திருப்பூர், செப்.11 திருப்பூரில் நடந்த பிள்ளையார் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயம்; 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகரில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று (10.9.2024) ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. குறிப்பாக திருப்பூர் புதிய பேருந்து நிலை யம் பகுதியில் இருந்து இந்த சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன.
இந்த நிலையில் ஊர்வலம் எம்.எஸ். நகர் 60 ரோடு பகுதிக்கு வந்த பொழுது போதையில் ஆடிக்கொண்டு இருந்த சிலர் தங்களுக்கு முன்பாக வேறு ஒரு பிள்ளையார் சிலை வாகனம் போவதைக் கண்டனர். உடனே எங்களுக்கு முன்பாக நீ எப்படிச் செல்லலாம் என்று கூறி, இந்து முன்னணியினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தினர். மது போதையில் இந்தத் தகராறு நடந்ததாகக் கூறப்படுகிறது. தங்களது பகுதியைச் சேர்ந்த விநாயகர் தான் முன் செல்ல வேண்டும் என்பதற்காக இந்தத் தகராறு நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் சத்தியமூர்த்தி என்பவர் படுகாயமடைந்தார். இது தொடர்பாக நவீன்குமார், வெங்கடேஷ், தேவா, சிறீதர், பாலாஜி ஆகிய 5 பேர் மீது வீரபாண்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும், 5 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.