தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப் 2-வில் 507 பணியிடங்களும் மற்றும் குரூப் 2ஏ-வின் மூலம் 1,820 பணியிடங்களும் என மொத்தம் 2,327 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்தது. இதற்கு 20.06.2024 முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. முதல்நிலை (பிரிமிலினரி) தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி 19.7.2024. அதன்படி பவ்வேறு துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை டிகிரி முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.
இந்த முறை டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு முறையே அடியோடு மாறி உள்ளது.2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வு முறை போல் இல்லாமல், இந்தாண்டு தேர்வின் பாடத்திட்டங்கள், வயது வரம்பு மற்றும் நேர்காணல் ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது தமிழ்நாடு அரசு.
குருப் 2 தேர்வில் உதவி ஆய்வாளர்,துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், வனவர், உதவிப் பிரிவு அலுவலர் மற்றும் நிரலர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
குரூப் 2A தேர்வின் மூலம் நகராட்சி ஆணையர், முழுநேர விடுதிக் காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர், செயல் அலுவலர், டவுன் பஞ்சாயத்து துறை நிர்வாக அதிகாரி, இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், நேர்முக எழுத்தர், கணக்கர், இளநிலை கணக்கர், கண்காணிப்பாளர், விரிவாக அலுவலர், கீழ்நிலை செயலிட எழுத்தர் போன்ற பதவிகள் நிரப்பப்பட உள்ளது
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு முதல்நிலை மற்றும் முதன்மை என இரண்டு கட்டமாக நடத்தப் போகும் டிஎன்பிஎஸ்சி, முதல்நிலை தேர்வினை கொள்குறி வகையில் (Objective Type) நடத்த போகிறது. அதனைத்தொடர்ந்து, தேர்ச்சி அடைப்பவர்களுக்கு முதன்மை தேர்வு குரூப் 2 மற்றும் 2ஏ-விற்கு தனித்தனியாக நடத்த போகிறது. இதற்கான புதிய பாடத்திட்டத்தையும் டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு வெளியிடும் போதே வெளியிட்டது.
குரூப் 2 தேர்வினை பொறுத்தவரை தமிழ்மொழி தகுதித் தாள் மற்றும் பொது அறிவுத் தாள் என இரண்டு தாள்களுடன் முதன்மை தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழ் மொழி தாள் பத்தாம் வகுப்பு தரத்திலும், பொது அறிவு தாள் பட்டப்படிப்பு தரத்திலும் நடத்தப்பட உள்ளது.
குரூப் 2ஏ தேர்வினை பொறுத்தவரை முதன்மை தேர்வு தமிழ் மொழி தகுதி தாள் மற்றும் பொது அறிவு, பொது நுண்ணறிவும் பகுத்தறிதலும், மொழிப்பாடம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும். தமிழ் மொழி தகுதி தாள் பத்தாம் வகுப்பு தரத்தில் நடத்தப்பட உள்ளது. இரண்டாம் தாள், பொது அறிவு தாள் 50 % டிகிரி தரத்திலும், 20% பத்தாம் வகுப்பு தரத்திலும், மொழி பிரிவு 30% பத்தாம் வகுப்பு தரத்திலும் (Objective)முறையில் நடத்தப்படும்.
குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய இரண்டு முதன்மை தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும். இப்பணியிடங்களுக்கு நேர்காணல் கிடையாது. எஸ்சி/எஸ்டி/பிசி/எம்பிசி ஆகிய பிரிவினருக்கு அதிகப்பட்ச வயது வரம்பு இல்லை. எனினும் இந்தாண்டு குரூப் 2 -வில் துணை வணிகவரி அலுவலர் பதவிக்கு அதிகபட்சமாக வயதாக 37 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வனவர் பதவிக்கு அதிகபட்ச வயதாக 37 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற போகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வர்கள் நேர்காணல் எதுவும் இன்றி இந்த முறை உதவி ஆய்வாளர்,துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைச் சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் துறையில் நன்னடத்தை அலுவலர், பத்திரப்பதிவு துறையில் சார் பதிவாளர், புலனாய்வுப் பிரிவு & காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் பிரிவு ஆகியவற்றில் சிறப்பு கிளை உதவியாளர், விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையில் சிறப்பு உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், வனவர், உதவிப் பிரிவு அலுவலர் போன்ற பணியிடங்களில் சேரமுடியும்.
அதேபோல் டிஎஸ்பிஎஸ் குரூப் 2ஏ தேர்வர்கள் நேர்காணல் எதுவுமின்றி நகராட்சி நிர்வாகத் துறையில் நகராட்சி ஆணையர் தரம்-II, தலைமை செயலகத்தில் பல்வேறு பிரிவுகளில் உதவி பிரிவு அலுவலர், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் வார்டன், இந்து சமய மற்றும் அறநிலையத்துறை நிர்வாகத் துறையின் தணிக்கை பிரிவில் தணிக்கை ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்கள் துறை துறையில் கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர், உள்ளூர் நிதி தணிக்கை துறையில் தணிக்கை ஆய்வாளர், வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத் துறையில் மேற்பார்வையாளர் / இளநிலை கண் காணிப்பாளர்.
வருவாய் துறையில் வருவாய் உதவியாளர், டவுன் பஞ்சாயத்து துறை நிர்வாக அதிகாரி, தலைமை செயலகத்தில்
ஸ்டெனோ-டைப்பிஸ்ட் , தலைமை செயலகத்தில் எழுத்தர், தமிழ்நாடு மாநில திட்டக்குழு கீழ் பிரிவில் திட்டமிடல் இளைய உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் நேர்காணல் இல்லாமல் அமர முடியும். தேர்வில் வென்றால் எந்த குறுக்கீடும் இல்லாமல், யாருக்கும் லஞ்சம் கொடுக்காமல் மதிப்பெண் அடிப்படையில் எளிதாக பதவிக்கு வர முடியும். எனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வர்கள் அதிகாரிகளாக வர இந்த முறை முழு மனதுடன் உழைத்தால் வெற்றி பெறலாம்.