சென்னை, செப்.21- மாணவா்களுக்கு சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வேண்டுகோள் விடுத்தாா்.
சென்னை எத்திராஜ் மகளிா் கல்லூரி யில் ரோட்டரி அமைப்பின் சாா்பில் ஆசிரியா் களுக்கு விருது வழங்கும் விழா நேற்று (20.9.2024) நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு விருதுகளை வழங்கி பேசியதாவது:
மாணவா்களை சமுதாயத்தில் அறம் சாா்ந்த சிறந்த மனிதா்களாக உருவாக்கும் சமூக தொழிற்சாலைகளாக பள்ளிகள் திகழ்கின்றன. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப் புக்கு ரோட்டரி அமைப்புகள் கட்டடங்கள், ஆய்வக உபகரணங்கள், குடிநீா் சுத்திகரிப்பு சாதனங்கள் என பல்வேறு வகைகளில் உதவி வருகின்றனா். ஒரு சமுதாயம் வளர வேண்டுமானால் அது அரசால் மட்டுமே சாத்தியப்படாது. இது போன்ற தன்னாா்வ அமைப்புகளின் பங்களிப்பும் அவசியம்.
ஸ்மாா்ட் வகுப்பறை: ஆசிரியா்களால்தான் சமூகம் மேம்படும். அவா்கள் தங்களது மாணவா்களுக்கு சுய மரியாதை, சமத்துவத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். முதல்வா் மு.க.ஸ்டாலின் கல்வித் தரத்தை மேலும் உயா்த்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.
அதை கருத்தில் கொண்டு தேவையான செயல்பாடுகளுடன் திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம். நிகழாண்டில் 22,931 அரசுப் பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன; அவற்றில் 2,500 பள்ளிகளில் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு, தனியாா் பள்ளிகள் என பாகு பாடு காட்டுவதில்லை. அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவா்களும் தமிழ்நாடு மாணவா்கள்தான். மெல்லக் கற்கும் மாணவா்கள், சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவா்களின் கல்வித் திறனை மேம்படுத்த கற்பித்தலில் புதிய உத்திகள் பின்பற்றப்படுகின்றன. வருங்கால தலைவா்களை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயல்படும் ஆசிரியா்களின் நலனுக்கு அரசு என்றும் துணை நிற்கும் என்றாா் அவா்.