தமிழ்நாடு விவசாயிகளுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி அறிவிப்பு
சென்னை, ஆக. 3- தமிழ்நாட்டில் உள்ள நெல் விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு வரும் செப். 1ஆம் தேதி முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிவித்துள்ளார். இனி சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2450, பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2405 வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக நெல்லை கொள்முதல் செய்து வருகிறது. கடந்த காரிப் பருவத்தில் மட்டும் சுமார் 33 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே நெல் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக வரும் செப். 1ஆம் தேதி முதல் நெல் கொள்முதலுக்கான விலை உயர்த்தப்படுவதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2002-2003 காரிப் பருவம் முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முகவராகச் செயல்பட்டு ஒவ்வொரு பருவத்திலும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. நெல் விவசாயிகள் நலன் கருதி முதலமைச்சர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி அனுமதி பெற்றுத்தந்ததால் 2022-2023 காரிப் பருவத்திலிருந்து செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
2023 –20 24 காரிப் பருவத்தில் 31.07.2024 வரை 3200 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3,85,943 விவசாயிகளிடமிருந்து 33,24,166 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 7,277.77 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது
2024-2025 காரிப் பருவத்திற்கு சன்னரக நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலையான ரூ.2320/- உடன் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ. 130/- சேர்த்து சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2450/- என்ற விலையிலும் பொதுரக நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 2300/- உடன் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ. 105/- சேர்த்து பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2405/- என்ற விலையிலும் நெல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் விவசாயிகளுக்குத் தேவைப்படும் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படும். ஆதலால், விவசாயிகள் 01.09.2024 முதல் புதிய கொள்முதல் விலையில் தங்களது நெல்லினை அரசு சார்பில் நடத்தப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. மேனாள் அமைச்சர்களுக்கு அழைப்பாணை
செப்.9இல் ஆஜராக உத்தரவு!
சென்னை, ஆக. 3- குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. மேனாள் அமைச்சர்கள் சி.விஜய பாஸ்கர், பி.வி ரமணா, மேனாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், காவல்துறை மேனாள் ஆணையர் ஜார்ஜ், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 27 பேர் செப்டம்பர் 9ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்பட்ட தான புகாரில் டில்லி சிபிஅய் காவல்துறை 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து, வழக்கை விசாரித்து வருகிறது. இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்த சிபிஅய், இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஅய் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரி கையை தாக்கல் செய்தது.
இந்நிலையில், மேனாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, சென்னை மேனாள் காவல் ஆணையர் உள்ளிட்ட 21 மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஅய் கடந்த மே மாதம் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு சி.பி.அய். நீதிமன்றத்தில் இருந்து சென்னையில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் அண்மையில் மாற்றம் செய்யப்பட்டது.
இதையடுத்து எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய் பாபா அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த 5 பேர் ஆஜராகி இருந்தார்கள். இதை யடுத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேனாள் அமைச்சர்கள் சி.விஜய பாஸ்கர், பி.வி.ரமணா, மேனாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், மேனாள் காவல் ஆணையர் ஜார்ஜ், ஒன்றிய, மாநில அதிகாரிகள் என 27 பேரும் செப்டம்பர் 9ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணை அனுப்பி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.