சென்னை, ஆக.17 அமெரிக்காவில் இருந்தாலும் கட்சியையும் அரசையும் கவனித்துக் கொண்டி ருப்பேன் என தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சித் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று (16.8.2024) காலை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. கட்சியின் அறிவுறுத்தலின்படி, கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ரூ.100 மதிப்பிலான கலைஞரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட முன்வந்த ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்தும், தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் பாகுபாடு காட்டும் ஒன்றிய அரசைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
‘நாடாளுமன்றத் தேர்தலில் 40 க்கு 40 வெற்றிக்கு உழைத்த நிர்வாகிகள், வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து 10 தேர்தல்களில்
வெற்றி பெற்றுள்ளோம். சுணக்கமின்றி செயல்பட்டால் அடுத்த முறையும் தி.மு.க. ஆட்சிதான்.
200 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கு அவ்வளவு நலத்திட்டங்களை மக்களுக்கு அளித்திருக்கிறோம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்டச் செயலாளர்கள் கவ னத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் இருந்தாலும் கட்சியையும் அரசையும் கவனித்துக் கொண்டி ருப்பேன்.
ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. நிர்வாகிகள் குறித்தும் புகார்கள் உள்ளன. அனைத்து புகார்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும். கவுன்சிலர்கள் யாராவது தவறு செய்தால் அவர்கள் மீது பதவிப்பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைளை உடனடியாக எடுக்க வேண்டும்
சார்பு அணிகளை மாவட்டச் செயலாளர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அனைத்து வாக்குச் சாவடி குழுக்களையும் செம்மைப்படுத்த வேண்டும். கழகத்தின் அனைத்து அமைப்புகளிலும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு முன்பாக பொது உறுப்பினர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மினிட் புத்தகத்தை தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
உங்கள் உழைப்பின் அடிப்ப டையிலேயே உயர்வு இருக்கும். அரவணைத்துச் செல்பவரே மாவட்டச் செயலாளர். வெற்றி பெறுபவரே வேட்பாளர்.அமைச்சர்களும் கழகத்தின் அடிமட்டத் தொண்டர்களுக்கு உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும். கலைஞர் 100 நாணயம் வெளியீட்டில் கலந்து கொள்ள வேண்டும்.
தி.மு. கழகத்தை அடுத்த தலை முறைக்கு கொண்டு சேர்க்க அர்ப்பணிப்போடு செயல் படுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.