புதுடில்லி, ஜூன் 29- மருத்துவப் படிப்புகளுக்காக கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல்வேறு முறை கேடுகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
சி.பி.அய்.விசாரணை
இந்த மோசடி தொடர்பாக சி.பி.அய். விசாரணை நடந்து வருகிறது. இதில் பல மாநிலங்களில் கைது நட வடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இதன் மூலம் விசாரணை சூடுபிடித்து வருகிறது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கும் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் மிகவும் தீவிரமாக எடுத்துள்ளன. இது தொடர்பாக போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன.
ஒத்திவைப்பு தீர்மானம்
இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்சினையை கிளப்பி அரசுக்கு பெரும் எதிர்ப்பை காட்டியுள்ளன. குறிப்பாக மக்களவையில் இது தொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான அறிவிக்கையை காங்கிரஸ் வழங்கி இருந்தது.
அதன்படி, நேற்று (28.6.2024) காலையில் மக்களவை கூடியதும் நீட் முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக தாங்கள் வழங்கி இருக்கும் ஒத்திவைப்பு தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் மக்களவை தலைவரை வலியுறுத்தின.
இதை ஏற்க மறுத்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மேனாள் மக்களவைத் தலைவர் மனோகர் ஜோஷி உள்பட மறைந்த 13 மேனாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் செலுத்தும் தீர்மானத்தை வாசித்தார்.
ராகுல் காந்தி வேண்டுகோள்
பின்னர் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நீட் முறைகேடு விவகாரம் மிகவும் முக்கியமானது என்பதால் வேறு எந்த அலுவல்களையும் எடுப்பதற்கு முன்பு, இது குறித்து விவாதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த பிரச்சினையில் அரசும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக இருப்பதை நாடாளுமன்றம் மூலம் மாணவர்களுக்கு தெரி விப்போம் என அவர் கூறினார்.
ஆனால், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முதலில் எடுப்பதாக கூறிய ஓம் பிர்லா, அதில் உங்கள் பிரச்சினைகளை எழுப்பிக்கொள்ளுங்கள், அப்போது போதிய நேரம் வழங்கப்படும் என கூறினார்.
இதே கருத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் கூறினார். அத்துடன் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை அவர் தாக்கல் செய்தார்.
எதிர்க்கட்சிகள் அமளி
இதை ஏற்க மறுத்த எதிர்க் கட்சிகள், நீட் முறைகேடு குறித்து முதலில் விவாதிக்குமாறு முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது.
எனவே, அவையை நண்பகல் 12 மணி வரை மக்களவைத் தலைவர் ஒத்திவைத்தார்.
பின்னர் மீண்டும் அவை கூடியபோதும் இதே நிலை தான் நீடித்தது. எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்தன. நீட் முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என முழக்கமிட்டவாறே இருந்தனர்.
அவர்களை சமாதானப் படுத்த மக்களவைத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ஆகியோர் மேற் கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
1ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்களின் அமளி தொடர்ந்ததால் மக்களவைத் தலைவர் பிர்லா பெரும் ஏமாற்றத்தை வெளியிட்டார்.
அவர் கூறுகையில், ‘சாலையில் போராடுவதற்கும், நாடாளுமன்றத்தில் போராடுவ தற்கும் வேறுபாடு உண்டு. நீங்கள் அவையை நடத்த விரும்ப வில்லையா? நீட் விவகாரத்தை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் விவாதிக்க விரும்பவில்லையா?’ என கேள்வி எழுப்பினார்.
ஆனாலும் அமளி தொடரவே அவையை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மாநிலங்களவையிலும் எதிரொலி
இதைப்போல மாநிலங்கள வையிலும் இந்த பிரச்சினை வலுவாக எதிரொலித்தது.
அங்கேயும் நீட் முறைகேடு குறித்து விவாதிக்க 22 ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீசுகளை எதிர்க்கட்சிகள் வழங்கி இருந்தன. ஆனால் அவற்றை அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் நிராகரித்தார்.
மாறாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடத்த அறிவுறுத்தினார். தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க அரசு உறுதிபூண்டிருப்பதாக குடியரசுத் தலைவரே தனது உரையில் கூறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவையின் மய்யப்பகுதியில் முழக்கம்
மேலும் நீட் முறைகேடு குறித்து விவாதம் கோரிய எதிர்க் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் கோரிக்கையை நிராகரித்த அவர், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தைதொடங்குமாறு பா.ஜனதா உறுப்பினர் சுதான்சு திரிவேதியை அழைத்தார்.
அதன்படி அவர் உரையை தொடங்கியவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மய்யப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர். அவர்களை தங்கள் இருக்கைக்கு செல்லுமாறு அவைத்தலைவர் அறிவுறுத்தினார்.
ஆனால் அவரது கோரிக்கைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செவிசாய்க்காத தால், அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் கூடிய போதும் அமளி நீடித்தது.
கார்கேயின் செயலால் வருத்தம்
அப்போது எதிர்க்கட்சி தலை வர் மல்லிகார்ஜூன கார்கேயும் பிற உறுப்பினர்களுடன் அவையின் மய்யப்பகுதிக்கு சென்று குரல் எழுப்பினார்.
இதற்கு அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கடும் அதிருப்தி வெளியிட்டார். எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு போராடுவது வரலாற்றில் முதல் முறை என அவர் வருத்தம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறும். போது, ‘எதிர்க்கட்சி தலைவரே அவையின் மய்யப்பகுதிக்கு செல்லும் அளவுக்கு இந்திய நாடாளுமன்ற பாரம்பரியம் தாழ்ந்து போவது எனக்கு வேதனையும், ஆச்சரியமும் அளிக்கிறது’ என கூறினார்.
பின்னர் அவையை பிற்பகல் 2 மணி வரை அவர் ஒத்தி வைத்தார்.
மீண்டும் அவை கூடிய போதும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் நீடித்தது. அதற்கு மத்தியிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவா தம் நடந்தது. தொடர்ந்து மாலை சுமார் 6 மணி அளவில் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப் பட்டது.
முதல் கூட்டத்தொடர்
பிரதமர் மோடி தலை மையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொ டர் கடந்த 24ஆம் தேதி தொடங்கியிருந்தது.
நீட் முறைகேடு விவகாரத் தால் முதல் தொடரிலேயே இரு அவைகளும் முடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.