மும்பை, செப்.13 பங்குச் சந்தையில் உள்ள தனியார் நிறுவனங்களிடம் இருந்து செபி தலைவர் மாதபி புச் வைத்திருக்கும் தனியார் ஆலோசனை நிறுவனம் பணம் பெற்றுள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் புதிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
சிங்கப்பூரை தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் அகோரா ஆலோசனை நிறுவனத்தில் செபி தலைவர் மாதபி புச், 99% பங்குகளை வைத்திருப்பதாகவும் இந்த நிறுவனம் செபி கட்டுப்பாட்டில் உள்ள மகிந்திரா, அய்சிஅய்சிஅய் வங்கி, டாக்டர் ரெட்டிஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம் பணம் பெற்றுள்ளதாகவும் ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டி உள்ளது.
தன் மீதான குற்றச்சாட் டுகளுக்கு பதில் அளிக்காமல் மாதபி பூச் பல வாரங்களாக அமைதியாக உள்ளார் என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனம் விமர்சித்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் கட்சியும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தது. பங்குச் சந்தையில் உள்ள மகிந்திரா, பிடிலைட், டாக்டர் ரெட்டீஸ் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து மாதபி புச்சின் அகோரா ஆலோசனை நிறுவனம் பணம் பெற்றதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன்கேரா குற்றம் சாட்டினார். 2016-2017, 2023-2024 காலகட்டங்களில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மாதபி புச்சின் அகோரா நிறுவனம், 2 கோடியே 95 லட்சம் ரூபாய் நிதி பெற்றதாகவும் குறிப்பாக மகிந்திரா நிறுவனத்திடம் இருந்து மட்டும் 88% பணம் பெற்றதாகவும் அவர் குறிப் பிட்டார்.
விசாரணை அமைப் புகள் மூலமாக மாதபி புச் மீதான புகார் குறித்து மோடி ஏன் விசாரணை நடத்த வில்லை என்றும் பவன் கேரா கேள்வி எழுப்பினார்.