இராமேஸ்வரம், ஆக.13- இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது கற்களை வீசி, இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். பாம்பனில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் 11.8.2024 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதனால் பாம்பன் துறைமுகத்தில் 500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசுக்கு ஒன்றிய அரசு அழுத்தம் தரவேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.