மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 5 அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட இரண்டு கோவில்களை அகற்றக் கோரிய மனு மீது எட்டு வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகுமார் என்பவர் தாக்கல் செய்த மனு:சின்னகாஞ்சிபுரத்தில் ரேணுகா பரமேஸ்வரி விநாயகர் கோவில், துர்க்கை அம்மன் கோவில் உள்ளன.
கோட்றாம்பாளையம், முல்லாபாளையம் ஆகிய இரு தெருக்களும் பிரதானம். இந்த தெருக்களை ஒட்டியே, தற்போது வசித்து வரும் நாகலாத்து தெரு உள்ளது.கோட்றாம்பாளையம், முல்லாபாளையம் ஆகிய இரண்டு தெருக்களை ஆக்கிரமித்து, இரண்டு கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு செய்த இடம் அரசுக்கு சொந்தமானது. அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட இந்த கோவில்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக, அப்பகுதியில் அமைந்துள்ள பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அவசர தேவைக்காக, ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. பொது சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட இக்கோவில்களால், அவ்வழியே இறந்தவர்களை எடுத்து செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இரு கோவில்களையும் அகற்றக்கோரி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு, கடந்தாண்டு செப்டம்பரில் மனு அளித்துள்ளேன்.இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் எஸ்.வீரராகவன் ஆஜரானார். அப்போது, மனுதாரரின் மனுவை பரிசீலித்து எட்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
மதுரை, கோவையில் மெட்ரோ ரயில்
ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு
மதுரை, ஜூலை 5- சென்னையைத் தொடர்ந்து மதுரை மற்றும் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் ஓட்டம் தொடங்கப்பட உள்ளது. மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையில் சுமார் 32 கிலோமீட்டர் தொலைவிற்கு 11ஆயிரத்து 368 கோடி ரூபாயிலும், கோவையில் உக்கடம் முதல் கோவை விமான நிலையம் வரை 20.04 கிலோ மீட்டர் தொலைவிற்கும், கோயம்புத்தூர் ஜங்ஷன் முதல் வலியம்பாளையம் பிரிவு வரை 14.4 கிலோ மீட்டர் தொலைவுக்கு என இரண்டு வழித்தடங்களில் சுமார் 38 கிலோ மீட்டர் தொலைவிற்கு 10 ஆயிரத்து 740 கோடி ரூபாயில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை ஆய்வு செய்ய பன்னாட்டு ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் சென்னை வருகை தந்துள்ளனர்.
முதலில் மதுரையில் மெட்ரோ ரயில் நிலையங்கள், வழித்தடங்கள் அமையும் இடங்களையும், அடுத்து கோவையில் அமைய உள்ள மெட்ரோ வழித்தடத்தையும் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.
வங்கி பிரதிநிதிகளின் நேரடி ஆய்வுக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலாளரை சந்தித்தும் ஆலோசனையும் மேற்கொள்ள உள்ளனர்.
விரைவில் அனைத்து ஒப்புதல்களும் பெறப்பட்டு மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ ரயில் நிறுவனம் அரசிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், விரைவில் தமிழ்நாடு அரசு மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கும்.
அதன் பிறகு ஒன்றிய அரசும் இத்திட்டத்தை தொடங்க ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்ட கட்டுமானப் பணிகளுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டு சென்னை மெட்ரோ நிறுவனம் மூலம் முறையாக ஒப்பந்தப் புள்ளி அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.