரும் சா்ச்சையாகியுள்ளது. ஆளும் பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமா்சனத்தை முன்வைத்துள்ளன. இந்த நிகழ்விற்குக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்த மாநில மேனாள் முதலமைச்சரும், பிஜு ஜனதா தளத்தின் தலைவருமான நவீன் பட்நாயக், ‘பெண்ணுக்கு காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை அளித்த விவகாரம் தொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றார்.
‘மாநிலத்தில் பாஜக தலிபான் அரசை நடத்தி வருகிறது’ என்று மாநில காங்கிரஸ் தலைவா்கள் சோனாலி சாஹு, மைஷா தாஸ் ஆகியோர் விமா்சித்தனா்.
இந்த நிலையில், பெண் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பாரத்பூா் காவல் நிலைய ஆய்வாளா் தினகிருஷ்ண மிஸ்ரா, உதவி ஆய்வாளா்கள் பைசாலினி பாண்டே, சலீலாமயீ சாஹு, சகாரிகா ராத், காவலா் பலராம் ஹன்ஸ்டா ஆகியோர் மீது மாநில குற்றப் பிரிவு காவல்துறையினர் தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, பணி இடைநீக்கமும் செய்யப்பட்டனா்.
இந்த விவகாரம் தொடா்பாக மாநில மகளிர் ஆணையம் தானாக முன்வந்து ேநற்று (20.9.2024) விசாரணையைத் தொடங்கியது.
மகளிர் ஆணையத் தலைவா் மினாத்தி பெஹெரா பாரத்பூா் காவல் நிலையத்துக்கு நேற்று (20.9.2024) சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘இந்த விவகாரம் தொடா்பாக விசாரணையை மேற்கொண்டு வரும் மாநில குற்றப் பிரிவு காவல்துறையினர், காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டனா். எனவே, வழக்கு தொடா்பாக எஞ்சியிருந்த ஆவணங்கள் மற்றும் தகவல்களை சேகரித்துள்ளோம். மேலும், குற்றப் பிரிவு காவல் அலுவலகத்துக்கும் சென்று தேவையான ஆவணங்களை சேகரிக்க உள்ளோம். அதன் பிறகு, விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். பின்னா் தேவையான பரிந்துரைகளுடன் விசாரணை அறிக்கை அரசிடம் அளிக்கப்படும்’ என்றார்.
அதுபோல, தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான அறிக்கையை அளிக்குமாறு மாநில காவல் துறைத் தலைவரை (டிஜிபி) ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.