சென்னை, ஆக.20- கனிமங்கள் மீது வரி விதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக, தமிழ்நாடு அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.
‘ராயல்டி’ தொகை
கனிமங்கள் மற்றும் கனிமங்கள் கொண்ட நிலங்களுக்கு ஒன்றிய அரசு கனிமங்களுக்கு ஏற்றபடி ‘ராயல்டி’ தொகை நிர்ணயம் செய்துள்ளது. இந்த ராயல்டி தொகையை, கனிமங்களை வெட்டி எடுக்கும் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு செலுத்துகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு, அந்த ராயல்டி தொகைக்கு மேல் செஸ் வரி ஒன்றை விதித்தது. அதனை எதிர்த்து தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் கடந்த 1989ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அப்போது 1957ஆம் ஆண்டு சுரங்கங்கள், கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் படி கனிமங்கள் மீது வரி விதிப்பதில் ஒன்றிய அரசுக்கே முதன்மையான அதிகாரம் இருக்கிறது. ‘ராயல்டி ஒரு வரி தான், ராயல்டி மீது புதிதாக எந்தவொரு வரியும் விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை’ என்று கூறியது.
எழுத்துப் பிழை
உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும், இந்த விவகாரம் முற்றுப் பெறவில்லை. இந்த நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு மேற்கு வங்க அரசுக்கும், தனியார் கனிம நிறுவனத்திற்கும் நடந்த ஒரு வழக்கில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், கடந்த 1989ஆம் ஆண்டின் தனது முந்தைய தீர்ப்பில் எழுத்துப் பிழை இருக்கிறது. ‘ராயல்டி என்பது வரி அல்ல. அது, குத்தகைத்தாரருக்கும். குத்தகை எடுத்தவர்களுக்கும் உள்ள ஒரு புரிந்துணர்வு’ என்றது.
இதனால் இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சைக்குள்ளானது. எனவே, இது தொடர்பாக 60க்கும் மேற்பட்ட பல வழக்கு கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அவை அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு தலைமை நீதிபதி தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. பல ஆண்டுகள் நீடித்த வந்த வழக்கிற்கு கடந்த 25ஆம் தேதி தீர்ப்பு வந்தது.
12 தவணைகள்
அதில் தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பையும், நாகரத்னா என்ற ஒரு நீதிபதி மட்டும் மாறு பட்ட தீர்ப்பை வழங்கினார். இருப்பினும் மெஜாரிட்டியாக 8 பேர் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர்கள் ‘ராயல்டி ஒரு வரி அல்ல. மாநில அரசுக்கு கனி மங்கள் மீது வரி விதிக்க முழு அதிகாரம் உள்ளது’ என்று தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்புக்கு பின்னர். மீண்டும் ஒரு கேள்வி பிறந்தது. அதாவது, இந்த வரியை முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சில மாநிலங்கள் கோரின. அதற்கும் உச்சநீதிமன்றம் கடந்த 14ஆம் தேதி விரிவான தீர்ப்பு ஒன்றை கூறியது.
அதாவது 2005ஆம் ஆண்டு முதல் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரித்தொகையை முன் தேதியிட்டு மாநிலங்கள் வசூல் செய்து கொள்ளலாம். இந்த தொகைக்கு அபராதம் எதுவும் விதிக்ககூடாது.
மேலும் இந்ததொகையை ஒரே தொகையாக வசூலிக்காமல் 2026ஆம் ஆண்டு முதல் 12 தவணைகளாக வசூலித்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பு சொன்னது.
ஒடிசா மாநிலம்
இந்த தீர்ப்பு வழங்குவதற்கு முன்பாக, வழக்கில் வாதாடிய ஒன்றிய அரசு, இந்த வரியினை முன் தேதியிட்டு வழங்க அனு மதித்தால் ரூ.2 லட்சம் கோடி வரை நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும். கனிம தொழிலில் மிகப் பெரிய முடக்கம் ஏற்படும் என்று கூறியது. ஆனால் அதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வில்லை.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால், கனிம வளம் கொண்ட ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், ராஜஸ்தான், கருநாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அதிகளவில் பலன் அடைய வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக கனிம ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள ஒடிசா மாநிலத்திற்கு மட்டும் நிலுவைத் தொகை ரூ- 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரை கிடைக்கும் என்றும், மேலும் இனி வரும் நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் கனிமவரி மூலம் ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
மற்ற மாநிலங்களுக்கு நிலு வைத்தொகை சொற்ப அளவில் இருந்தாலும், அந்த மாநிலங்கள் இனி விதிக்க போகும் வரியால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு எவ்வளவு?
தமிழ்நாட்டிற்கு இந்த வரி மூலம் எவ்வளவு தொகை வரும் என்று கனிம வளத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு 12 தவணைகளில் இந்த வருமானம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் முழுமையாக கணக்கெடுப்பு முடிந்தால் தான் எவ்வளவு தொகை என்று தெரிய வரும்.
மேலும் இனி வரும் நாட்களில் கனிமங்களுக்கு கூடுதலாக விதிக்கப்படும் வரியின் மூலம் வருமானம் கணிசமான அளவில் தமிழ்நாடு அரசுக்கு வருமானம் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கிராபைட், சுண்ணாம்புக்கல், மேகனசைட், மார்ல், வெர்மிகு லைட் ஆகிய கனிமங்கள் அதிகளவில் கிடைக்கின்றன. அதேபோல் ஒவ்வொருமாநிலங்களிலும் பல்வேறு விதமான கனிமங்கள் கிடைக்கின்றன.